Tuesday 7 April 2015

பௌத்தமத அல்லது பௌத்தர் காலத்தில் சித்தர்கள்

பௌத்தமத அல்லது பௌத்தர் காலத்தில் சித்தர்கள்
ஜைன-பௌத்தக் குழப்பங்கள்: சரித்திரரீதியில் ஜைனம்-பௌத்தம் தனித்தனியாக இருந்ததா, ஒரே காலத்தில் இருந்து, பிறகு பிரிந்ததா, மஹாவீரரும், புத்தரும் ஒருவரா அல்லது தனித்தனியானவர்களா, ஒரேகாலத்தைச் சேர்ந்தவர்களா, ஒருவர் மற்றொருவரின் சீடரா, கொள்கைகளினால் பிரிந்து போயினரா என்ற பற்பல கேள்விகளுக்கு விடைகாணாமல், சர்ச்சைகளில் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டனர்[1]. “சித்தார்தர்” என்ற பெயரையுடைய அரசருக்குப் பிறந்தவர் மஹாவீரர். (c.599-527 BCE) ஆனால் சித்தார்த்தர் என்ற பெயர் கொண்டவர் புத்தர் (c.567-487 BCE). மஹாவீரர் போதிக்கும் கூட்டத்திற்கு புத்தர் வந்திருந்தார் என்று ஜைனர்கள் சரித்திரம் கூறுகிறது. ஆனால், ஆர்தர் வின்சென்ட் ஸ்மித் என்பவன் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இதுதான் இந்திய சரித்திரம் என்று எழுதிவைத்து விட்டான்.
அலெக்சாந்தருக்குப் பிறகுதான் “இந்திய சரித்திரமே” ஆரம்பிக்கிறது என்றபோது, மஹாவீரரும், புத்தரும் சரித்திரகாலத்திற்கு முன்பு (Pre-historic) தள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தியர்கள் இத்தகைய நுணுக்கங்களை அறியாமல் சரித்திரத்தைப் படித்து வருகின்றனர். திராவிட சித்தாந்திகளைப் பற்றியோ கேட்கவே வேண்டாம், “கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தேத் தோன்றிய மூத்தக்குடி, தமிழ்குடி”, என்று பறைச்சாற்றிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பர்!
வேத-ஜைன-பௌத்த முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்: ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் வேதங்களின்று தான் தமது ஞானத்தைப் பெற்றனர். அதனை மஹாவீரரோ அல்லது புத்தரோ மறுத்ததில்லை[2]. அவர்களது வாதங்கள் பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்கள் பிராமணர்களை வாதங்களில் வென்றதாகவும் தான் அவர்கள் நூல்களில் இருக்கும்[3]. அதனால், அவர்கள் பிராமணர்களுக்கு விரோதிகள் இல்லை. சிரவணர்கள்-பிராமணர்கள் அவர்கள் காலங்களில் சேர்ந்தே பணிசெய்துள்ளார்கள். ஆனால், பிறகு தோற்றுவிக்கப் பட்ட அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களில் அவ்வாறு வேத-பிராமண-விரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். 1800-500 BCE காலங்களில் இம்மத நம்பிக்கையாளர்கள் ஆட்சியில் இருந்ததால், எப்படி, இக்கால அரசியல் நிர்ணயச் சட்டத்தில் மாறுதல்கள் செய்கிறார்களோ, அதுபோல சாஸ்திரங்களில் தமக்கு சாதகமாக பல திருத்தங்களை செய்தார்கள். அதுமட்டுமல்லாது, இதிகாச-புராணங்களையும் மாற்றியெழுதினர். வேதமத்தவர் தமது நூல்களைக் காத்துக் கொள்ள மற்றும் ஜைன-பௌத்தர்களின் திருத்தங்களுக்கு உட்படாமல் காக்கத் தகுந்த முறைகளை கையாண்டார்கள். அந்நிலையில் வேதங்கள் மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று தீர்மானித்திருக்கலாம். அந்நிலையிலும் அவர்கள் பிராமணர்களைப் போல வேடமிட்டு வந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள முயற்ச்சித்துள்ளார்கள்[4]. அப்பொழுது தான், அவர்களை “பாஷாண்டிகள்” என்று அழைத்தார்கள். இத்தடையை நீக்கத்தான், எல்லோரும் வேதங்களைக் கற்கலாம் என்றறிவித்தார்கள். ஆனால், தத்தமது மதங்களில் பெண்களை அடக்கிவைத்தார்கள்[5]. நிர்வாணத்திலும் கூட சமவுரிமை கிடையாது என்று அறிவித்தனர்[6]. ஆனால், பிறகு சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டபோதுதான் பிரச்சினைகள் வந்தன. தந்திரங்களில் பாலியல் ரீதியாக அவர்கள் பயன்படுத்தப் பட்டனர்[7], துன்புறுத்தப்பட்டனர்[8], அடக்கி வைக்கப் பட்டனர்[9].
