Saturday, 18 April 2015

சித்தர்களின் உளவியல்

சமூகத்தின் உள்ளடக்கங்களில் எதிர்மறை அம்சங்கள் தவிர்க்க இயலாதவை. என்றாலும் இவற்றுக்கு எதிரான குரல்கள் எழுவதும் எல்லாக் காலகட்டத்திலும் தவிர்க்க முடியாதது. தமிழ்ச் சூழலில் இத்தகைய எதிர்ப்பபுகளை நிகழ்த்தியவர்களுல் சித்தர்களுக்குத் தனியிடம் உண்டு. அவர்கள் தம்மைச் சுற்றி நிகழ்ந்த அவலங்களைப் பொறுக்க முடியாமல் அவற்றிலிருந்து விடுபட்டு சமூக வெளிக்கு அப்பால் நின்று சாடியவர்கள். மக்கள் படும் துயரங்களைக் கண்டு அவற்றுக்கான காரணத்தைத் தேடியலைந்த சித்தர்களின் மனம் நிலையாமைத் தத்துவத்தைக் கண்டடைந்து அதனைப் பறைசாற்றியது. வாழ்வின் அனைத்துக்
கூறுகளையும் கேள்விக்குட்படுத்தி அவர்கள் ஆராய்ந்தனர். 

உடல், உயிர், செல்வம், இளமை என எதுவுமே நிலையில்லாதது என்று இவர்கள் கூறினாலும் உடலைப் பேணும் சித்த மருத்துவம், மனதை வளப்படுத்தும் யோக மற்றும் தியான முறைகள், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சோதிடம் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். சித்தர்களின் உளச்செயல்பாடு இவ்விரு முரண்பட்ட தளங்களில் இயங்கியதற்காகன ஆழ்மன அசைவியக்கத்தை உளப்பகுப்பாய்வின் (Psychoanalysis) துணை கொண்டு ஒருவாறு விளங்கிக் கொள்ள முடிகிறது.

தமிழ்ச் சித்தர் மரபு:
தமிழ்ச் சூழலில் உருவான சித்தர் மரபின் சாயல்களை உலகின் பல்வேறு மரபினரிடமும் காண முடியும். சமய எல்லைக்குள்ளே நின்று இயங்கியவர்கள் மற்றும் அதனைக் கடந்து வெளியே நின்று இயங்கியவர்கள் என்று இருதிறப்பட்ட சித்த மரபுகளை அறிய முடிகிறது. தமிழகச் சூழலில் சமூகத்தின் அனைத்து எதிர்மறைக் கூறுகளுக்கும் அடிநாதமாய் இருந்து இயக்குபவை சாதியும் சமயமும்தான். சமய எல்லைக்குள் நின்று இயங்கிய சித்தர்களும் கூட சமயம் சார்ந்து தோற்றம் பெற்ற பூசல்களையும் பிணக்குகளையும் கண்டித்துள்ளதை உணர முடிகிறது. சாதிய அமைப்பை ஏறத்தாழ எல்லாச் சித்தர்களுமே கண்டித்துள்ளனர்.

சமூக வெளிக்கு அப்பால் நின்று இயங்கிய இவர்களின் எதிர்க்குரல்களில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாமலே போயிருக்கக் கூடும். பதிவு பெற்ற கூறுகளின் வழியே சித்த மரபின் அடிப்படையை ஒருவாறு வடித்துக் கொள்ள முடிகிறது. ‘தொல்காப்பியனார் காலத்து வாழ்ந்த சித்தர்கள் அறிவர் எனப் போற்றப் பெற்றனர். அன்னோர் ஞான யோக நெறிகளால் பெற்ற வெற்றித்திறம் அறிவன் வாகை என வழங்கப் பெற்றது’1 என்று க.வெள்ளைவாரணன் குறிப்பிடுகிறார். இதிலிருந்து தமிழ்ச் சித்த மரபு குறித்த பதிவுகள் தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கி விட்டதை உணர முடிகிறது.

தமிழ்ச் சித்தர்களைப் பதினெண் சித்தர்கள் என்று வழங்குவது பொதுவான மரபு. என்றாலும் சித்தர்களின் எண்ணிக்கை அதற்கும் அப்பாற்பட்டது. ‘சித்தர்கள் பதினெண்மர் என்று கூறுவது மிகவும் பழமையான வழக்காகும். ஆனால் இன்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர் சித்தர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்’ என்று கூறும் மு.வை.அரவிந்தன், இவர்கள் சிறப்பாக விளங்கிய காலம் பதினான்கு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை என்று குறிக்கிறார்.2

பதினெண் சித்தர்கள் எனும் எண்ணிக்கை வரம்பை உரைப்பது பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை எனும் நூலாகும். இந்த நூலில் சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரிகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், குறுமுனிவர், அழுகணிச் சித்தர், நந்தீஸ்வரர், ராம தேவர், கொங்கணவர், ரோமநாதர், திருமூலர், கருவூரார், பொதிகைச் சித்தர் ஆகிய பதினேழு சித்தர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இந்தப் பட்டியலில் விடுபட்ட பதினெட்டாவது சித்தர் காகபுசுண்டர் என்று மு.அருணாசலம் தன்னுடைய தமிழிலக்கிய வரலாற்றில் குறிப்பிடுகிறார்.

