Thursday 9 April 2015

அலைபாயும் மனதை ஒரு நிலையில் நிறுத்துவதே தியானம்.....

அமைதியான சூழலில் வசதியாக அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு முதலில் மனத் திரையில் ஓடும் சம்பந்தமில்லாத எண்ணங்களையெல்லாம் கவனிக்கவேண்டும். 

அதன்பின் அவற்றை ஒதுக்கித் தள்ளிக்கொண்டே வரவேண்டும். 

அதன்பின்னும் ஒரு எண்ணம்கூட தொடர்ந்து ஒரு வினாடிகூட மனதில் நில்லாமல் ஒதுக்கித் தள்ளி ஒரு தீப ஒளி அல்லது ஒரு புள்ளி இதில் ஒன்றை மனதில் எண்ணிக்கொண்டு அதை ஊடுருவி எண்ணத்தைச் செலுத்தவேண்டும். 

அப்போது ஒரு ஹம்மிங் ஒலி நமது மூளையில் இசைத்துக்கொண்டிருப்பது கேட்கும். 


அதைக் கவனிக்கத் துவங்கினால் மற்ற எண்ணங்கள் மறைந்து அந்த நாதத்தின் வலிமை அதிகரித்துக்கொண்டே போகும்! 

அதை ஓங்கார நாதம் என்றும் சொல்வார்கள்! 

அதன்பின் அதைத் தவிர வேறெந்த எண்ணமும் இருக்காது! 

அந்த நாதத்தில் நாம் முழுமையாகக் கரைந்து போவோம். 

இன்பதுன்பம், விருப்பு வெறுப்பு போன்ற எந்த உணர்வுகளுக்கும் அங்கு இடமில்லை! 

இந்தப் பிரபஞ்சப் பெருவெள்ளத்தில் ஒரு துளியாக நம்மை உணர்வோம். 

அந்த நாதத்தில் ஒரு துளி நம்மிடமும் ஒலிப்பதை அதில் நம் மனம் லயிப்பதை உணரலாம்.

இந்த அண்ட சராசரமும் மாபெரும் இயக்கமும் ஆன்மிக மொழியில் சொன்னால் ஆதிப் பரம்பொருளும் நாமும் வேறு வேறு அல்ல ஒன்றுதான் என்பதை உணர்வோம். 

ஸ்தூல வடிவங்கள் மறைத்து அங்கு நாதம் மட்டுமே நிலவும்! 

அப்படி உணர்வதே உண்மையான தியானம்! 

அப்படிப்பட்ட அனுபவம் ஏற்படாத தியானம் தியானமே அல்ல!

இந்த தியானம் என்பது ஏதோ ஒரு மதம் அல்லது வழிபாடு அல்லது ஆன்மிகம் சம்பந்தப்பட்டதாக அதிகம் பேசப்படுகிறது! 

உண்மை அது அல்ல! 

தியானம் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது என்றால் ஆன்மிகத்தை மறுக்கும் இறை மறுப்பாளர்களுக்கும் தியானத்துக்கும் சம்பந்தம் இல்லையா?

நிச்சயம் உண்டு என்பதே விடை! 

தியானம் என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவசியமானதும் தொடர்புடையதும் ஆகும். 

காரணம் மனிதன் மட்டுமே வேறுபட்ட பாதையில் பரிணாமவளர்ச்சி அடைந்தவன்!

மனிதன்மட்டுமே சிந்திக்கவும் அதைத் தொடர்ந்து பலவிதமான மனப் போராட்டங்களில் சிக்கித் தவிப்பவன்! 

மனிதன் மட்டுமே பல்வேறு விதமான நல்லதும் கெட்டதுமான பண்புகளை வளர்த்துக்கொண்டு ஒருவரை ஒருவர் முட்டி மோதி நிம்மதி அற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டு இருக்கிறான். 

மனிதனுக்கு மட்டுமே மனதைப் பக்குவப் படுத்தி அமைதியான வாழ்வுக்கு உறுதுணையாக மாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது.

மனிதமனம் மட்டுமே பல்வேறு அழுக்குகளால் நிறைந்திருக்கிறது! 

அவற்றைக் கழுவிச் சுத்தப்படுத்தவேண்டிய அவசியமும் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் உள்ளது! 

அதற்கான அற்புத உபாயம்தான் தியானம்! 

தியானம் ஒரு உன்னதமான மனப் பயிற்சி! 

அதைச் செய்வதன்மூலம் மனதைத் தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கிறோம். 

தியான நேரத்தில் உயர்ந்த எண்ணங்கள் எழுவதால் வாழ்வில் கடைப்பிடித்த பல தவறான பண்புகள் உணரப்படுகிறது! 

இயற்கைக்கும் மனித வாழ்வுக்கும் உள்ள உண்மையான இணைப்பை அறிவுபூர்வமாக உணர்த்துகிறது!....

எண்ணத்துக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாடுகளை உணர்ந்து எது சரி என்பதை உணர தியானம் கற்பிக்கிறது!.....

இத்தகைய உன்னதக் கோட்பாடான தியானத்தை மூட நம்பிக்கை என்ற குடுக்கைக்குள் அடைத்து வியாபாரம் செய்கிறார்கள்! 

அப்படி மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு  பேசப்படும் அனைத்தும்  வெற்றுப் பேச்சுக்களே!

அத்தகைய தவறான பொருட்களில் புரிந்துகொள்ளாமல் சரியான பொருளில் உணர்ந்து பின்பற்றினால் தியானம் என்பது உயர்ந்த ஒரு வாழ்க்கைப் பண்பு ஆகும்!.....

No comments:

Post a Comment