மந்த்ர-தந்ட்ர-யந்த்ர முறைகளில் மாற்றம்: தந்திரிக-தாந்திரிகமுறை வேதமுறைகளினின்று, ஜைனம் மற்றும் பௌத்த மதங்களில் மாற்றப்பட்டு, மாறி வந்துள்ளன. இடைக்காலத்தில் இவை தோன்றியதாக சில நூல்களை வைத்து விளக்கம் கொடுத்தாலும், மூலநூல்கள் ஆரம்ப நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாக உள்ளன. யாமள, காளிகா, ர‌க்ஷகாளிகா, இந்திவர காளிகா, ஜீவகாளி, பைரவிதக்ணி, சித்திலக்ஷ்மி தந்திரங்களைக் குறிப்பிட்டாலும், ஜைனர்கள் அவற்றை மாற்றியமைத்துக் கொண்டனர்[10]. ஆனால், குல்லுகபட்டர் என்பவர் பாரதப்பாரம்பரிய ஞானம் – வேத மற்றும் தந்திர என்று இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளாதாகக் குறிப்பிட்டுள்ளார்[11]. ஆனால், “தந்த்ர/தந்திர” என்ற சொல்லிற்கு அர்த்தம் வேதத்திலிருந்துதான் பெறப்படுகிறது[12]. முதலில் தந்திரிகமுறைகளை எதிர்த்த பௌத்தர்களும் அவ்வாறே சிவ-சக்தி முறைகளை மாற்றிக் கொண்டனர். சிவலோகேஷ்வரரை, அவலோகேஷ்வர் என்று மாற்றிக் கொண்டனர். சஹஜ / சஹஜீய என்ற சமரசமுறைகளில் இருமதங்களும் வேத மந்த்ர-தந்ட்ர-யந்த்ர முறைகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டன. திருமூலரும் அவ்வாறே செய்துள்ளார். அதனால், திருமந்திரத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால் ஜைன-பௌத்த மதங்கள் கடவுள் இல்லை என்று அறிவித்துவிட்டு, தந்திரமுறைகளுக்கு தேவதைகளை வைத்துக் கொண்டார்கள், அவையெல்லாமே இந்து கடவுளர்கள் தாம்.
இருகாலகட்டங்களில் தந்திரங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்: கிரேக்கர்களாக ஜைனர்கள் இந்தியாவில் வந்தபோது ஏற்பட்ட மாற்றங்கள், அரேபியர்கள் வந்தபோது ஏற்பட்ட மாற்றங்கள் என இரண்டு வகையாக பார்க்கலாம். ஆகவே, ஜைன-பௌத்த சித்தர்கள் வேதமுறைகளை தகவமைத்துக் கொண்டதில், இரு காலகட்டங்களைப் பார்க்கலாம். அரேபியர்-முகமதியர் படையெடுப்பு-தாக்குதல்களுக்கு முன்னர் மற்றும் பின்னர் என்று இரு காலகட்டங்களில் மாறுதல்களை, மாற்றங்களை, சீரழிவுகளைப் பார்க்கலாம். முதலில்-முன்னர் ஏற்பட்ட பிறழ்ச்சி, அழிவு, சீரழிவு ஜைன-பௌத்தர்களால் ஏற்பட்டது.  பின்னர் ஏற்பட்ட பிறழ்ச்சி, அழிவு, சீரழிவு அரேபியர்-முகமதியர்களால் ஏற்பட்டது. இடைக்காலத்தில் அல்லது முகமதியர் காலத்திலும் மந்த்ர-தந்ட்ர-யந்த்ர நூல்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், அவை முகமதியர்களின் காம-உடலின்ப சரச-சல்லாபங்களுக்கு உதவும் வகையில் ஏற்பட்டவை. பல மந்த்ர-தந்ட்ர-யந்த்ர பண்டிதர்கள் வலுக்கட்டாயமாக, துன்புறுத்தப் பட்டு, தமகேற்றபடி அத்தகைய நூல்களை எழுதவைத்தனர். அவ்வாறு உருவானவைதாம் அனங்கரங்க, ஆனந்தரங்க, காமசூத்திர போன்ற பாலியல் நூல்கள்[13]. முகமதியர் காலத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ நூல்கள் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, மூலங்கள் அழிக்கப்பட்டன. அவற்றை அந்நூல்களைப் படிக்கும்போதே அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, அவர்களில் சிலர் ஆயுர்வேத நூல்களைப் படித்துள்ளோம், அவற்றை சேகரித்துள்ளோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்[14].