சித்தர்கள் குறித்த இத்தகைய எண்ணிக்கை வரையறை பாடல்களாகப் பாடிய சித்தர்களை மட்டுமே கொண்டு கூறப்படுகிறது. ஆனால் இலக்கியம் தவிர்த்து பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகளையும் சித்தர்கள் அளித்துள்ளனர்.
இலக்கியம் படைத்த சித்தர்களுள் தலையாயராக அனைவராலும் குறிப்பிடப் பெறுபவர் திருமந்திரம் எழுதிய திரூமூலர். இவர் தவிர, சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், அகப்பேய்ச்சித்தர், குதம்பைச் சித்தர், இடைக்காடர், அழுகணிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பிற்காலத்தே வாழ்ந்த வள்ளலார், பாரதியார் போன்றவர்களையும் சித்தர் மரபின் சாயல் பெற்றவர்களாகக் கூறுவதுண்டு.

தமிழ்ச் சூழலில் சித்த மரபின் தேவை:
சித்த மரபு என்பது தமிழ்ச் சூழலில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தொடர்ச்சியுற்று இருப்பதாகக் கூறப்பட்டாலும், பதிவு பெற்றுள்ள பெரும்பான்மையான சித்தர் பாடல்களின் தோற்ற அடிப்படையில் சித்த மரபு சிறப்புற்றிருந்த காலகட்டமாக கி.பி. 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைக் கொள்ளலாம். இக்காலகட்டத்தில் சோழ பரம்பரை முடிவுக்கு வந்து பிற்காலப் பாண்டியர் ஆட்சி தோன்றியது. இப்பாண்டியப் பேரரசும் பலமற்று வீழ்ந்து அன்னியர்களின் ஆதிக்கம் வலுப்பெறத் தொடங்கிய காலம். 

இஸ்லாமியர்கள், மராட்டியர்கள், நாயக்க வம்சத்தினர், ஐரோப்பியர் என்று தொடர்ச்சியான அன்னியத் தாக்குதல்களுக்குட்பட்டு தமிழ் மக்கள் அடிமைத் தளையில் சிக்குண்டிருந்தனர். நாட்டின் வளம் அன்னியர்களால் பெரிதும் சுரண்டப்பட்டது. உள்நாட்டுச் சிற்றரசர்களும் இவற்றை எதிர்த்துப் போரிட பலமின்றி சுரண்டல்களுக்குத் துணை போயினர். மக்களும் தங்களுக்குள் ஒற்றுமையின்றி சாதி, சமயச் சண்டைகளில் ஈடுபட்டு ஆதிக்கச் சக்திகளை மேலும் பலப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இச்சூழலைப் பொறுத்துக் கொள்ள இயலாத மனநிலையுடைய பலரும் சமூகத்திலிருந்து அன்னியமாயினர். சமூகத்தின் இழிநிலையைப் பொறுக்க முடியாமல் சமூக எல்லைகளுக்கு சமூக எல்லைகளுக்கு வெளியே சென்று காடுகளிலும் மலைகளிலும் திரிந்தனர். அவர்களுள் சிலர் தமக்கு முந்தைய சித்த பரம்பரையின் தாக்கம் பெற்றுச் சித்தர்களாக உருப்பெற்று பல பாடல்களைப் பாடினர். இப்பாடல்கள் மருத்துவம், சமூகம், சமயம், வான சாத்திரம், சோதிடம் எனப் பலதரப்பட்ட பொருள்களின் அமைந்தன.
‘ஆயிரக்கணக்கான சித்தர் பாடல்கள் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றன. யோகம், ஞானம், மருத்துவம், காயகற்பம், ரசவாதம், சோதிடம், மந்திரம், இந்திரசாலம் ஆகிய துறைகள் யாவற்றிலும் சித்தர்கள் பாடியுள்ளார்கள்’ என்று சித்தர் பாடல்கள் பற்றிக் குறிப்பிடுகிறார் கே.கே.பிள்ளை.3

சித்தர்கள் மக்களுடன் கலவாமல் விலகிநின்று செயல்பட்டாலும் அவர்களுக்கு மக்களைத் துன்பங்களிலிருந்து விடுதலையடையச் செய்தல் அல்லது அத்துன்பங்களை நீக்குதல் எனும் நேர்மறையான நோக்கம் இருந்தது. யாக்கை நிலையாமை குறித்துப் பாடினாலும் உடலைப் (யாக்கை) பேணிப் பாதுகாப்பதற்கான மருத்துவக் குறிப்புகளையும் தந்துள்ளனர்.

