Tuesday 14 April 2015

இசை பற்றி

லட்சக்கணக்கில் கட்டுரைகள் எழுதினாலும், இசை பற்றி முழுமையான சித்திரத்தை எழுத்தில் வடிக்க முடியாது. இது இசையின் சிக்கல் அல்ல. இசைக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு தரும் சிக்கல். சாம்ஸ்கி, க்ளாட் லெவி ஸ்ட்ராஸ் போன்ற அறிஞர்கள் மொழியியல் ஆராய்ச்சியில் இசைக்கூறுகளின் பண்புகளை விளக்கியுள்ளனர். ஆனாலும், மொழியியலின் அடிப்படைகள் தெரியாமல் இக்கட்டுரைகளுக்குள் நம்மால் நுழைய முடியாது.

நாகார்ஜுனனின் மொழியாக்கத்தில் இசையும் தொன்மத்துக்கானத் தொடர்பு பற்றிய விளக்கங்கள் உள்ளன. இக்கட்டுரை ரிச்சர்ட் வாக்னரின் ரிங் என்ற இசை-நாடகத்தை உதாரணமாகக் கொண்டு இசைக்கும் தொன்மத்துக்குமானத்
தொடர்பை விளக்க முற்படுகிறது. ரிங்கைக் கேட்காமல் இக்கட்டுரையை புரிந்து கொள்வது கடினம். இதனாலேயே, இசைக் கோட்பாடுகளை மொழியின் அடிப்படை வேர்களில் ஆராயும் இக்கட்டுரையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

டேனியல் பாரெம்பாய்ம் எழுதிய Everything is Connected தொகுப்பு இப்பிரச்சனையை வேறொரு கோணத்தில் ஆராய்கிறது. மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், இசையின் அடிப்படைகளை மொழியியல் மூலம் விவரிக்கவில்லை. மாறாக, மனிதனின் இயல்பிலிருந்து இசையின் அழகியலை அடைய முற்படுகிறது.

[இவர் எழுதிய Parallels and Paradoxes பற்றிய அறிமுகம் இங்கே]

அது எப்படி சாத்தியம்? சில உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

ஒரு இசையைக் கேட்பதற்கும், அதை இசைப்பதற்கும் உள்ள முக்கியமாக வித்தியாசங்களை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு காரியத்தை செயல்படுத்தும் முன் நாம் அவற்றைப் பற்றி தீர்க்கமாகச் சிந்திக்கிறோம். கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்குவதில் கூட ஒரு ஒழுங்கிருந்தால் மட்டுமே அக்காரியம் வெற்றி அடையும். கடைக்குச் செல்ல திட்டமிடல் வேண்டும். அதற்கு முன், தேவையான சாமான்களின் லிஸ்ட் முக்கியம். தேவையில்லாததை வாங்குவதில் வந்த காரியம் தடம் புரள வாய்ப்புண்டு. அதே போல், வாங்கிய சாமான்களுக்குண்டான சரியான பணமும் நம்மிடம் இருக்க வேண்டும். பணம் இல்லாமல் கடைக்குள் வாங்கும் நோக்கத்தோடு நுழைய மாட்டோம். இது நடைமுறை. இம்முறையில் எங்கு சறுக்கினாலும் திட்டம் நிறைவேறாது.

அதேபோல், ஒரு இசைத் தொடர் நிசப்தத்திலிருந்து தொடங்குகிறது. சத்தமில்லாத ஒரு கணம். அடுத்த கணம் இசையின் முதல் ஸ்வரம் இசைக்கப்படுகிறது. அடுத்தடுத்து வரும் மற்ற ஸ்வரங்களுக்கிடையே நிசப்தம் இருக்கலாம். தவறில்லை. ஆனால், நிசப்ததிலிருந்து சத்தத்திற்குச் செல்வதே இசைத் தொடக்கங்களின் ஒழுங்குமுறை. இனிமையாக ஒலிக்க ஸ்வரங்கள் குறிப்பிட்ட வரிசையில் தாவிச் செல்ல வேண்டும். கோர்வையில்லாமல் ஸ்வரங்களைத் தேந்தெடுத்தால் இசை இனிமையாக இருக்காது. அதே போல், இசை முடியும்போது நிசப்த்திலேயே முடிகிறது.