தெற்கில் ஜைன-பௌத்த மதங்கள் இரண்டாம் முறை தலைத்தூக்கி அடங்கியது: முகமதியர்கள் வடக்கில் ஆதிக்கம் செல்லுத்தியபோதுதான், கர்நாடகத்தில் ஜைனர்கள் மறுபடியும் தலைத்தூக்கினர். தென்னிந்தியாவில் ஜைன-பௌத்தர்களின் தாக்கம் முதல் நூற்றாண்டுகளிலேயே காணப்படுகிறது. களப்பிரர்களினால், தமிழக கலாச்சாரம் அழிந்தது, அதனால், “களப்பர்களின் இருண்ட காலம்” என்றும் தமிழக சரித்திரத்தில் சொல்லப்படுகிறது. பிறகு சைவத்தின் எழுத்தியால் இரண்டும் அடக்கப்பட்டன. கர்நாடகத்தில், வீரசைவத்தின் மறுமலர்ச்சியால், இரண்டும் அடக்கப்பட்டு, பிறகு வந்த முகமதியர்களையும் கட்டுக்குள் வைத்தது. அதனால்தான், வீரவல்லாளன் போன்றோர் ஜைனர்களாக இருந்தார்கள். இருப்பினும், பிறகு சைவரானார்கள், முகமதிய மதத்தை எதிர்க்கவும் செய்தனர். அதனால்தான், வல்லாளன் வயதான காலத்திலும், வஞ்சகத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு, குரூரமாகத் தோலுறித்துக் கொல்லப்படுகிறான். ஜைன-பௌத்த மதங்களுக்கும் வியாபாரரீதியில்-அரசியல் ரீதியில் போராட்டங்கள் நடந்துள்ளன. அப்பொழுது, அரேபியர்களின் மற்றும் சீனர்களுடன் வைத்துக் கொண்ட கூட்டும், அவர்களின் அழிவிற்கு காரணமாக இருந்தது. “அகாலங்க” என்ற ஜைனமுனிவர் 788ல் பௌத்தர்களை வென்று, இலங்கைக்கு அனுப்பியதாக, கல்வெட்டுகள் கூறுகின்றன[15].
பௌத்தமதத்தில் சித்தர்கள்: வேதமதத்தில் தந்த்ரமுறை சக்திவழிபாட்டில் இருந்தது. பிறகு ஜைனர்கள் அதை மாற்ரித் தகவமைத்துக் கொண்டனர்.  இந்து பெண்-கடவுளர்கள் அவர்களுக்கு தேவதைகளாயினர். அவர்கள் பெயரில் தந்த்ர நூல்களையும் மாற்றியெழுதிக் கொண்டனர். பிறகு பௌத்தர்கள் அதனை பின்பற்ற ஆரம்பித்தபோது, அவர்களும் மாற்றங்களைச் செய்தனர். சக்திற்கு பதிலாக பிரஜ்ன-ஞானம் என்று வைத்து பௌத்த-தந்த்ர முறையினை வளர்த்தனர்[16]. சக்தியை அவர்கள் மாயை என்றழைத்தனர். இருப்பினும், சூன்யதா தான் பிரஜ்ன, உயர்ந்தநிலை ஞானம்-அறிவு என்றனர். ஜைனர்கள் பெண்களுக்கு தந்த்ரமுறையில் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பௌத்தத்திலும் அவ்வாறேயிருந்தாலும், வெளிப்படையில் ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் போலக் காட்டிக் கொண்டனர். இருப்பினும் பெண்களின் பங்கில்லாமல், தந்தரமுறைகளை பிரயோகம் செய்யமுடியாது. இதனால்தான், இருமதங்களும் இம்முறைகளில் தோல்வியடைந்தன.