ஆன்மா எனப்படும் உயிருக்குத் தேவையான ஞானம், உடலுக்குத் தேவையான மருத்துவம் என இரண்டிலும் சித்தர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். என்றாலும் மனித வாழ்க்கை நிலையற்றது; மனித உடல் அழியக் கூடியது என்பன போன்ற எதிர்மறைச் சிந்தனைகளும் சித்தர்களுடைய தத்துவ மரபின் அடிப்படையாய் அமைகின்றன. இந்த முரண்பாடுகளின் அடிப்படையை வாழ்வுணர்ச்சி மற்றும் சாவுணர்ச்சி எனும் இருமை எதிர்வுக் (Binary oppositions) கோட்பாட்டை வைத்து விளக்கலாம். இவ்விரு முரண்பட்ட உள்ளுணர்ச்சிகள் (Instincts) குறித்து உளப்பகுப்பாய்வு அறிவியல் விரிவான விளக்கங்களைத் தருகிறது. 

வாழ்வுணர்ச்சி X சாவுணர்ச்சி:
மனிதன் பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டவன். மனிதனுக்குத் தேவைகள் மிக அதிகம். மனிதனுடைய அடிப்படைத் தேவைகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
1.    உடலியல் தேவைகள் (Biological needs)
2.    உளவியல் தேவைகள் (Psychological needs)
3.    சமூகவியல் தேவைகள் (Social needs)
இம்மூன்று தேவைகளின் நிறைவேற்றத்தைப் பொறுத்தே மனிதனுடைய செயல்பாடுகள் யாவும் அமையும். மனிதனுடைய ஆளுமையும் இவற்றைப் பொறுத்தே வளர்ச்சியடையும். பிற உயிர்களின் தேவைகள் பெரும்பாலும் உடலியல் தேவைகளான உணவு, நீர், காற்று, பாலுறவு போன்றவற்றுடன் முழுமை பெற்றுவிடும். ஆனால் மனிதனின் தேவைகள் அத்துடன் நிற்பதில்லை.

உளவியல் தேவைகளான அமைதி, மகிழ்ச்சி, அழகுணர்ச்சி போன்றவையும், சமூகவியல் தேவைகளான குடும்பம், பொருளாதார ஏற்றம், சமூக மதிப்பீடுகள் உள்ளிட்டவையும் அவனுக்கு மிக அவசியமாகின்றன. இத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சிகளில் அவன் தொடர்ச்சியாக ஈடுபடுகிறான். இவை நிறைவேறும் போது மகிழ்ச்சியும், நிறைவேறாத போது ஏமாற்றமும் அடைகிறான். இவற்றால் ஏற்படும் இருவித மனநிலைகள் மனித உளவியலில் தீவிர ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றில் நேர்மறையான உணர்ச்சிகள் வாழவேண்டும் என்கிற விருப்பத்தையும், எதிர்மறையான உணர்ச்சிகள் சாக வேண்டும் என்கிற எண்ணத்தையும் தூண்டுகின்றன. வாழ வேண்டும் என்கிற உணர்வு மற்றும் சாக வேண்டும் என்கிற உணர்வு ஆகிய இரண்டையும் சிக்மன்ட் ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு அடிப்படை உள்ளுணர்ச்சிகளாகக் (Basic Instincts) கொள்கிறது. அதாவது மனிதச் செயல்பாடுகளனைத்தையும் இயக்கும் ஆற்றல் பெற்ற உணர்ச்சிகளாக இவை விளங்குகின்றன என்கிறது. அதாவது இவ்வுணர்ச்சிகள் நனவிலி (Unconscious) எனப்படும் ஆழ்மனத்துடன் தொடர்புடையவை என்கிறார் ஃப்ராய்ட். இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு உளப்பகுப்பாய்வின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உளப்பகுப்பாய்வு:
உளப்பகுப்பாய்வு என்பதே மனிதனுடைய உள்ளத்தை மூன்று வகைப் பகுப்புகளாகப் பிரித்து ஆராய்வதைக் குறிப்பதாகும். ஃப்ராய்ட், நனவுமனம் (Conscious mind) எனப்படும் புறமனம், நனவடங்கு மனம் (Pre-conscious mind) எனப்படும் இடை மனம், நனவிலி மனம் (Unconscious mind) எனப்படும் ஆழ்மனம் என மூன்று பிரிவுகளாக உள்ளத்தைப் பிரிக்கிறார்.