இது, கிட்டத்தட்ட ஒரு பந்தை உயரப் தூக்கிப் போட்டு பிடிப்பது போன்ற செயல். தரை மட்டம் - நிசப்தத்தைப் போன்றது. எறியப்படும் பந்து, புவி சக்தியை மீறிப் பல வேகங்களைக் கடப்பது போல், இசையும் பல ஸ்வர அடுக்குகளை வரிசையாக சந்திக்கிறது. உச்சிக்குச் சென்றவுடன்  பந்தின் நிலை ஆற்றல் சக்தி (Potential Energy) முழுமைப் பெறுகிறது. ஸ்வரங்களும் இப்படிப்பட்ட சக்தியுடன் இருக்கிறது. பந்து புவி ஈர்ப்புச் சக்தியால் தரையை நோக்கி வருவது போல், ஸ்வரங்களும் மெல்ல நிசப்தத்தை நோக்கி முறையாகப் பயணத்தைத் தொடங்குகின்றன. முறையில்லாமல் திடீரென ஸ்வரம் மாறினால் இரைச்சலாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

’இசையின் தடம்’ என்ற கட்டுரையில் இப்படிப்பட்ட பல உதாரணங்களை வாழ்விலிருந்து டேனியல் எடுத்துக்காட்டுகிறார். இசையில் பின்பற்றப்படும் ஒழுங்குமுறையை நம் வாழ்விலும் செயல்படுத்தலாம் என்பது இப்புத்தகத்தின் அடிப்படைச் சித்தாந்தம். இப்படியாக, இசையுடன் நம் வாழ்வுக்குண்டானத் தொடர்பை டேனியல் பல கோணங்களில் விவரிக்கிறார்.

*
டேனியல் பெர்லின் சிம்பொனிக் குழுவின் இசை ஒருங்கிணைப்பாளர் (Conductor). இஸ்ரேல் நாட்டில் பிறந்தவர். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளில் பயமில்லாமல் தன் கருத்தைக் கூறிவருபவர். இசை மூலம் சமாதானத்தை நோக்கி முதல் அடியை வைக்க முடியும் என்பதில் அதிக நம்பிக்கைக்கொண்டவர்.West-Eastern Divan என்ற இசைக்குழு மூலம் பல இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கலைஞர்களை ஒன்றாக இணைத்துள்ளார்.

வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது இசைக்கலைஞர்களுக்கு இன்றியமையாதது. அந்த ஒழுக்கமே வாத்தியக்கருவிகளை வாசிப்பதிலும் இயங்கும்.  ஒழுக்கம் என்றாலே கண்டிப்பு என எண்ணம் நமக்குள்ளது. ஆனால், ஒழுக்கத்தை ரசிக்க முடியும். அதற்கு ஒரு அழகியல் உள்ளது. உயிரை விட மேலான ஒன்றாகக் கருத முடியும். அளவுக்கதிகமான சுதந்திரத்தை அதனுள் அனுபவிக்க முடியும். இப்பண்புகள் இசை மூலம் நாம் உணர முடியும்.

இசை வெளிப்படுத்தும் இந்த ஒழுக்கத்தை நம் வாழ்விலும், சக மனித உறவுகளிலும் கடைபிடித்தால் மேன்மையை அடையலாம் என்பது டேனியலின் வாதம்.

இப்புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் பல பிரபலமான இசைக்கலைஞர்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் உள்ளன. அதில்  'இரு பாலஸ்தீனியர்களின் கதை' (A tale of two Palestinians) என்னைக் கவர்ந்த கட்டுரை.

ராம்சி ராமல்லா பகுதி பாலஸ்தீன முகாமில் பிறந்தவன். சலீம் இஸ்ரேல் நாட்டில் வளமான குடும்பத்தில் பிறந்தவன். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பகுதியில் நடக்கும் வன்முறைகளை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருபவன் ராம்சி. இப்பிரச்சனைகளை ஊடகங்கள் வழியாக மட்டுமே பார்த்து வளர்பவன் சலீம். இந்த இருவரும் இசை மூலம் ஒரே புள்ளியில் இணைந்தனர்.