புத்தர் ஜாதகக் கதைகள் புராணங்களைப் பின்பற்றியமுறை: புத்தர் ஜாதகக் கதைகள் என்பவை புத்தருடைய முற்பிறவிகள், இக்காலப்பிறப்பு, மாயாதேவியின் கனவுகள் முதலிவற்றைப் பற்றியக் கதைகளின் தொகுப்பாகும். ஜாதகமாலா என்ற நூலின்படி, சித்தர்கள் வங்கமலையில் வசித்தவர்கள் (விஸ்வந்தர கதை), மானஸசரஸில் திருதராஷ்ட்ர என்ற பெயரில் போதிசத்வராக இருந்தபோது அங்கு சித்தர் கூட்டம் இருந்தது (புனித அன்னங்கள் கதை). சித்தர்கள், வித்யாரண்யர், ரிஷிக்களுடன் வசித்து வந்தனர்[17]. இவையெல்லாம் புராணங்களில் உள்ள விவரங்கள் போன்றேயுள்ளன.
® வேதபிரகாஷ்
13-09-2012

[1] Brahmachari Sital Prasadji, A Comparative Study of Jainism and Buddhism, The Jaina Mission Society, Madras, 1932.
[2] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.
[3] முகமதியரும், பிறகு வந்த கிருத்துவர்களும் இதேமுறைத்தான் கையாண்டனர். சீசன்பால்கு, தான் பிராமணர்களுன் 300 கருத்தரங்கள் நடத்தியதாக எழுதி வைத்துக் கொண்டான். ஆனால், கலந்து கொண்ட பிராமணர்களைப் பற்றி எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. ஆகையால், அவை உண்மையா, கட்டுக்கதையா, கற்பனையா என்று தெரியாது.
[4] முகமதியரும், பிறகு வந்த கிருத்துவர்களும் இதேமுறைத்தான் கையாண்டனர். இதனால்தான், சித்தர்களிலும் பல போலி சித்தர்கள் உருவானார்கள். ராபர்ட் டி நொபிலி இதே மாதிரி வேடமிட்டுக் கொண்டு, வேதங்களைக் கற்றுக் கொள்ள முயற்ச்சித்தான்.
[5] Padmanabh S. Jaini, Gender and Salvation: Jaina Debates on the Spiritual Liberation of Women, University of California, USA, 1991, pp.18-19.
[6] Walther SchubringThe Doctrine of the Jains – Described after the Old Sources, Motilal Banarasidas publishers, New Delhi, 2000, p.61.
[7] Brhatk Bhasya.1.2670; Therigat (139-344) where nun Khema was invited to enjoy sensual pleasure.
[8] N. N. Bhattacharya, History of the Tantric Religion (A Historical, Ritualistic and Philosophical study), Manohar, New Delhi, 1987, pp.181-193.
[9] Analayo, Theories on the Foundation of the Nun’s Order – a Critical Evaluation, in JCBSSL, Vol.VI, can be accessed from here:http://buddhistinformatics.ddbc.edu.tw/analayo/TheoriesFoundation.pdf
[10] O. P. Jaggi, Yogic and Tantric Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.V, Atma Ram & Sons, New Delhi, 1979, p136.
[11] N. N. Bhattacharya, History of the Tantric Religion, Manohar, New Delhi, 1987, Introduction, p.1
[12] Rigveda.X.71.9; Atharvaveda.X.7.42; Taittriya Brahmana.II.5.5.3; Panini derived the word “tantraka” (woven cloth) (V.2.70) from “Tantra” (loom). Thus, the act of weaving is “tantra”.
[13] முகமதியர்கள் தங்களது ஹேரங்களில் /அந்தப்புறங்களில், நுற்றுக்கணக்கான பெண்களை அவ்வாறு தேர்ந்தெடுத்து அனுபவித்து வந்தார்கள். அப்பொழுது ஏற்பட்டதுத்தான், பிரங்கி/பறங்கி/மேகவியாதி. அதனால் தான், அந்நோயைத் தீர்க்க மருத்துவர்கள் முயன்றனர்.
[14] O. P. Jaggi, Medicine in Medieval India, in History of Science, Technology and Medicine in India, Vol.V, Atma Ram & Sons, New Delhi, 1979, pp.73-79, p103, 108.
[15] K. A. Nilakanda Sastri, Sravanabelagola, Department of Archaeology, Mysore, 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.
[16] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.318.
[17] J. S. Speyer (Trans.), The Jatakamala or Garland of Birth-stories of Aryasura, Motilal Banarasisas, New Delhi, 1982 (1895 edition), p.77, 182.

No comments:

Post a Comment