புறமனம் (அ) நனவுமனம்:
புறமனம் என்பது உள்ளத்தின் மேற்பரப்பில் இருப்பது. ‘வெளியுலகில் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு நனவுமன இயக்கங்களே காரணமாகும். மனிதனின் விழிப்புநிலைச் செயல்களும் நடத்தைகளும் நனவுமன இயக்கங்களால் ஏற்படுபவையாகும். மனித நடத்தைகளும் நனவுமன இயக்கங்களால் ஏற்படுபவையாகும். மனித நடத்தைகளுக்குப் பின்புலமாக மற்ற ஒழுங்கமைவுகள் இருந்தாலும், நனவு நிலைதான் செயல் வடிவம் கொடுக்கிறது. உளப்பகுப்பாய்வின்படி இந்த நனவு மனத்தில் இரண்டு முக்கிய அடங்கல்களாக புலனறிவும் ஈகோவும் உள்ளன. இதில் தோன்றும் எண்ணங்கள் வெளிப்படையானவை’.4 மற்ற இரண்டு மனங்களின் வழியாக தள்ளப்படும் எண்ணங்களை செயல்படுத்தும் பணியை புறமனம் ஆற்றுகிறது.

இடைமனம் (அ) நனவடங்கு மனம்:
புறமனத்திற்கு அடுத்தபடியாக இருப்பது இடைமனம் எனப்படும் நனவடங்கு மனம். நனவு மனம் வழியாக வரும் தகவல்களைப் பதிவு செய்து கொள்கின்ற உள்ளத்தின் பகுதியா நனவடங்கு மனம் விளங்குகின்றது. ஆழ்மனத்தில் உள்ள உள்ளுணர்ச்சிகளை மடைமாற்றிச் சூழலுக்கேற்பச் செயல்படும் விதமான எண்ணங்களாகப் புறமனத்திற்கு அளிப்பதே இந்த இடைமனத்தின் முக்கியப் பணியாகும். இந்த இடைமனத்தின் செயல்பாடுகள் மனிதனால் உணரக் கூடியதும், உணர முடியாததுமான இடைப்பட்ட நிலையில் அமையும்.

ஆழ்மனம் (அ) நனவிலி மனம்:
இது உள்ளத்தின் ஆழ்நிலையில் உள்ள பகுதி. குழந்தைப் பருவத்திலிருந்தே தோன்றும் வேட்கை, வெறுப்பு, மகிழ்ச்சி, துயரம் என அனைத்து உணர்வுகளும் இதில் பதியப் பெற்று இருக்கும். இது புறமனத்திலிருந்து எட்ட முடியாத தொலைவில் இருப்பதால் இதன் செயல்பாடுகளை மனிதனால் வெளிப்படையாக உணரவோ புரிந்துகொள்ளவோ முடியாது. என்றாலும் மனிதனுடைய அனைத்து விதமான எண்ணங்களையும் செயல்களையும் இயக்குவது இந்த ஆழ்மன உணர்ச்சியேயாகும்

மனிதன் தன்னுடைய புலன்கள் மூலம் பெறுகின்ற தகவல்களும் உணர்வுகளும் முதலில் புறமனத்திலும் அதனையடுத்து இடைமனத்திலும் கடைசியாக ஆழ்மனத்திலும் சென்று பதிவாகின்றன. புறமனத்தால் உணர்வுகளைப் பதிவு செய்ய முடியாததால் இடைமனம் அவற்றைப் பதிவு செய்கிறது. அத்துடன் அவற்றின் அடிப்படை உள்ளுணர்ச்சிகளை ஆழ்மனத்திற்குக் கடத்துகிறது. ஆழ்மனம் அவற்றைப் பதிவு செய்துகொள்கிறது.

இம்மூன்று மனங்களிடையிலான ஊடாட்டமே மனிதனுடைய செயல்பாடுகள், எண்ணங்கள், ஆக்கங்கள் என அனைத்துக் கூறுகளையும் நிர்ணயம் செய்கிறது. ‘பாலியல் வேட்கைகள், கருத்துகள் ஆகியவை நனவிலி எண்ணங்களில் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. துடியான இவ்வேட்கைகள் (Active desires) வெளிப்பட முனையும் போது நனவடங்கு மனம் அவற்றை முதல் தணிக்கை (First censorship) செய்து நனவு மனத்திற்கு அனுப்புகிறது. அதன் பிறகே நனவுமனம் அகப் புலனறிந்து (Internal perception) நனவிலியை மேலும் தணிக்கைக்கு உட்படுத்தி வெளிப்படுத்துகிறது’.5 உளப்பகுப்பாய்வு மற்ற இரண்டு மனங்களை விட ஆழ்மனத்தின் செயல்பாடுகளுக்கே மிக அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

அடிப்படை உள்ளுணர்ச்சிகள்:
ஆழ்மனத்தில் அடங்கிக் கிடக்கும் உள்ளுணர்ச்சிகளே மனிதனுடைய உள்ளத்தை முழுமையாக இயக்குவதாகக் கூறும் ஃப்ராய்ட், இவ்வுணர்ச்சிகளில் வாழ்வுணர்ச்சி மற்றம் சாவுணர்ச்சி ஆகியவற்றின் பங்கு குறித்து விளக்குகிறார். இவ்விரண்டு உணர்ச்சிகளில் எது வலிமை பெற்று மற்றதைத் தன் ஆளுகைக்கு உட்படுத்துகிறதோ அதுவே உள்ளத்தின் இயக்கங்களில் பெரும்பகுதியை ஆளும்.