இஸ்ரேலியர்களை பாலஸ்தீன மக்கள் வெறுப்பதால் காரணமில்லாமல் ராம்சியும் அவர்களை வெறுக்கத் தொடங்குகிறான். சிறு வயதில் தெருக்களில் இருக்கும் கற்களைச் சேகரித்து, இஸ்ரேலியர்களை நோக்கி வீசுவதை விளையாட்டாக மேற்கொள்கிறான். தன் பதின்ம வயது வரை இச்செயல்களுக்கான காரணங்கள் இவனுக்குப் புரிவதில்லை. ஒரு நாள் ராம்சியின் மாமா அவனுக்கு வயலினைப் பரிசாக அளிக்கிறார். கற்களை கீழேபோட்டு விட்டு இசையைத் தேர்ந்தெடுக்கிறான்.

வசதியான குடும்பத்தில் வளரும் சலீம் சின்ன வயதிலிருந்து இசைப் பயிற்சி மேற்கொள்கிறான். மேற்படிப்புக்காக ஜெர்மனிக்கு செல்லும்போது, யூத இனவாதப் பிரச்சனைகளில் சிக்கிகொள்கிறான். கசப்பான அனுபவங்களுடன் மீண்டும் இஸ்ரேலுக்கே திரும்புகிறான். அங்குள்ள இசைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்துகொள்கிறான்.

இச்சிறுவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் சக மனிதரின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். இசையைத் தேர்ந்தெடுத்து, இச்சிக்கல்களைத் தவிர்க்க முற்படுகிறார்கள். இப்போது இவர்கள் இருவரும் டேனியலின் West-Eest Diwan குழுவில் இசைக்கலைஞர்களாக இருக்கின்றனர்.

இஸ்ரேல் மக்கள் பாலஸ்தீனர்களின் மேல் வெளிப்படுத்தும் வெறுப்பையும், பாலஸ்தீன மக்களின் ஜீவாதர உரிமை மீறல்களையும் கச்சிதமாக இக்கதை விவரிக்கிறது. டேனியல் இரு குழுக்களின் பிரச்சனைகளை சமநிலையாக ஆராய்கிறார். இசை மூலம் இக்குழுக்கிடையே சமாதானத்தை உருவாக்க முடியாது என்றாலும், தன் இசைக் குழு அதற்கான முன்மாதிரியாக இருக்க முடியுமென திட்டவட்டமாக நம்புகிறார்.

மிக நிறைவான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தாலும், இப்புத்தகம் இசையின் இயல்புகளை இன்னும் ஆழமாக விவரித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இப்புத்தகத்திலிருந்து சமூகத்தில் இசைக்காண பங்கை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இசை பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்ற எண்ணம் மெல்ல நம்மிடையே கலைந்து வருகிறது. மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் இசைவழி சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதே போல், தினமும் இசை கேட்பது மன அமைதிக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இசையின் சாத்தியக்கூறுகள் விரிவடையும் இக்காலகட்டத்தில், இசை மூலம் தனி மனித ஒழுக்கம், சக மனித அன்பு நிலைபெறும் என்ற நம்பிக்கையை இப்புத்தகம் தருகிறது.

முடிவில் ஒரு கடைச்செருகல் -

நம் நாட்டில் இசை மூலம் பல அதிசயங்கள் நடந்துள்ளன. ராகங்கள் மூலம் மழை வரவழைத்திருக்கிறார்கள். இசையைக் கேட்பதினால் செடிகள் செழுமையாக வளர்ந்திருக்கின்றன. இன்று இவை நடப்பதில்லை என்றாலும், கண்டிப்பாக கட்டுக்கதை கிடையாது. மேற்கு நாடுகளின் ஆராய்ச்சியைக் கொண்டு இவற்றை இன்று நிரூபிப்பது நாம் தப்ப விட்ட தருணங்களாகும். ஏனென்றால், ராக இயல்புகளைப் பற்றி பல புத்தகங்கள் இருந்தாலும், அவை இன்று புரிவதில்லை. இந்திய இசைப் பற்றி எளிமையான மொழியில் பல புத்தகங்கள் வெளி வந்தால் மட்டுமே நம் இசையின் மதிப்பு நமக்கே புரியும். அதற்குப் பிறகே இந்திய சாஸ்த்ரீய இசையின் சிறப்புகளைப்  பிரபலப்படுத்த முடியும்.
AthloN:
ஹேப்பி!, நல்லா எழுதி இருக்கீங்க.
அமைதி, உயிரோட்டம், தெய்வீக தன்மை இவை எல்லாமும் இசையில் அடங்கி இருக்கிறது.
இசை தரும் ஆனந்தத்திற்கு ஈடு இணை இருக்க இயலாது.
இசை என்பது  திகட்டாத இன்னமுது.

