Wednesday 18 February 2015

நான் ஏன் மதம் மாறினேன்…? 3

சில வேண்டுகோள்கள்:
என் வயது தெரிந்துவிட்டதால் என் வயதுக்கு மட்டுமாவது மரியாதையைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உங்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டேன் போலும். வலைஞர்களுக்குள் வயதென்ன வயது? என் அப்பா சொல்வதுபோல் கழுதைக்குக் கூடத்தான் வயதாகிறது! ஆனாலும், உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம்தான்; அதற்குத்தானே புனைப்பெயர் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்த சார், அய்யா எல்லாம் இல்லாமல் ‘தருமி’ என்றுமட்டும் எல்லோரும் என்னை அழைத்தால் நானும் கொஞ்சம் ‘நார்மலாக’ இருக்கமுடியும். So, it is a deal, okay!இந்தத் தலைப்பில் நான் எழுதும் கட்டுரையை ஒரு தொடராக 4 – 5 பகுதிகளாக எழுதுவதாக ஒரு
திட்டம். இந்த கட்டுரையின் ஆங்கில ஆக்கம் ஆரம்பித்து ஏறக்குறைய நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எங்கள் கல்லூரியில் open house ஒன்றை நண்பர்கள் சிலருடன் நடத்தும்போது அதில் பேசுவதற்காக என்று தயாரிக்க ஆரம்பித்து வளர்ந்துகொண்டே வந்த கட்டுரை அது. ‘இங்கு’ வந்தபின் ‘இந்தக் கருத்துக்களையும்’ எழுதக்கூடிய இட்ம் என்பதறிந்து எழுதலானேன். ஏதோ நல்லடியாருக்காகவே நான் எழுதுவதுபோல் யாரும் நினைத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல இது எந்த ஒரு மதத்தையும் தாக்குவதற்காக அல்ல – எல்லா மதத்தையுமே முடிந்தவரை, எனக்குத் தெரிந்தவரை அலசுவதற்காகவே எழுதப்படுகிறது. கிறித்துவனாகப் பிறந்ததால் முதலில் அந்த மதமும், அதை ஒட்டியே வந்த மதம் என்பதால் அடுத்ததாக இஸ்லாமும் என் பார்வையில் முக்கிய இடம் பெறும். தவறுகள் – factual mistakes – சுட்டிக்காட்டப்பட்டால் உடனே திருத்திக் கொள்கிறேன். கருத்துக்கள் தவறு என்று நீங்கள் நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள்; அது உங்கள் உரிமை. உங்களின் அந்தக் கருத்துக்களை ஏற்பதும், ஏற்காதிருப்பதும் என் உரிமை.

எழுதப்படும் கட்டுரைகளில் நான் அவ்வப்போது எழுதி வரும் விஷயங்களை மட்டும் வைத்து, ஆதரவாகவோ, எதிராகவோ உங்கள் கருத்துக்களைப் பதிவிட அழைக்கிறேன். நான் எழுதாத கருத்துக்களைப் பற்றி கட்டுரையின் முடிவில் எல்லோருமாக பொதுவாக விவாதிப்போமே. அப்போதுதான், உடனுக்குடன் பதில் சொல்லவேண்டிய கருத்துக்கள் தவறாது இடம்பெரும்; விவாதங்கள் ‘சுடச்சுட’வும் இருக்கும்! சுடச்சுட இருப்பது ‘சூடாகவும்’ இருக்க வேண்டியதில்லையே!

ஞானபீடம் அவர்களின் பின்னூட்டத்திற்கு என் பதில்:

‘யோபு’ கதையைப் படிக்கச்சொல்லியிருந்தீர்கள்; தெரிந்த கதைதான்; இருந்தும் படித்தேன். இப்போது படித்தபோது மனதில் எழுந்த கேள்வி: இந்தக்கதை அப்படியே நம்ம ஊரு அரிச்சந்திரன் கதைதானே. இரண்டுக்கும் நடுவே 6 வித்தியாசங்கள் கூட கிடையாது, இல்லையா? அரிச்சந்திரன் கதையில் at least, moral of the story என்று ஒன்று இருக்கிறது. எல்லாம் interesting ஆன கதைகள்.

யோனாவின் கதை – திமிங்கிலத்தின் வயிற்றில் மூன்று நாட்கள் – இதுபோல் எந்த மதத்தில்தான் கதைகள் இல்லை? இந்தக் கதையை அடுத்த மதத்தினர் நம்புவார்களா? இது உங்கள் மதக் கதை; நீங்கள் நம்புவீர்கள். நரி பரியான இந்துக்கதையை நீங்கள் நம்புவீர்களா?

உன்னதப்பாட்டு, பிரசங்கியும் நமக்கு இங்கு தேவையில்லையென்று நினைக்கின்றேன்.

நல்லடியாரின் பின்னூட்டத்திற்கு என் பதில்:

நான் ஒரு கேள்வி என் கட்டுரையில் கேட்டிருந்தேனே -
“ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one?” -
இதற்கு உங்கள் பதில் என்ன?(1)

//நல்லவை நடந்தால் அதற்கு ‘தானே’ காரணமென்றும், கெட்டவை நடந்தால் பிறர் (இளிச்சவாயர்?)மீதோ அல்லது யாரும் கிடைக்காவிட்டால் கடவுள் மீதோ போடுவது மனிதனின் இயல்பு.//

அப்படியே மாற்றிச்சொல்கிறீர்கள். கிறித்துவ மதத்தைப் பொருத்தவரை உலகில் நடக்கும் நல்லவை எல்லாவற்றிற்கும் தூய ஆவி காரணம்; மற்றவற்றிற்கு சாத்தான் காரணம். நிச்சயம் உங்கள் மத நம்பிக்கைப்படி நல்லவை அல்லாவிடமிருந்து வருவதாகத்தானே நம்புகிறீர்கள்? மறுபடியும் தயவு செய்து என் முதல் கட்டுரையில் நான் சொல்லியுள்ள predeterminism பற்றி படித்தால் உங்கள் கேள்வியில் உள்ள கருத்து தவறெனப் புரியும்.