பாலுணர்வு மற்றும் தற்காப்புணர்ச்சி ஆகியவற்றை வாழ்வுணர்ச்சியின் அடங்கல்களாகக் (Contents) கூறுகிறார் ஃப்ராய்ட். சாவுணர்ச்சியின் அடிப்படையாக தனடோஸ் (Thanados) எனப்படும் மூர்க்க உணர்ச்சி விளங்குகிறது. வாழ்வுணர்ச்சிக்கும் சாவுணர்ச்சிக்கும் இடையிலான போராட்டம் உள்ளத்தின் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே உள்ளது. மனிதனுடைய ஆக்க எண்ணங்களுக்கும் அழிப்பு எண்ணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்தப் போராட்டம்தான். 

வாழ்வுணர்ச்சிகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தன்னுடைய வளர்ச்சிக்காகவும் தேவையான உந்துதலை மனிதனுக்கு அளிக்கின்றன. சாவுணர்ச்சிகள் இதற்கு எதிர்நிலையில் அழிப்புச் செயலை மேற்கொள்வதற்கான உந்துதலை அளிக்கின்றன. மனித நடத்தைகளின் தன்மை மற்றும் விளைவுகளைக் கொண்டு இவ்விருவேறு உணர்ச்சிகளின் ஆதிக்கச் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். சான்றாக, ஒருவன் தன்னுடைய மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் வளர்ச்சிக்காக உழைத்து வருமானம் ஈட்டுவது வாழ்வுணர்ச்சியின் உந்துதலாகும். அதே சமயம் உழைக்காமல் காலத்தை வீணடித்தல், மது அருந்துதல் போன்றவை சாவுணர்ச்சியின் உந்துதலாகும்.

வாழ்க்கையின் அடிப்படைக் குறிக்கோள் சாவுதான் என்கிறார் ஃப்ராய்ட். ‘சாவை நோக்கியே அகநிலை பயணிக்கிறது. அப்படியிருக்க சாவுணர்ச்சி உள்ளத்தில் முக்கியப் பங்கு வகிப்பதில் ஐயமில்லை. இதன் காரணமாக வாழ்வுணர்ச்சிக்குக் (உயிர்ப்புக்கு) கொஞ்சமும் குறைவில்லாத நிலையில் சாவுணர்ச்சியை வைத்துப் பார்க்கப்பட வேண்டியுள்ளது. வாழ்வுணர்ச்சிக்கு ‘வாழ்வு’ முக்கியக் குறிக்கோளாக இருப்பது போலவே சாவுணர்ச்சிக்குச் ‘சாவு’ முக்கியக் குறிக்கோளாகிறது’.6 எனவேதான் மனிதனுக்குச் சாவின் மீதான விழைவு (Death wish) பல கட்டங்களில் வெளிப்பட்டு நிற்கிறது.

மனிதனுடைய ஆழ்மனத்தில் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் சாவுணர்ச்சி பற்றி அறிவியல் பூர்வமான உளவியல் விளக்கங்களை முதன்முதலாகக் கூறியவர் ஃப்ராய்ட். என்றாலும் தத்துவார்த்த ரீதியிலான விளக்கங்கள் அதற்கு முன்னரே பலராலும் கூறப்பட்டுள்ளன. சமயவாதிகளும், சித்தாந்திகளும் சாவு குறித்து விரிவாகச் சிந்தித்துள்ளனர். தமிழில் திருவள்ளுவர் சாவைத் தூக்கத்திற்கு இணையாக வைத்துப் பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு' - (குறள். 339)
எனும் குறளில் சாவை வெகு இயல்பான ஒரு நிகழ்வாகக் கூறுகிறார். சமண மற்றும் பவுத்தக் கோட்பாடுகளில் இத்தகைய கருத்துகளைப் பல இடங்களில் காண முடியும். இச்சமயங்கள் புலனொடுக்கம் குறித்துப் பேசியவை. புலனொடுக்கம் என்பது சாவுணர்ச்சியின் முக்கியமான வெளிப்பாடாகும். சித்தர்களின் சிந்தனைகளிலும் பெரிதும் புலனொடுக்கம் வலியுறுத்தப்படுவதைக் காண முடிகிறது.
‘அங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும்
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்
அன்ன முங்கறியும் அசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்
தண்ணீர்ப் பீளை தவிராது ஒழுகும்
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்
உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்’7
என்று புலனின்பங்களுக்குக் காரணமாயமையும் புலன்களனைத்தையும் வெறுப்புடன் சாடுகிறார் பட்டினத்தார். இது போன்ற சாடல்களைச் சித்தர் பாடல்கள் பலவற்றில் காணமுடியும். புலனின்பங்களை ஒடுக்குதல் என்பது சாவுணர்ச்சியினுடைய அழிப்புச் செயல்பாட்டின் வெளிப்பாடாகும்.

