Wednesday 11 March 2015

அறிவியல் வியக்கும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் கம்ப்யூட்டரும்

இந்துத் தத்துவம் விளக்கும் ஆன்மிக ரகசியங்களை அறிவியல் ஆராயத் தலைப்பட்டபோது அதன் முடிவுகள் பிரமிப்பூட்டின!
மந்திரங்களின் மகிமை, ஒலியின் மகிமை என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவற்றை அறிவியல் ஆமோதித்தபோது பழம்பெரும் தத்துவங்களின் உண்மையும் அவற்றைக் கண்ட ஞானிகளின் பெருமையும் உலகிற்குத் தெரிய வந்தன.
விஷ்ணு சஹஸ்ர நாமமும் கம்ப்யூட்டர் ஆணைகளும்
விஷ்ணுசஹஸ்ர நாமம் தொன்று தொட்டு நமது இல்லங்களில் அன்றாட பாராயணமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு அற்புத ஸ்தோத்ரம்.
இதை நன்கு ஆராய்ந்தவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.எஸ். அவதானுலு.
இவர் ஹைதராபாத்தில் வேதபாரதி என்னும் சம்ஸ்கிருதம் மற்றும் வேத
அறிவைப் பரப்பும் ஸ்தாபனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் எப்படி அனைத்துத் தொழில்நுட்பமும் அறிவியலும் அடங்கி உள்ளன என்பதை விவரித்து ‘ஸயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன் வேதாஸ் அண்ட் சாஸ்த்ராஸ்’ Science and Technology in Vedas and Shastras என்று ஒரு நூலை எழுதியுள்ளார்.
அதில் கம்ப்யூட்டர் கோட்பாடுகள் எப்படி விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அடங்கியுள்ளன என்பதை பிரமிக்க வைக்கும் விதத்தில் தருகிறார்.
கம்ப்யூட்டரில் அடிப்படையாக உள்ளது கமாண்ட் command எனப்படும் ஆணைகளே.
கூட்டு, கழி, பெருக்கு போன்ற அனைத்துமே கமாண்ட் தான்.
இந்தக் கட்டளைகளைத் தந்தவுடன் கம்ப்யூட்டரில் உள்ள சர்க்யூட்டுகள் circuits அந்த ஆணைகளைச் செயல்படுத்துகின்றன.
இதில் தவறுதலே நடக்காது.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 30ஆம் ஸ்லோகத்தில் வருவது ‘ருத ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ர:’ என்பதாகும்.
ஸ்பஷ்டாக்ஷர என்றால் ஓம் என்ற அக்ஷரத்தால் அழைக்கப்படுபவன் என்பது பொருள்.
ஓம் என்பது ஆற்றல் வாய்ந்த அக்ஷரம்.
அதை எங்கு வேண்டுமானாலும் உரிய முறையில் உச்சரித்தவுடன் அது ஒரு கமாண்ட் போலச் செயல்பட்டு ஒரு அபாரமான சக்தியை எழுப்புகிறது.
கம்ப்யூட்டரில் சொல்லப்படும் கமாண்டின் உண்மையான அர்த்தத்தை இந்த நாமத்தில் நாம் பார்க்க முடிகிறது.
மெமரி memory யும் சுமேதா நாமமும்
மெமரி எனப்படும் நினைவகம் கம்ப்யூட்டரில் மிகவும் முக்கியமான ஒன்று.
ஒரு கிலோ பைட் என்பது 1024 பைட்டுகளைக் கொண்ட்து.
இதற்கு மேலாக இருக்கும் அளவீடுகளான டெரா பைட் (Tera Byte) போன்றவை அதிக நினைவகத்தைக் கொண்டிருப்பவை.
400 வால்மீகி ராமாயணங்களை (வால்மீகி ராமாயணத்தில் 24000 ஸ்லோகங்கள் உள்ளன) ஒரு கிகா பைட்டில் (Giga Byte) அடக்கி விடலாம்.
1024 கிகா பைட் ஒரு டெரா பைட் ஆகும். அழிக்க முடியாத நான் – எரேஸபிள்(non-erasable) குணாதிசயங்களையும் கம்ப்யூட்டர் கொண்டுள்ளது.