H4ppY:
இசையானது குழந்தைகளின் மூளை ஒலி நுண்ணுணர்வுத் திறனை அதிகரிக்கிறது. அதன் மூலம் அவர்களது மொழியைக் கற்கும் திறனை மேம்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொழியறிவு என்கிறபோது அதில் பேச்சும் அடக்கம்.

இது தொடர்பான ஆய்வை அமெரிக்காவின் சிகாகோ நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் மேற்கொண்டனர். அதில், மூளையின் அறிவு வளர்ச்சி நிலையில் இசையானது அதிகப் பலனளிப்பதாகக் கண்டறிந்தனர். அதிலும் குழந்தைகளுக்கு இசை அதிக நன்மை அளிக்கிறது. குறிப்பாக கற்றல் குறைபாடு மற்றும் ‘ஆட்டிச’ பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு,

இசைத் திறனுக்கும், இசை முறைமைகளைக் கிரகிக்கும் நரம்பு, மண்டலத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இசைக் கருவியை வாசிப்பது, மொழியைக் கற்கும் குழந்தையின் திறனில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதும் தெரிய வந்திருக்கிறது.

ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்த பேராசிரியை நினா கிராஸ் கூறுகையில், இசைக் கருவியை வாசிப்பது, மூளைத் தண்டின் தானியக்கச் செயல்முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூளையின் கீழ் பகுதியான இது, சுவாசித்தல், இதயத் துடிப்பு ஒலிகளுக்கான ‘ரியாக்ஷன்’ ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிப்பதாகும்.

அவர் மேலும் கூறுகையில், “இசை வாசிப்பது, ஒலி சம்பந்தப்பட்ட திறனைத் தூண்டி வளர்க்கிறது. அதாவது ஒருவரது சொந்த இசைக் கருவியின் ஒலி, அதன் இனிமை, ‘ரிதம்’ ஆகியவற்றை ஈர்க்கும் திறனை, இது சத்தமான வகுப்பறைகளில் பேச்சை வளர்த்துக்கொள்வதற்கு குழந்தைகளுக்கு உதவும். குரலில் சிறுசிறு மாற்றங்களை, ஏற்ற இறக்கங்களை செய்வதன் மூலம் குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்துவது என்ற பேச்சு நுணுக்கத்தைத் துல்லியமாக அறிய குழந்தைகளுக்குக் கை கொடுக்கும்” என்று விளக்கமாகத் தெரிவிக்கிறார். ‘ஆட்டிசத்தால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகள் இசைக்கு நன்றாக பதில் செயல்பாட்டைக் காட்டுகிறார்கள். அவர்கள் இசையை விரும்புவது நன்றாகத் தெரிகிறது என்று அமெரிக்க ‘ஆட்டிச’ கழகத்தின் பேச்சாளர் பெண்மனி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, குழந்தைகள், தொடர்புகொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் கலந்துரையாடவும், ‘ரிலாக்ஸ்’ ஆகவும் உணர்வுகளையும் வெளிப்படுத்தவும் இசை உதவுகிறது என்பது தெரிகிறது என்றார்.

