Saturday 18 April 2015

ஆதிபகவன் முதற்றே உலகு

வான்புகழ் கொண்ட வள்ளுவன் என்று பாரதியால் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றளவும் வாழ்வின் நெறியாளுகைக்கு ஏற்ற நூலாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு. எனவேதான் தோன்றி ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் திருக்குறள் குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. திருக்குறள் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பொருட்களுள் ஒன்று பாயிரவியல்.
பாயிரம் - சொல் விளக்கம்:
தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய பேராசிரியர், அந்நூலுக்குப்

பனம்பாரணர் ‘வடவேங்கடம் தென்குமரி’ எனத் தொடங்கும் சிறப்புப் பாயிரம் எழுதினார் என்கிறார். இதிலிருந்துதான் உரையாசிரியர்கள் காலத்தில் (பேராசிரியரின் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு) பாயிரம் எனும் சொல்வழக்கு இருந்ததை அறியமுடிகிறது.
பாயிரம் என்ற சொல்லுக்குப் பலரும் பலவித விளக்கங்களை அளிக்கின்றனர். தமிழ் உணர்வாளரான தேவநேயப் பாவாணர் பயிர்தல் எனும் சொல்லினடியாய் பாயிரம் என்பது தோன்றிற்று என்கிறார். ‘பயிர்தல் - அழைத்தல்; பயிர்அம் - அழைப்பது; அது பாயிரம் ஆயிற்று’ என்று தன்னுடைய மரபுரையில் கூறுகிறார். ஆனால் பயிரம் என்பது பாயிரம் என்று மாறுவதற்கு இலக்கணவிதிகள் எதுவும் இல்லை.
சில வடமொழி உணர்வாளர்கள் பஹிரம் என்ற வடமொழிச் சொல் பாஹிரம் என்று மாறிப் பின்னர் பாயிரம் ஆயிற்று என்பர். ஆனால் பஹிரம் என்பது பாஹிரம் என்று மாறுவதற்கும், பாஹிரம் என்பது பாயிரம் என்று மாறுவதற்கும் எந்த விதியும் இல்லை. எனவே இந்தக் கூற்றும் பொருந்தாது. சிலர் பாய் இரு அம் எனும் விகுதிகள் இணைந்து பாயிரம் ஆயிற்று என்பர். வேறு சிலர் பாயிரம் என்பது காரணப் பெயரன்று; வரலாறு எனும் பொருள் தரும் இடுகுறிப் பெயர் என்பர்.
பாயிரவியல் என்ற பாகுபாடு வள்ளுவர் உண்டாக்கியதல்ல என்பது மட்டும் பெரும்பான்மை அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
பாயிரவியல் - சில குறிப்புகள்:
திருக்குறளில் பாயிரவியல் என்பது கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய முதல் நான்கு அதிகாரங்களை உள்ளடக்கியது. இந்த வரையறையிலும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. பாயிரம் என்ற சொல்லுக்கான விளக்கம் அளிப்பதிலேயே உரையாசிரியர்கள் மற்றும் அறிஞர்களிடையே பல வேறுபாடுகள் தென்படுகின்றன.
குறிப்பாக இப்பாயிரவியல் திருவள்ளுவர் எழுதியதல்ல என்பது வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் முடிபு. ஆனால் அவர் பாயிரவியலில் உள்ள முதல் மூன்றதிகாரங்களை மட்டுமே பாயிரவியலாகக் கொண்டு அதனை திருக்குறளின் ஒரு பகுதியாக ஏற்க மறுக்கிறார். நான்காம் அதிகாராமான அறன் வலியுறுத்தலை அறத்துப் பாலின் முதல் அதிகாரமாகக் கொள்கிறார் அவர்.
பாயிரவியலின் முதல் மூன்று அதிகாரங்களை வள்ளுவர் எழுதியதாக அவர் ஏற்காததற்கு சில காரணங்களைக் கூறுகிறார்.