இறுக்கங்களை அழித்தல்:
வாழ்வுணர்ச்சியின் உந்துதலால் புலனின்பங்களைத் துய்த்து வாழ்வதால் ஏற்படும் மன இறுக்கங்கள் பல. புலனொடுக்கம் இல்லாத இல்லற வாழ்வில் இத்தகைய இறுக்கங்கள் தவிர்க்க இயலாதவை. வாழ்வுணர்ச்சியால் ஏற்படும் இத்தகைய இறுக்கங்களை அழிப்பதில் சாவுணர்ச்சி போராடுகிறது. இப்போராட்டத்தைத் தவிர்க்க வேண்டுமெனில் இறுக்கங்கள் உருவாகாமல் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

‘உடலியல் தேவைகளும் சமூகத் தேவைகளும் ஆசைகளும் இறுக்கங்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றில் பல விருப்பங்களை அனுபவிக்க அனுபவிக்க இறுக்கத்தின் கொள்ளளவும் தீவிரமும் அதிகரிக்கின்றன. இந்நிலையில் இறுக்கங்களற்ற மனநிலை வேண்டுமென்றால் புலனின்பங்களைத் துறக்க வேண்டும்’.8 இறுக்கமற்ற மனநிலை என்பதையே சமயங்கள் மோனநிலை என்று வலியுறுத்துகின்றன. புத்தர் ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றது இதனால்தான். சித்தர்கள் கூறும் யாக்கை நிலையாமையும் இதுதான்.

அன்னியமாகும் மனமும் சாவுணர்ச்சியும்:
சமூகம் பல்வேறு இருமை எதிர்நிலைகளைத் தன்னகத்தே கொண்டது. நீதி  அநீதி, இன்பம்  துன்பம், வளமை  வறுமை என்று இவ்வித எதிர்நிலைகளின் இருத்தல் எல்லாச் சமூகத்திற்கும் பொருந்தும். என்றாலும், வெவ்வேறு காலகட்டங்களுக்கேற்ப இவற்றின் விகிதாச்சாரங்கள் மாறுபடும். அந்த வகையில் பெருமளவு சித்தர்கள் தோன்றியதாகக் கூறப்படும் 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் எதிர்மறையான கூறுகளை அதிகம் கொண்டது. சாதியக் கொடுமைகள், சமயப் பூசல்கள், அன்னிய ஆதிக்கங்களின் சுரண்டல்கள், இவற்றால் மக்கள் படும் துயரங்கள் ஆகியவை சமூக உணர்வுள்ள மனிதனின் உளவியலில் பலத்த அதிர்வை ஏற்படுத்த வல்லவை.

வாழ்வுணர்ச்சி அதிகளவு ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை உடையவர்கள் இத்தகைய சூழலை ஏற்றுக்கொண்டு அதற்கேற்பத் தங்களைத் தகவமைத்துத் தாங்கள் இழக்க விரும்பாத உலகியல் இன்பங்களைத் தொடர்ந்து பின்பற்றுவார்கள். ஆனால் இத்தகைய சூழலை ஏற்க முடியாமல், இதற்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியாதவர்கள் சமூகத்திலிருந்து தங்களை அன்னியப்படுத்திக் கொள்ள முயல்வர்.

சாவுணர்ச்சியின் ஆதிக்கத்துக்குட்பட்ட இவர்களின் மனம் சமூகத்தையும் அதனைச் சார்ந்த உலகியல் இன்பங்களையும் எளிதாகத் துறந்து, சமூகத்திலிருந்து விடுபட்டு அதற்கப்பால் சென்று புலனொடுக்கச் செயல்பாடுகளில் ஈடுபடும். பின்னர் இறுதிநிலையான ஞானத்தைத் தேடும். சித்தர்களாகப் பரிணமித்த இவர்களின் சிந்தனைகளில் காணப்படும் சமூக வெறுப்பு, சமூக எதிர்ப்பு ஆகியவற்றிற்குக் காரணமாய் அமைவது இந்தச் சாவுணர்ச்சியின் ஆதிக்க நிலைதான்.