இசைக்கு பல இனிய, நன்மை தரும் தன்மைகள் உண்டு, நோயாளிகளுக்கு நலமளிக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அது குழந்தைகளின் மொழியறிவை, மொழித் திறனை வளர்க்கவும் உதவுகிறது. என்பது ஆச்சரியமான விஷயம் தான்.
மயில்:
ஆமாம் ஹாப்பி இசை என்பது பிணி தீர்க்கும் மருந்து.
ஒரு தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு அந்த
தாய் உணவு ஊட்டுவது எத்துனை முக்கியமோ   அத்துணை
முக்கியம் தினமும் இசை தியானம் என்பது மிக மிக முக்கியமாம்.
ஒரு வைத்தியர் இதனை ஆணித்தரமாய் அடித்து சொல்கிறார். ஏன் என்றால்
இசையை கருவறையில் கேட்டு வளரும் குழந்தை மனதால் நல்ல பயிற்சி பெற்று
வளருமாம். அதன் சிந்தை ஒரு முகபடுத்த படுமாம்.  இதனால் அந்த குழந்தை தனி திறமை
பெற்று உறுதியான திடம் கொண்ட குழந்தையாய் சிறந்த அறிவாற்றல் உள்ள குழந்தை திகளுமாம்
எந்த பெற்றோருக்கு தன குழந்தை சிறந்த குழந்தையாய் வளர்வதில் மறுப்பு இருக்கும்?
H4ppY:
இசை என்ற தமிழ் வார்த்தைக்கு நிறைய அர்த்தம் உண்டு. சராசரியாக இசை என்ற வார்த்தையை ஒலி என்றும் பாடல்கள் என்றும் பயன்படுத்துகிறோம். இசை என்பதன் மூல அர்த்தம் இணங்குவது, ஆனந்தம் கொள்வது என்பதாகும்.

திருவள்ளுவரும் இசைபட வாழ்தல் என்கிறாரே அப்படி என்றால் பாடிகொண்டே வாழ்வதை குறிப்பதில்லை. பிறருக்கு தர்மம் செய்வதன் மூலம் மனநிறைவுடன் ஆனந்தமாக வாழ்வதை இசைபட என்கிறார். பிறர் போற்ற வாழ்வது என இத்திருக்குறளுக்கு அர்த்தம் போதிக்கபடுகிறது. சான்றோர்கள் பிறருக்கு தானம் செய்து பெருமை தேடிக்கொள் என கூறி இருக்கமாட்டார்கள்.

இசை என்பது ஒருவித யோக முறை. யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். இறைநிலையுடன் ஒன்றிணைந்து இரண்டற கலப்பதற்கு இசை என்ற யோக முறை மிக முக்கியமானது.

இசை என்றவுடன் அதை பற்றி சில விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இசை என்பது மொழிகளை கடந்தது, மதங்களையும்... ஏன்.. மனித நிலையையும் கடந்தது.

இங்கே இசை என நான் குறிப்பிடுவது வார்த்தைகள் கொண்டு உருவாக்கபட்ட பாடல்களின் வடிவம் அல்ல. சங்கீதத்தில் ஆலாபனை என கூறுவார்களே அது போல வார்த்தைகள் அற்ற ஒலியின் ஏற்ற இறக்க நிலையே ஆலாபனை.

இசை என்பது இறைவனின் வடிவம் என்கிறது மாண்டூக்ய உபநிஷத். இசை என்பதை நாதம் என பொருள் பட கூறுகிறார்கள். ப்ரணவம் இறைவனின் நாத வடிவம். முதலில் நாதம் பிறகே அனைத்து படைப்புகளும் விரிந்தது.

நாதம் என்ற ப்ரணவத்தின் கூறுகளான ஆ - உ- ம என்ற ஒலிகளின் மூலமே அனைத்தும் வெளிப்பட்டது. நம் மொழிகள் கலாச்சாரம், சிந்தனை அனைத்தின் உள்கட்டமைப்பும் இந்த ஒலியாலேயே விவரிக்க முடியும்.

நான் கூறிய ப்ரணவ மந்திரம் என்ற கருத்து ‘இந்து மதத்தின்’ கூறுகள் அல்ல. வேதம் என்ற ஆன்மீக நிலை இந்து மதம் என்ற வடிவம் கொண்டவுடன் தன் சுயத்தை இழந்து விடும் அபாயத்தை உணர்ந்து தன்னை மதத்திலிருந்து விடுவித்துக்கொண்டது.

எங்கே ஆன்மீகம் மத வடிவம் எடுக்கிறதோ அங்கே இசை என்ற நாதம் தன்னை விடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறது என்பது என் புரிதல். பாரத தேசத்தில் தோன்றிய ஞானிகள் இசையுடன் தங்களை மிகவும் ஒன்றிணைத்து கொண்டே இருந்தனர். மீரா, புரந்தர தாசர், ஞான சம்பந்தர் மற்றும் ஏனைய ஞானிகளை வரிசைபடுத்திக் கொண்டே செல்லலாம்.