1. முதல் மூன்றதிகாரக் குறள்களில் மற்ற குறள்களில் உள்ள செறிவு இல்லை.
2. பொருள் கொள்வதில் பல தடைகள் உள்ளவை; மெய்யுணர்வு  துறவு என்ற அதிகாரங்கள் நூலில் இருப்பதால் கடவுள் வாழ்த்தையும் நீத்தார் பெருமையையும் பாயிரவியலில் தனியே கூறத் தேவையில்லை.
3. மெய்யுணர்வு அதிகாரத்தில் காணப்படும் கடவுட் கொள்கைக்கும் கடவுள் வாழ்த்தில் கூறப்படும் கடவுட் கொள்கைக்கும் பொருத்தமில்லை.
4. வான்சிறப்பு எனும் அதிகாரம் பயனற்றது.
மேற்கண்ட காரணங்களைக் கூறி முதல் மூன்று இயல்கள் வள்ளுவரால் இயற்றப்பட வாய்ப்பில்லை என்றும் அவை பின்னால் வேறு யாராலோ இயற்றப்பட்டு திருக்குறளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது வ.உ.சி.யின் கருத்து. ஆனால் இக்குறைகள் இவ்வதிகாரங்களில் எங்கெங்கு காணப்படுகின்றன என்பது குறித்து அவர் விளக்காமல் வெறும் முடிபாக மட்டுமே கூறிச் செல்கிறார்.
வ.உ.சி.யின் கருத்துகளைத் தக்க ஏதுக்களைக் கூறி தண்டபாணி தேசிகர் தன்னுடைய திருக்குறள் உரைக்களஞ்சியம் நூலில் மறுக்கிறார். குறிப்பாக வான் சிறப்பு எனும் அதிகாரம் பயனற்றது எனும் கருத்தை தேசிகர் ஏற்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படையாய்த் திகழும் உழவுக்கு அடித்தளமாய் அமையும் வான்சிறப்பு பயனற்றது என்று கூறுவது ஒவ்வாத கருத்து என்பது அவர் வாதம். வள்ளுவர் வழியைப் பின்பற்றும் சிலப்பதிகாரம் ‘மாமழை போற்றுதும்’ என்று மழை வாழ்த்து கூறுகிறது. எனவே இவ்வதிகாரம் பின்னால் வேறு யாராலோ எழுதப்பட்டது என்பது ஏற்கக் கூடியதல்ல. இதை பாவாணரும் வலியுறுத்துகிறார்.
கடவுட் கோட்பாடு:
‘கடவுள்’ எனும் தமிழ்ச் சொல் தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கில் உள்ளது. சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றிலும் இந்தச் சொல் பயின்று வருகிறது. தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் தோன்றிய திருக்குறளில் கடவுள் எனும் சொல் எங்கும் சுட்டப்படவேயில்லை. பல்வேறு சமயங்கள் கூறும் கடவுள் பற்றிய கருத்துகளைத் தன்னுடைய குறள்களில் சுட்டிக் காட்டும் வள்ளுவர் ‘கடவுள்’ எனும் சொல்லை மட்டும் தன்னுணர்வுடனே தவிர்த்துள்ளார்.
அதே சமயம் கடவுள் எனும் சொல்லுக்குப் பதிலாக ‘தெய்வம்’ எனும் சொல்லைப் பல இடங்களில் (குறள் எண்கள் - 43, 50, 55, 619, 702) பயன்படுத்துகிறார். பாயிரவியலில் வாலறிவன், மலர்மிசையேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் போன்ற சொற்கள் கடவுட் தன்மை பொருந்தியனவாக திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
‘எல்லாவற்றுக்கும் மேலான முழுமுதற்கடவுள்’ என்னும் கடவுட் கோட்பாடு வள்ளுவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் எல்லா சமயங்களிலும் குறிப்பிடப்படும் கடவுளர்களுக்குரிய சாயல்களுடனே தன்னுøடைய கடவுட் கோட்பாட்டை வருவித்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. எனவேதான் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் அவர் கூறும் கருத்துகளை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்துடன் ஒப்புமைப்படுத்தி வள்ளுவரை அவரவர் சமயத்தைச் சேர்ந்தவராகக் கூறி விளக்கம் தர முடிகிறது.