“நல்லதும் கெட்டதும் கடவுளால் தீர்மானிக்கப்பட்டு, வேதமும் தூதரும் அனுப்பப்பட்டு, சிந்திக்க மூளையும் கொடுத்து, நல்லது செய்தால் சுவர்க்கமென்றும், தீயது செய்தால் நரகம் என்றும் போதித்து, மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் மட்டுமே பொறுப்பு எனச்சொல்வது பாரபட்சமாக இல்லையா?”
predeterminism vs omnipotence – பற்றிய எனது விவாதம் இதற்குப் பதிலாக அமையவில்லையா? இந்தக் கருத்துக்கும் உங்கள் பதிலை எதிர்நோக்குகிறேன் (2)

“எல்லா மதங்களும், தத்துவங்களும் நல்ல நோக்கத்தில்தான் போதிக்கப்பட்டன. அதனை பிரயோகப்படுத்தும் முறையில்தான் மனிதன் வேறுபடுகிறான்.”
இதற்குரிய பதிலுக்கு நீங்கள் என் முடிவுரை வரை பொறுக்கவேண்டும்.

“கடவுளை மறுப்பவர்களெல்லாம் நல்லவர்கள் என்ற முடிவுக்கு வர எந்த முகாந்திரமும் இல்லை.” யார் சொன்னது கடவுளை மறுப்பவர்களெல்லாம் நல்லவர்கள் என்று??!!
உங்கள் ப்ளாக்கின் முகவரியாக உங்கள் குரான் வாசகம் ஒன்று கொடுத்திருக்கிறீர்களே, அதேபோல, பைபிளில் ‘உனக்கு உன் அயலான் என்ன செய்யவேண்டுமென்று நீ நினைக்கிறாயோ, அதை நீ அவனுக்குச் செய்துவிடு” என்று சொல்லியுள்ளது. எனக்கு பைபிளில் மிக மிக பிடித்த வாசகம் இது.
மனிதநேயம் மட்டுமே ஒரு மனிதனை, மனிதனாக, நல்லவனாக வைத்திருக்க முடியும்; மதங்களல்ல – எம்மதமாயினும்! (இந்த இடத்தில் எனது 10 / 9 கட்டளைகளில் முதலாவது கட்டளையைச் சொல்வது நன்கிருக்கும் என்று எண்ணுவதால் அதைத் தருகிறேன்: Dont try to become a god in vain; be a man – fist and last

“தருமி சார், உங்கள் முந்தைய மத நம்பிக்கை தவறு என்ற முடிவுக்கு வர சுமார் 45 வருடங்கள் எடுத்துக் கொண்ட நீங்கள், கடவுள் மறுப்பே சரியென்று எப்படி உடனே முடிவுக்கு வந்தீர்கள்?” -
- கொஞ்சம் சரியாக வாசித்துவிடுங்கள்: 40-43 வருடம் நம்பிக்கையோடானது. பிறகு, ஏறத்தாழ 10 ஆண்டுகளில் மன மாற்றம். இதுதான் என் பரிணாமம் என்று எழுதியிருந்தேனே!

“வெவ்வேறான மனிதர்களை கடவுள்தான் படைத்தான் (அல்லது குரங்கிலிருந்து வந்தான் என்றாலும்) ஒருவன் நல்லவனாகவும் மற்றொருவன் கெட்டவனாகவும் இருப்பது ஏன்?”
- ஒருவன் ஏழையாகவும், மற்றொருவன் பண்க்காரனாகவும், ஒருவன் மொடாக்காகவும், இன்னொருவன் புத்திசாலியாகவும் இருப்பது ஏன்? கடவுள் ஏன் இப்படி படைத்தார் ? – என்று இன்னும் நிறைய கேட்கலாமே! ஆனால், இது எல்லாம் நல்லடியார் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள். விஞ்ஞானக் கேள்வியாகக் கேட்டால் genome, genes, D.N.A. எல்லாம்தான் இந்த variations-க்குக் காரணம் என்று என்னைப்போன்ற infidels சொல்லுவோம்; உங்களைப்போன்ற நம்பிக்கைவாதிகள் இந்த வேறுபாடுகளுக்கு என்ன பதில் கொடுப்பீர்கள். கடவுள் ஏன் இந்த வேறுபாடுகளோடு மனிதர்களைப் படைத்தார்? தருமி இப்படி infidel-ஆக இருப்பதற்கும், நல்லடியார் ஆழ்ந்த இஸ்லாமியராக இருப்பதற்கும் யார் / எது காரணம். “எல்லாம் அவன் செயல்” (predeterminism) என்பது உண்மையென்றால்….?

“தேடல்களின் தொடர்ச்சி பகுத்தறிவா? தேடியதில் முடிவுக்கு வருவது பகுத்தறிவா?”
- இல்லாமல் வேறென்ன, சொல்லுங்கள். எனது தேடல், தொடர் தேடல் என்று சொல்லியுள்ளேன். like science. Science never puts a ‘full stop’; it always ends with a comma . தொடர் தேடல் – இலக்கணக் குறிப்பு: வினைத்தொகை தானே !!

ஞானபீடம், நல்லடியார் – உங்கள் பின்னூட்டத்திற்கு வார்த்தைக்கு வார்த்தை பதிலளிக்க முயற்சி செய்துள்ளேன்; பழிக்குப் பழி…அதாவது, வாதத்திற்கு வாதம்..?






  • No comments:

    Post a Comment