இசை என்ற பாடல் வடிவம் சன்யாச வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விலக்கபட்டு இருக்கிறது. சன்யாசிகள் பாடல், நடனம் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றில் மூழ்கக் கூடாது என கூறுவதன் காரணம் அவர்களின் மனம் என்ற தளத்தில் விகாரங்கள் (உணர்வுகள்) தோன்றிவிடக் கூடாது என்பதுதான். சன்யாச நிலை என்ற சூன்ய நிலையில் தோன்றிய மதங்கள் இசையை விலக்கின.

உலகின் சில மதங்கள் கூட தவறுதலான புரிதலால் இசையை விலக்கிவிட்டது.

சமணம்,இஸ்லாம் மற்றும் சில கிருஸ்துவ பிரிவுகள் இதில் அடக்கம்.

நாதத்தை (ஓசையை) பெட்டியில் அடைக்கமுடியாது என்பதை போல மதத்தால் இசையை அடக்க முடியாது. அதனால் தான் மதங்கள் இவ்வாறு விலக்கினாலும் ஞானிகள் இறைவனுடன் கலக்கும் பொழுது இசையை ஒரு பாதையாக தேர்ந்தெடுத்தனர். இதனால் இஸ்லாமிலிருந்து சூஃபியும், சமணத்திலிருந்து ஜென் என்ற ஞான மார்க்கங்கள் கிளைத்தன.

நாதமே கடவுளின் வடிவம் என்றால் மதத்தில் இருந்து நாதம் வெளியேறிவிட்டது என்றால் அப்பொழுது மதத்திற்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

இசைவடிவில் இறைவனை காண முற்பட்டால் உலக சமுதாயம் ஒரே இறைவனை காண முடியும்.

மதங்களை கடந்த ஆன்மீகம் அவசியமானது. மதங்களையும் உருவங்களையும் கடந்த இறைநிலையே முழுமுதற் கடவுளான பிரம்ம நிலை என்கிறார் திருமூலர்.

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

-----------------------------------------திருமந்திரம் - 105

ஒரு இசை வடிவத்தை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால் அந்த இசை உங்களை ஈர்த்தது என்பதல்ல. உங்களுக்குள் இருக்கும் இறைநிலை ஒலிவடிவில் இருக்கிறது. அந்த ஒலி தன்னை போன்ற இசைவடிவை வெளியில் இருந்து ஈர்த்தது.

உங்கள் மனம் மற்றும் ஆன்மாவின் நிலைக்கேட்ப இசை உங்களை ஈர்க்கும். நீங்கள் மிகவும் கடினமான தன்மையில் இருந்தால் கடினமான இசையும், மிகவும் மென்மையாக இருந்தால் மெல்லிசையும் உங்களை கவரும். எளிமையாக சொன்னால் நீங்களே இசைதான். வெளியே கேட்கும் இசை உங்கள் உள் இசையை தூண்டுவதற்காத்தான்.

மதம்- இசை - இறைவன் என நிறைய பேசிவிட்டோம். உங்களுக்கு ஒரு சின்ன போட்டி...

கீழே இருக்கும் 2 நிமிட ஒலிக் கோப்பில் மதம் சார்ந்த புனித ஒலி இருக்கிறது. இந்த ஒலியை முழுமையாக கேட்டு அது எந்த மதம் சார்ந்தது என கூறுங்கள்.

நாதம் என்ற நாதனை நாடினால்
நாளும் உன்னுள் நாதத்தை அறிவாய்
நாதமும் நாதனும் ஒன்றாகி
ஓம்கார நாதனாவாய்.

இசை என்றவுடன் சிலர் அதில் மனோமயக்க விஷயங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். பாரத கலாச்சாரத்தில் ஆன்மீகம் என்பது இசையின் முதுகெலும்பு கொண்டே வளர்க்கபட்டது. இசையை மாயை என காண்பவர்களும் , இசையை உன்னதமாக காண்பவர்களுக்கும் இடையே இருப்பது சின்னஞ்சிறிய வித்தியாசம் தான். ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். அது போல இசையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம்.

சிலர் இசையை மருத்துவ நிலையில் பயன்படுத்த முடியும் என ஆய்வு செய்து இருக்கிறார்கள் (Music therapy). மருந்து என்பது நம்மில் இல்லாத குறைவிஷயங்களை வெளியில் இருந்து கொடுப்பது அல்லவா? ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு மருந்து கொடுப்பார்கள். ஆனால் இசை மருத்துவம் என்பது அடிப்படையில் தவறு என்பேன். நம்மில் இசை இல்லா நேரம் எதுவும் இல்லையே..! அப்படி இருக்க எவ்வாறு வெளியில் இருக்கும் இசை நம்முள் நுழைந்து நம்மை குணமாக்கும்.?