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’                (குறள் - 1)
எனும் முதற்குறளில் உள்ள ‘ஆதி பகவன்’ எனும் சொல்லுக்குப் பல வித விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
இச்சொல் சிவனைக் குறிப்பிடுவதாக பரிப்பெருமாள், பரிமேலழகர், மு.வரதராசன் போன்றோர் குறிப்பிடுகின்றனர். சருவக்கியன் எனும் சைனக் கடவுளைக் குறிப்பிடுவதாக கவிராசர் கூறுகிறார். சூடாமணி, பிங்கலந்தை நிகண்டு, சூளாமணி, சிலப்பதிகாரம் ஆகிய சமண நூல்களின் துணையுடன் இச்சொல் அருகனைக் குறிப்பிடுவதாகவும் சில அறிஞர்கள் கருதுவர்.
இவை மட்டுமின்றி, ஆதி பகவன் என்பது வள்ளுவரின் தாய், தந்தையரைக் குறிக்கும் சொல் என்பாரும் உண்டு. ஆனால் இதைப் பலரும் ஏற்பதில்லை. உலகப் பொதுமறையாய் ஒரு ஒப்பற்ற நூலை இயற்றியவர், தன்னுடைய வரலாற்றைக் கூற விழைந்திருக்க மாட்டார் என்பது அவர்களின் கருத்து. இது ஏற்புடையதாகவே தோன்றுகிறது.
இரண்டாம் குறளில் வரும் ‘வாலறிவன்’ எனும் சொல்லும் மிகுந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சொல். மெய்யான அறிவானவன் என்பதையே இச்சொல் நேரடியாகச் சுட்டுகிறது. ஆயினும் மெய்யான அறிவு எது என்பதில் உள்ள சிக்கலான விளக்கங்களைக் கொண்டு இச்சொல்லுக்கு சமயம் சார்ந்த பலவேறுபட்ட விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடும் இன்னொரு சொல் ‘மலர்மிசை மேகினான்’ என்பது. இச்சொல்லுக்கும் உரையாசிரியர்கள் அவரவர் கொள்கை நிலைக்கேற்ப சமயம் சார்ந்த விளக்கங்களை அளிக்கின்றனர். பக்த சனங்கள் இட்ட புஷ்பத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் சிவன் ஸ்ரீபாதத்தை குறிப்பிடுவதாக பரிதியார் கூறுகிறார். மலரின் மேல் நடந்தவன் என்று கூறும் மணக்குடவரின் உரை, தேவ மலரான தெய்வத் தாமரை மீது நடந்த அருகதேவனைக் குறிப்பது போல் உள்ளது. இது மணக்குடவரை சமணர் என்று கருத வைக்கிறது. தேவமலரில் நடந்த சருவக்கியன் என்று சமணச் சார்புடன் உரை தருகிறார் கவிராசர்.
மாயாதேவியின் வயிற்றிலிருந்து வலது விலாப்புறவழியாக வந்தபோது கவுதமபுத்தர் நீலத்தாமரையின் மேல் ஏழடி நடந்தார் என்று புத்தசரிதம் கூறுகிறது. இந்தக் கூற்றை வைத்து மலர்மிசையேகினான் என்பதற்கு பவுத்த விளக்கமும் அளிக்கமுடியும்.
