Saturday 11 April 2015

லிங்கம் மீது விழும் சூரிய ஒளி வேலூர் அருகே அபூர்வ நிகழ்வு!

வேலூர்: லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு, வேலூர் அருகே நிகழ்ந்து வருகிறது. வரும், 12ம் தேதி வரை, இதை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வேலூர் மாவட்டம், திருவலம் வள்ளிமலை அருகே விண்ணம்பள்ளி கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கருவறையில், லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு, ஆண்டுதோறும் பங்குனி, 23 முதல் 29 வரை, காலை, 6:15 மணி முதல், 6:45 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்வு, 850 ஆண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. கோவில் கருவறையில் லிங்கம் மீது, நேற்று முன்தினம் காலை, 6:25 மணி முதல், 6:45 மணி வரை சூரிய ஒளி விழுந்தது. இதை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு வரும், 12ம் தேதி வரை தொடரும். இந்த நாட்களில், பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து, 23வது கிலோ மீட்டரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. சூரியன், தட்சணாயண காலத்தில் இருந்து, உத்தராயணத்துக்கு மாறும் போது, லிங்கம் மீது, சூரிய ஒளி விழும் நிகழ்வு நடக்கிறது.


கட்டட கலைக்கு கட்டியம்:
 தொழில்நுட்பங்களோ, நவீன கருவிகளோ இல்லாத காலத்திலேயே, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் மட்டும், லிங்கம் மீது சூரிய ஒளி விழும் வகையில், இந்த கோவிலை திட்டமிட்டு கட்டியுள்ளனர். இது, தமிழக கட்டடக் கலைக்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.

No comments:

Post a Comment