இந்த நினைவகம் பற்றிய கோட்பாட்டை 80வது ஸ்லோகத்தில் வரும் நாமமான ‘சுமேதா மேதஜோ தன்ய: சத்யமேதா தராதர:’ என்பதில் காண முடிகிறது.
சுமேதா என்றால் அற்புதமான நினைவகத்தைக் கொண்டிருப்பவன் என்பது பொருள்.
சத்யமேதா என்பதில் அழிக்க முடியாத மெமரியைக் கொண்டிருப்பவன் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது!
ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு கணத்திலும் எல்லா காலத்திலும் செய்யும் அனைத்துச் செயல்களையும் அவன் நினைவில் கொண்டிருக்கிறான்.
கீதையில் இதையே கண்ணன் அர்ஜுனனிடம்,” எனக்கும் உனக்கும் பல ஜன்மங்கள் கழிந்து விட்டன.
அதை நீ அறிய மாட்டாய்.
ஆனால் நான் அவற்றை நினைவில் கொண்டிருக்கிறேன் (கீதை நான்காம் அத்தியாயம் ஸ்லோகம் 5 பஹூநி மே வ்யதீதாநி ஜன்மானி தவ சார்ஜுனI தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப II )” என்ற வார்த்தைகளால் கூறுகிறான்!
இப்படி நினைவக்க் கோட்பாட்டையும் சஹஸ்ரநாமம் விளக்குகிறது.
கணினியின் வேகமும் கடவுளின் வேகமும்
இன்னொரு கோட்பாடு வேகம் பற்றியது.
இந்த வேகத்தினால் தான் கம்ப்யூட்டரை இன்றைய நவீன உலகம் மதித்து அன்றாடச் செயல்பாடுகளுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
கம்ப்யூட்டரின் வேகத்தை மெகா ஹெர்ட்ஸ் (MHz) கிகா ஹெர்ட்ஸ் (GHz) என்ற அளவீடால் சொல்கிறோம்.இந்த கணினி வேகத்தை இன்னொரு முறையாலும் கூற முடியும்.
ஒரு வினாடிக்கு லட்சக்கணக்கான ஆணைகள் எனப்படும் மில்லியன்ஸ் ஆஃப் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பர் செகண்ட் என்ற முறையிலும் கணினி வேகம் கூறப்படும்.
பழைய தலைமுறை கணினிகள் ஒரு வினாடிக்கு பத்து லட்சம் ஆணைகளை மேற்கொள்ளும் திறன் உடையவை.
இன்றோ இன்னும் அதிக வேகம்!
இந்த வேகத்தை 40வது ஸ்லோகத்தில் மஹாவிஷ்ணுவைத் துதிக்கும் நாமமான ‘மஹீதரோ மஹாபாகோ வேகவான் அமிதாஸன:’ என்பதில் காணலாம்.
இந்த ‘வேகவானின்’ வேகம் பற்றி கஜேந்திர மோக்ஷத்தில் ஆதிமூலமே என்று கூப்பிட்டு முடிவதற்குள் அவன் வந்து சேர்ந்ததை பாகவதம் சிறப்பாகக் குறிப்பிடுகிறது.
திரௌபதி கூப்பிட்டவுடன் அவன் செய்த லீலையையும் நாம் மறக்க முடியாது.
மைக்ரோ ப்ராஸஸரும் micro processor நிர்ணயிக்கப்பட முடியாத வடிவம் உடையோனும் அடுத்து கம்ப்யூட்டர்களின் பயன்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறதல்லவா!
எங்கும் கம்ப்யூட்டர், எதிலும் கம்ப்யூட்டர், எதற்கும் கம்ப்யூட்டர்!!!
ரிசர்வேஷனுக்கும், மருத்துவமனைகளில் அனைத்து சேவைகளுக்கும், ஏன் ராக்கட்டுகளை விண்ணில் ஏவுவதற்கும் கூட என்று இப்படி எங்கு பார்த்தாலும் கணினியின் சேவை தான்!
இது எதனால் என்று பார்த்தால் விடை மைக்ரோப்ராஸஸரினால் தான் என்று முடியும்.
கணினியின் மென்பொருளில் உள்ள மைக்ரோப்ராஸஸர்களின் நெகிழ்வுத் தன்மை பிரமிக்க வைக்கும் ஒன்று.