வேத மந்திரங்கள் ஒருவித ஒலி அலையை ஏற்படுத்துகிறது. வேத ஒலி ஒரு இசையின் வடிவம்தான். வேதத்தை சுருதி என அழைக்கப்படுவதன் காரணமும் அதுதான். வேதம் என்பது மதம் கடந்தது என நான் அடிக்கடி கூறகாரணம் இந்த ஒலிவடிவம் தான்.

குயில் கூவுகிறது, பசு சப்தம் எழுப்புகிறது, மயில் அகவுகிறது இந்த ஒலி எல்லாம் எந்த மதத்தை சார்ந்தது? அப்படித்தான் வேத ஒலிகளும். சென்ற பதிவில் ஒரு ஒலிக்கோப்பை வைத்திருந்தேன். அது 2 நிமிடம் ஒலிக்கக்கூடிய ஒலி அலைகள். அதில் 1.06 நிமிடத்திற்கு நான்கு வேதத்தில் ஒன்றான சாம வேதமும், முடிவு வரை குரானில் தேனீ பற்றி ஓதும் வரிகளும் இருக்கிறது.

குரல் மற்றும் ஒலி தெளிவு தவிர பிற விஷயங்கள் ஒன்றுபோலவே இருக்கிறது பார்த்தீர்களா? இதில் சிலர் நாங்கள் இந்து என சொல்லி மார்தட்டும் எத்தனை பேருக்கு இது சாம வேதம் என தெரியும்? வேதத்தின் சுருதியை அறியாமல் இவர்கள் இந்து தர்மத்தை காப்பாற்றுகிறேன் என மசூதியை இடிக்கிறார்கள். இவை இரண்டையும் கேட்டு மகிழ்ந்திருந்தால் அதன் ஓசையில் இருக்கும் ஒற்றுமையை கேட்டு லயித்திருந்தால் உடைக்கவும் வேண்டாம் அதற்கு கமிஷனும் வேண்டாம்.

சாம வேதம் என்பது சங்கீத ரூபமாக உச்சரிக்கபடுகிறது. அதில் இருக்கும் பல வார்த்தைகள் ஓசைக்காகவே அமைந்திருக்கிறது. இராவணன் சாம வேதத்தை வீணையில் வாசிக்கும் ஆற்றல் பெற்று இருந்தான் என்கிறது ராமாயணம். அவன் சாமகாணம் வாசித்தால் கைலாய மலையே உருகுமாம். இது போல சாம கானத்தின் ஆற்றலை பலவாறு புகழ்ந்து இருக்கிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணரும் பகவத் கீதையில் நான் வேதத்தில் சாமமாக இருக்கிறேன் என்கிறார். அதில் இசையின் வடிவாக இருக்கிறேன் என்றும் பொருள் கொள்ளலாம். தச அவதாரங்களில் இசைக் கருவியை கையில் வைத்திருக்கும் அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான்கு வேதமும் தற்சமயம் மின் ஒலியாக கிடைக்கிறது. இலவசமாக அதை கணினியில் கேட்கமுடியும். ஆனாலும் நாம் வேட்டைக்காரனை விடுத்து வெளியே வருவதில்லை. :)

ஆன்மீக நிலையில் முன்னேற்றம் அடையும் பொழுது எல்லோரும் தசவித நாதம் என்ற நிலையை அடைவார்கள். நம்முள் பத்துவிதமான ஒலிகள் கேட்கத்துவங்கும். அவ்வொலி மத்தளம், பறை, பேரிகை, துந்துபி என பல்வேறு இசை கருவிகளை போல இருக்கும்.

இந்நிலையை உணரும் பொழுது நம் மூன்னோர்கள் தங்களில் உணர்ந்த ஒலியை எப்படி வெளியே கருவிகளாக செய்தார்கள் என்று ஆச்சரியம் அடைவீர்கள். முன்பின் தெரியாத ஓசை நம்மில் கேட்கும்பொழுது நமக்கு நோய் வந்ததாக முடிவுக்கு வருவோம். வெளியே கேட்கும் ஓசைகள் உங்களுள் கேட்கும் பொழுது அதை பிடித்து மேலே செல்ல முயலுவோம். அதனால் அவற்றை வெளியே இசை கருவியாக உண்டு செய்தார்கள்.

