Saturday 11 April 2015

உப்பு கிணற்று நீரை நல்ல நீராக மாற்றிய சாய் பாபாவின் கதை

சாயிபாபாவை தமது தூப்காவன் கிராமத்திலிருந்து ஷிர்டிக்கு சாந்த்படீல் அழைத்து வந்தார். அப்போது பாபா, தாம் தூப்காவன் திரும்பப் போவதில்லை என்றும்,  ஷிர்டியிலேயே நிரந்தரமாய்த் தங்கப் போவதாகவும் உறுதிபடத் தெரிவித்துவிட்டார். ஷிர்டி செய்த அதிர்ஷ்டத்தை எண்ணி சாந்த்படீல் ஆச்சரியம் அடைந்தார்.  இனி வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் அடிக்கடி ஷிர்டி வந்து இந்த விந்தையான யோகியைத் தரிசிக்க வேண்டியது தான் என்று மனதை தேற்றிக் கொண்டார்.  சாயிபாபாவின் பாதங்களில் தலைவைத்து வணங்கி விடைபெற்றார் சாந்த்படீல். தாய்ப்பசுவைப் பிரிந்த கன்றைப் போல அவர் கண்களில் கண்ணீர் ஆறாய்ப்  பெருகியது. ஆனால், நான் எப்போதும் உன்னுடன் தானே இருக்கிறேன் என்பதுபோல் பாபாவின் திருக்கரம் அவர் துயரத்தைத் துடைத்தது. 


ஷிர்டியில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்றில் தண்ணீர் வற்றி விட்டது. அதுதான் நல்ல தண்ணீர் தந்தகிணறு. இன்னொன்றில் கடல் நீரை விட அதிகமாக  உப்புதகரித்தது. இதுபற்றி பாபாவிடம் சொல்லலாம் என்று சில பெண்மணிகள் பாபாவைத் தேடிப் போனார்கள். குடங்களோடு தம்மைத் தேடி வந்த  பெண்மணிகளிடம் பாபா, குடம் நிறையப் பிரச்னையோடு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே? என்று சொல்லிச் சிரித்தார். பிரச்னை என்னவென்று பாபாவுக்குத்  தெரியாதா? ஆனாலும், பக்தர்கள் கடவுளிடம் நேரடியாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதல்லவா அவர் விருப்பம்? 

அவர்களின் அன்பான வேண்டுகோளை பாபா ஏற்றார். மலர்களை கையில் வைத்துதகொண்டு கண்மூடிச் சற்றுநேரம் பிரார்த்தனை செய்து, அவர்களை  அழைத்துக்கொண்டு உப்பு கிணற்றை நோக்கிப் புறப்பட்டார். கையிலுள்ள மலர்களை கிணற்று நீரில் அர்ச்சிப்பதுபோல் தூவினார். இப்போது பாபா பல மூட்டை  கல்கண்டை கிணற்றில் கலந்தது போல இருக்கிறதே என்று கூறி ஜெய் சாயிநாத்! என்றவாறே பெண்மணிகள் பாபாவை வணங்கினார்கள். 

பாபா புன்முறுவல் பூத்தவாறே பேசலானார்: என் பக்தர்களது இல்லங்களில் உணவு உடை இவற்றிற்கு எந்த குறைவும் வராது. உங்கள் மனத்தை என்னிடமே  எப்போதும் செலுத்துங்கள். அடியவர்களின் நலன்களை கவனிப்பதே என் வேலை. கீதையில் கிருஷ்ணரும் இதைத் தானே சொல்கிறார்! தாம் தங்கியிருந்த மசூதி  நோக்கி நடந்தார் பாபா. அந்தப் பெண்மணிகள் நன்றிப் பெருக்கில் கண்கள் பளபளக்க தண்ணீர் குடத்தைத் தூக்கிக்கொண்டு திரும்பித் திரும்பி பாபாவைப்  பார்த்தவாறே இல்லம் நோக்கி நடந்தார்கள். அக்கம்பக்கத்து கிராமங்களிலும் கூட இந்தச் செய்தி பரவியது. 

No comments:

Post a Comment