கடவுளுக்கு உருவமோ குறியீடுகளோ தந்து தன்னுடைய சமயம் குறித்த தெளிவை வள்ளுவர் அளித்துவிடவில்லை. கடவுள் வாழ்த்துப் பகுதியில் சுட்டப்படும் வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் போன்ற சொற்களையும் எந்த சமயத்தின் சாயலுமற்ற ஒருவித பொதுமைத் தன்மையுடனே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.
மழையின் மேன்மை:
மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக நடக்கும் என்பது சமூக அறவியலாளர்களின் கணிப்பு. உலகம் உயிர்த்திருக்க நீர் எந்தளவுக்கு அவசியம் என்பதை  நீரின்றியமையாது உலகு என்று ஒற்றை வரியில் உணர்த்தியவர் வள்ளுவர். உலகத்தின் நிலைப்பாட்டுக்குத் தேவையான நீர்வளத்துக்கு ஆதாரமாக இருக்கும் மழையின் மேன்மையை பாயிரவியலின் இரண்டாம் அதிகாரமான வான்சிறப்பில் கூறுகிறார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக வள்ளுவர் மழைக்கே முதன்மை அளித்திருக்கிறார். வள்ளுவர் கால தமிழ்ச் சமூகம் வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. அக்காலச் சமூகத்தில் உற்பத்தி என்றாலே அது விவசாய உற்பத்திதான்.
வள்ளுவர் ஒரு சமணர் என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாக உள்ளது. அவ்வாறு கருதுவதற்கான அகச்சான்றுகள் திருக்குறளில் ஏராளம் இருப்பது உண்மைதான். ஆனால் தன்னுடைய திருக்குறளில் வேளாண்மை எனும் தொழிலுக்கு அவள் அளிக்கும் அளப்பரிய முதன்மையிடம் அவ்வாறு எண்ணுவதில் தடையை உண்டாக்குகிறது.
சமணம் விவசாயத் தொழிலை ஏற்பதில்லை. அதன் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான கொல்லாமையை விவசாயத்தில் கடைபிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே சமணம் வேளாண் தொழிலுக்குப் பதிலாக வணிகத்தை முன்வைத்தது. சமணரான இளங்கோவடிகள் வணிகப் பெண்ணை மையமாக்கிப் படைத்த சிலப்பதிகாரம் இதற்குத் தக்க சான்று. ஆனால் சமணராகக் கருதப்படும் வள்ளுவர் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் வேளாண் தொழிலுக்கு அடிப்படைத் தேவையான நீர்வளத்தை அளிக்கும் மழைக்கெனத் தனி அதிகாரம் வகுத்து எடுத்துரைக்கிறார். மழையின்றி உற்பத்தி இல்லை என்பதை
‘ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்’
எனும் குறளில் தெளிவாக எடுத்துரைக்கிறார். மழையின்றிப் போனால் உலகில் அறம் கெடும் என்பதை
‘தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்’
என்கிறார். வேளாண் தொழில் மீதான வள்ளுவரின் அக்கறையும் ஈடுபாடும் வான்சிறப்பு அதிகாரத்தில் தெற்றென விளங்குகிறது.
துறவின் இலக்கணம்:
பாயிரவியலில் மூன்றாம் அதிகாரமான நீத்தார் பெருமை துறவின் மேன்மையைப் பேசுகிறது. முதல் அதிகாரத்தில் அறிவுக்குப் புலனாகா இடத்தில் நின்று உலகைக் காக்கும் கடவுளுக்கு முதலிடம் அளிக்கும் வள்ளுவர், இவ்வுலக வாழ்வின் நிலைப்பாட்டுக்கு தேவையான மழைக்கு இரண்டாம் இடத்தை அளித்துள்ளதைப் போன்றே, இவ்விரண்டு நிலைகளையும் ஒன்றுடன் ஒன்று உறவுப்படுத்தும் துறவறத்தை மூன்றாம் அதிகாரமாக வைத்துள்ளார்.