பல்வேறு வகையாக ஒலி இறைவனின் ரூபம் என கூறினாலும் நாம் அதை உணர்ந்தால் தானே புரிந்துகொள்ள முடியும். எளிய தியான பயிற்சி மூலம் நீங்களும் ஒலி ரூபமான இறைவனை உணர முடியும். அதை முயற்சி செய்ய நீங்கள் தயாரா?

அமைதியான ஒரு அரை இருள் கொண்ட அறையில் அமருங்கள். உங்கள் முதுகு பகுதியை சுவரில் சாய்த்து உட்கார்ந்து கொள்ளுங்கள். ஐந்து முறை ஆழமாக சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். தொடர்ந்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்.

சில நிமிடத்தில் உங்கள் இதயத்தின் ஓசை மிகவும் நுட்பமாக உங்களுக்கு கேட்கத்துவங்கும். இந்த ஓசை உங்கள் காது என்ற புலனுக்கு கேட்’காது’. அது உங்களுக்குள்ளே கேட்கும். உங்கள் இதய ஓசையின் அளவை கவனியுங்கள். ஒரு ஓசைக்கும் அடுத்த ஓசைக்கும் இடையே உள்ள இடைவெளியை கவனித்த வண்ணம் இருங்கள். பிறகு அனைத்தும் தானாகவே நடக்கும்.

அதிகமாக நீங்கள் சாப்பிட்டுவிட்டு இந்த தியானத்தை செய்தால் உங்கள் தூக்கத்தில் எழும் நாதத்தை (குறட்டை ஒலி) பிறர் கேட்கத் துவங்குவார்கள். :)

இரயில் பயணங்களை நான் அதிகமாக தேர்ந்தெடுப்பதற்கு அதன் தாள லயம் ஒரு காரணம். ரயிலில் அமர்ந்து கண்களை மூடி அதன் தாளத்தை தியானம் செய்தபடியே பயணித்தது உண்டா? அருமையான ஒரு தியானவழிகாட்டி என்றால் ரயிலின் ஓசையை கூறலாம். அதே போல மாட்டு வண்டியும் சிறந்த கருவியே. அதில் அமர்ந்து பயணிக்கும் பொழுது நம்மை தியான நிலைக்கு இயல்பாகவே இட்டுச்செல்லும்.

அடுத்த முறை ரயிலிலோ மாட்டுவண்டியிலோ பயணிக்கும் பொழுது கண்களை மூடி அதன் தாளத்தில் தியானித்து பழகுங்கள். உங்களுக்குள் இருக்கும் நாதவடிவம் எங்கும் நிறைந்திருப்பது புரியதுவங்கும்.

எனக்கு ஒரு ரகசிய எதிரி ஒருவர் உண்டு. நான் பல மணி நேரம் உரையாற்றுவதையும், பல பக்கங்கள் எழுதுவதையும் அவர் சில வரிகளில் கூறிவிடுவார். அவர் பயன்படுத்தும் வார்த்தையும், கருத்தும் சில நேரங்களில் எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிடும்.

அவரின் வரிகளை படித்தால் செயலற்று கல்லாகிப்போவேன். அவரை போல கருத்துக்கள் எழுதமுடியவில்லையே என்ற ஆதங்கமே அவரை எதிரியாக்கியது. நீங்களும் அந்த எதிரியை தெரிந்து கொள்ளுங்கள். நான் இரு பகுதிகளாக எழுதிய இந்த கட்டுரையை அவரின் நான்கே வரி கள் மூலம் உணரலாம். அனைத்துக்கும் மூலமாக இருப்பதால் என் எதிரியின் பெயர் திருமூலன்.

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே
---------------------------------------------------------------திருமந்திரம் 30.


மண்ணாகவும், விண்ணாகவும், வேதமாகவும், இசையாகவும் இருப்பவனை நானும் காதலிக்க துவங்கிவிட்டேன்...
நீங்க? ? ? ?

No comments:

Post a Comment