சித்தர்களின் உளவியலில் வாழ்வுணர்ச்சியைத் தன் ஆளுகைக்குட்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் சாவுணர்ச்சியின் அடையாளங்களாக அவர்களின் பாடல்களில் சாவு குறித்த சிந்தனைகள் பெருமளவு இடம்பெற்றுள்ளன. சில சான்றுகள்:
‘செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பினங்கள்
கத்துங் கணக்கென்ன? காண் கயிலாபுரிக் காளத்தியே!’9 - பட்டினத்தார்,
‘என்பெற்ற தாயாரும் என்னைப் பிண மென்று இகழ்ந்து விட்டார்!
பொன்பெற்ற மாதரும் போ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்!
கொன் பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்!’10 - பட்டினத்தார்,
‘விறகிடைமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்புகருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை ...’11 - பட்டினத்தார்,
‘ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நானட இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்?’12 - பத்திரகிரியார்,
‘மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழந்தபோது வேணும் என்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும் என்று போடுவார்’13 - சிவவாக்கியர்,
‘பஞ்சனையும் பூவணையும் பாய லும்வெறும்
பாழ்ச்சுடு காடதிலே பயனைப் பெறுமோ?
மஞ்சள் மணம் போய்ச் சுடுநாறு மணங்கள்
வருமென்று தெளிந்து நின்று ஆடுபாம்பே!’14 - பாம்பாட்டிச் சித்தர்.
இவையனைத்தும் எதிர்மறைச் சிந்தனைகள் (Negative thoughts) என்று புறந்தள்ளிவிட முடியாது. சாவின் இருப்பை படைப்பு எல்லைக்குட்படுத்தும் சித்தர்களின் செயல்பாடுகளாகவே இவற்றைக் கொள்ள வேண்டியுள்ளது.

சாவு குறித்த சிந்தனைகளில் சித்தர்களிடையே உள்ள முரன்பாடுகளும் அவர்தம் பாடல்களின் வழி அடையாளப்படுகின்றன. மனிதன் பிறப்பதும் இறப்பதும் மாறி மாறி நிகழ்வதாகப் பட்டினத்தார் கூறுகிறார். அதாவது இறப்புக்குப் பின்னதான மறுபிறவிக் கோட்பாட்டில் அவருக்கு நம்பிக்கை உள்ளதாகத் தெரிகிறது.
‘பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்’15 - பட்டினத்தார்.
பட்டினத்தாரின் மேற்கண்ட கூற்றிலிருந்து மாறுபடுகிறார் சிவவாக்கியர். அவர் இறப்பை வாழ்வின் இறுதியாகக் கருதுகிறார். இரு பிறவிகளுக்கிடையிலான இடைவெளியாகக் கருதவில்லை.
‘கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே’16  -  சிவவாக்கியர்.

இம்முரண்பாடுகளைச் சித்தர்கள் தங்களுடைய சமய மற்றும் சமயத்துக்கப்பாற்பட்ட சித்தாந்தங்களை அணுகும் முறையினால் உண்டாகும் மாறுபாடுகளாகக் கொள்ளமுடியும். ‘இறந்தன பிறக்கும்’ எனும் பட்டினத்தாரின் கூற்றில் சாவுணர்ச்சியின் ஆளுகையிலிருந்து மீண்டு மெலிதாய் வெளிப்படும் வாழ்வுணர்ச்சியின் அடையாளம் தெரிகிறது.

சித்தர்களின் வாழ்வுணர்ச்சி:
முன்னர்க் கூறியபடி மனிதனுடைய உளவியலில் வாழவேண்டும் என்கிற வேட்கையும் (வாழ்வுணர்ச்சி) சாக வேண்டும் என்கிற விழைவும் (சாவுணர்ச்சி) ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு ஒன்றையொன்று தன் ஆளுகைக்குட்படுத்தி வெல்வதற்காகப் போராடுகின்றன. இப்போராட்டத்தில் வாழ்வுணர்ச்சி வென்று தன் ஆதிக்கத்தைச் செலுத்தும் பட்சத்தில், அம்மனிதன் குடும்பம், சமூகம் ஆகிய எல்லைகளுக்குள் நின்று உலகியல் இன்பங்களையும் அவற்றின் உடனிகழ்வான துன்பங்களையும் அனுபவித்து வாழ்தலை மேற்கொள்கிறான். அவ்வாறன்றி சாவுணர்ச்சி வென்று தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தும்போது, அவன் குடும்பம், சமூகம் ஆகிய எல்லைகளை உடைத்து, உலகியல் இன்ப துன்பங்களை உதறி இவற்றிற்கப்பாலான உண்மைகளைக் கண்டறிவதற்கான தேடலில் ஈடுபடுகிறான்.

வாழ்வுணர்ச்சிக்கும் சாவுணர்ச்சிக்கும் இடையிலான இடையறாத போராட்டத்தில் எந்த ஒன்று வென்று தன்னுடைய ஆளுகையைச் செலுத்தினாலும் வெல்லப்பட்ட மற்றொன்று தன் இருப்பை முற்றாக இழந்து விடுவதில்லை. அதாவது அழிந்து விடுவதில்லை. அது அவ்வப்போது தன் இருப்பை வெளிப்படுத்தியபடியேதான் இருக்கும். சித்தர்களின் உளவியலில் சாவுணர்ச்சியின் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டாலும் அவர்களின் ஆழ்மனத்தில் அழிக்கப்படாத வாழ்வுணர்ச்சி தன் இருப்பை அடையாளப்படுத்துவதைக் காணமுடிகிறது. சாவுணர்ச்சியின் ஆதிக்கத்துக்கு உட்படும் மனித மனத்தில் வாழ்வுணர்ச்சி முற்றாக அழிக்கப்பட்டால் அம்மனிதன் தன்னுயிரைப் போக்கிக் கொள்கிறான். ஆனால் சித்தர்கள் அவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் இல்லை. குடும்பம், சமூகம் ஆகிய எல்லைகளைத் தாண்டி அவர்கள் தொடர்ந்து உயிர்வாழ்வதற்கான தூண்டுதலை அளிப்பது அவர்களுடைய ஆழ்மனத்தில் முற்றிலுமாக அழிக்கப்படாத வாழ்வுணர்ச்சிதான்.