அதாவது இவ்வுலக வாழ்வில் தன்னுடைய இருத்தல் பிறப்பினால் உறுதிப்பட்ட நிலையில் அதன் தளைகளிலிருந்து விடுபட்டு இறையை அடையும் வழியான துறவறத்தை இவ்வதிகாரத்தில் வலியுறுத்துகிறார். அவ்வாறு இறையை அடைவதையே வீடு என்று சமயங்கள் பலவும் வலியுறுத்துகின்றன. வள்ளுவரின் இந்த எண்ண ஓட்டத்துக்குச் சான்றாக
‘இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு’
எனும் குறள் அமைந்துள்ளது. சமயம் குறித்த வள்ளுவரின் கோட்பாடுகளை ஆராய்வதற்கு ‘நீத்தார் பெருமை’ முதன்மையாதாரமாக அமைகிறது.
அறவழி வாழ்வு:
இறைவனை அல்லது இறைநிலையை அடைவதற்குத் தக்க வழிமுறையான துறவு குறித்து நீத்தார் பெருமையில் கூறும் வள்ளுவர் அதற்கடுத்த நிலையில் இவ்வுலக வாழ்வியலில் ஈடுபடும் இல்லறத்தார்க்குத் தேவையான அறம் குறித்து அடுத்த அதிகாரமான அறன் வலியுறுத்தலில் பேசுகிறார். மனத்தளவில் கூட குற்றமில்லாத ஒழுக்க நிலையையே அறம் என்ற சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர்.
‘மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற’
எனும் குறளில் அவர் சொல்ல விழைவது இதைத்தான். அறம் எனும் சொல்லை கடவுளுக்கு இணையான ஒன்றாக அவர் பல குறள்களில் பயன்படுத்துகிறார். துறவறத்தார் கடவுளை அடைவதை உயரிய நோக்காகக் கொள்வதைப் போல இல்லறம் பேணுவோர் அறம் தவறாது வாழ்தலை உயர்ந்த நோக்காகக் கொள்ள வேண்டும் என்பதே அவர் வலியுறுத்த விரும்பும் கருத்து எனலாம்.
நிறைவு:
திருக்குறளில் இடம்பெறும் பாயிரவியல் குறித்த ஆய்வுகள் முடிவின்றி தொடர்வதாய் உள்ளன. பாயிரவியலில் உள்ள அதிகாரங்கள் திருக்குறளின் ஒட்டுமொத்த கருத்தோட்டத்தின் சுருக்கமான முன்வரைவு (Draft) போல் அமைகின்றன. வள்ளுவரின் கடவுட்கொள்கை குறித்து அறிய கடவுள் வாழ்த்துப் பகுதி நுணுக்கமான சில விவரணைகளைத் தருகிறது. உலகம் நிலைப் பெறத் தேவையான மழை குறித்து இரண்டாம் அதிகாரமான வான்சிறப்பில் கூறுகிறார். ‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்’ என்பது போல் உயிர்கள் இறைநிலை எய்துதற்குத் தேவையான துறவெனும் அறவழி குறித்து நீத்தார் பெருமையில் பேசுகிறார். அவ்வாறன்றி இவ்வுலக வாழ்வில் நின்று விட்ட உயிர்களுக்கும் ஒழுக்கம் தவறாமையைப் போதித்து கடவுளுக்கு இணையாக அறம் எனும் உயரிய இலக்கை அவை அடைய வேண்டும் என்று நான்காம் அதிகாரமான ‘அறன்வலியுறுத்தல்’ எனும் பகுதியில் சுட்டிக் காட்டுகிறார்.

உதவிய நூல்கள்:
1.    குறள் கூறும் சமயம், காமாட்சி சீனிவாசன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1979.
2.    திருக்குறள் உரைக்களஞ்சியம், அறத்துப் பால் - பாயிரவியல், ச.தண்டபாணி தேசிகர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1981.
3.    திருக்குறள், பரிமேலழகர் உரை.

No comments:

Post a Comment