அதை எந்த விதத்திலும் பயன்படுத்த முடியக்கூடிய அளவு அது ப்ளெக்ஸிபிளாக – நெகிழ்வுடன் கூடியதாக உள்ளது.
இந்த அற்புதமான தன்மையை 19ஆம் ஸ்லோகத்தில் வரும் நாமத்தில் காணலாம்.
“அநிர்தேஷ்யவபு: ஸ்ரீமான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்”
இதன் பொருள் அவன் வடிவம் நிர்ணயிக்கப்பட முடியாதது, அவன் நினைத்த வடிவத்தை எடுப்பவன் என்பதாகும்.
அவன் பல்வேறு வடிவம் எடுப்பவன் என்பதை 29ஆம் ஸ்லோகத்தில் வரும் நாமமான ‘நைகரூபோ ப்ருஹத்ரூபஹ சிபிவிஷ்டஹ ப்ரகாஷந:’ என்பது வலியுறுத்துகிறது.
நாமங்கள் பல; கணினியின் பயன்பாடுகள் பல!
இதே போல programming ப்ரொக்ராமிங் (மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக:-ஸ்லோகம் 72), மல்டி ப்ரொக்ராமிங் (ஸ்வாபன: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத்-ஸ்லோகம் -50), அலெர்ட் டிபென்ஸ் சிஸ்டம் (தனுர்தரோ தனுர்வேதோ தண்டோ தமயிதா தமஹ –ஸ்லோகம் 92), கேபிளிங் (சுபாங்கோ லோக சாரங்கஹ சுநந்து –ஸ்லோகம் 84) ஆகியவற்றையும் அவதானுலு விவரிக்கிறார்; நம்மை பிரமிக்க வைக்கிறார்.
பாரத பிரதமராக இருந்த வாஜ்பாய், வேதங்களிலிருந்து விஞ்ஞானத்தைக் கூறும் இவரது அறிவுத் திறனைக் கண்டு,” கனவு நனவாகிறது” என்றார்.
ராஷ்ட்ரபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவோ இவரது பணியை, “மிக அருமை; உலகிலேயே இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் இது முதலாவது” என்று பாராட்டினார்.
வால்டேர் போற்றிய ஹிந்து மதம்
பிரபல தத்துவஞானியான வால்டேர், “ஜியாமெட்ரியைக் கற்க பிதகோரஸ் கங்கைக் கரைக்குச் சென்றார்” என்று எழுதியுள்ளதோடு, “நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று கூறினார்.
‘ஹிஸ்டரி ஆஃப் மேதமேடிக்ஸ்’ என்ற நூலை ஆதாரபூர்வமாக எழுதியுள்ள ஆப்ரஹாம் செய்டன்பர்க் சம்ஸ்கிருதத்தில் உள்ள சுலப சூத்ரங்களே பாபிலோனிலிருந்து எகிப்து வரை அராபியாவிலிருந்து கிரேக்கம் வரை உள்ள அனைத்து கணித மேதைகளையும் கவர்ந்து அவர்களை ஊக்குவித்தது என்கிறார்.
அனைத்துக் கலைகளும் தொழில்நுட்பங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது வேதங்கள் என்பதை நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் ஆதாரங்களுடன் எழுதி வருகின்றனர்.
அறிஞர்களைப் போற்றுவோம்
ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்யர், கணித சூத்ரம் அல்லது சுலப சூத்ரங்கள் என அழைக்கப்படும் சூத்திரங்களில் அனைத்துக் கணித முறைகளும் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதர்வண வேதத்தை ஆராய்ந்து வேத கணிதத்தைக் கண்டு விளக்கினார்.
1965ஆம் ஆண்டு அச்சுக்கு வந்த வேத கணிதம் இன்று உலகம் முழுவதும் பரவி மேலை நாட்டு பல்கலைக் கழகங்களிலும் கூடப் பயிற்றுவிக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கிறது.
ஸ்ரீ சங்கராசார்யர் காட்டிய வழியில் வேதம் கொண்டுள்ள ஏராளமான தொழில்நுட்பங்களை அறிந்து சமுதாயத்திற்கு அளிக்க இந்தியர்களான பல்வேறு இளம் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முதிர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் இப்போது முன் வந்திருப்பது மிகவும் போற்றிப் புகழவேண்டிய தொண்டாக அமைகிறது.

No comments:

Post a Comment