சித்த மருத்துவமும் உடற்பேணும் சாவுணர்ச்சியும்:
குடும்பம், சமூகம் ஆகியவற்றை வெறுத்து ஒதுக்கித் தங்களுடைய ஆழ்மனத்தில் சாவுணர்ச்சி மேலோங்கிய நிலையில் சமூக வெளிக்கப்பால் செல்லும் சித்தர்கள் தங்களுடைய முரண்நிலைக்குத் தீர்வாகச் சாவை நாடவில்லை. மனித நடமாட்டமில்லாத காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்தனர். அத்துடன் தங்கள் உயிருக்கும் உடலுக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து காத்துக் கொள்ளப் பல்வேறு மூலிகைகளின் மருத்துவக் குணங்களை ஆராய்ந்து அவற்றைப் பயன்படுத்திக் கொண்டனர். தாங்கள் பயன்படுத்திக் கொண்டதோடு நில்லாது, தங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட சமூக எல்லைக்குள்ளிருந்து வாழும் பிற மனிதர்களும் பயனுறும் வண்ணம் மருத்துவக் குறிப்புகளைச் சுவடிகளில் எழுதி வைத்தனர்.

'நீர்மேற் குமிழியிக் காயம்' என்றுரைத்து மனித உடலின் நிலைøயாமையைப் பாடிய சித்தர்கள்தான் உடலைப் பேணுவதற்கான மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டனர். சித்தர்களின் இந்த மருத்துவ ஆராய்ச்சிகளும் செயல்பாடுகளும்தான் சித்த மருத்துவமாகப் பரிணமித்தது.

சித்த மருத்துவத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாய் அமைந்தது சித்தர்களின் ஆழ்மனத்தில் அடங்கிக் கிடந்த வாழ்வுணர்ச்சிதான் எனலாம். தங்களுடைய உடலையும், உயிரையும் பேணி தொடர்ந்து வாழ வேண்டும் என்கிற உணர்ச்சிதான் அவர்களை மூலிகைகளின் மருத்துவக் குணங்களைத் தேடச் செய்தது. இந்தத் தேடலும் ஆராய்ச்சியும் தங்களுடைய பயன்பாட்டுடன் நின்றுவிடாது சமூகப் பயன்பாட்டுக்கும் உதவியாய் அமைய வேண்டும் என்கிற அவர்களின் இடைமன மற்றும் புறமன விழைவே அவர்களது மருத்துவக் குறிப்புகளைப் பதிவு செய்ய வைத்தது. சித்தர்களுடைய ஆழ்மனத்தில் சாவுணர்ச்சியால் வெல்லப்படாமல் முற்றிலுமாக அழிந்து போய்விடாத வாழ்வுணர்ச்சி சித்த மருத்துவம் எனும் உயரிய மருத்துவ முறையை உலகிற்கு அளித்தது.

மனித உடல் நிலையில்லாதது; அழியக் கூடியது என்பதைத் தம் சிந்தனை வெளிப்பாடுகளில் சித்தர்கள் தொடர்ந்து வலியுறுதினாலும் மனித உடலின் ஆற்றலையும் உள்ளத்தின் ஆற்றலையும் அவர்கள் தெளிவாக உணர்ந்தேயிருந்தனர். 'உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே', 'உடலில் உத்தமன் உறைகிறான்' எனும் திருமூலரின் வரிகள் இதற்குத் தக்க சான்றுகளாய் உள்ளன. உடல் குறித்த சிந்தனைகளில் சித்தர்களிடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. ‘ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி’ என்ற அழுகணிச் சித்தரின் வெறுப்புரைக்கு மறுப்புச் சொல்வது போல கொங்கணிச் சித்தர், ‘சித்தத்தில் உத்தமனைப் பார்த்தோருக்குச் உடல் ஊத்தைச் சடலமல்ல; உப்பிட்ட பாண்டமல்ல’ என்கிறார்.18

உடல் குறித்த சித்தர்களின் இந்த நேர்மறைச் சிந்தனை சிலரிடம் நேரிடையாகவும் சிலரிடம் மறைமுகமாகவும் வெளிப்படுகிறது. எனவேதான் யோக மற்றும் தியான முறைகளையும் கடைபிடித்து அவற்றை வலியுறுத்தவும் செய்கின்றனர். யோகப் பயிற்சியில் இடம்பெறும் பத்து வாயுக்களுள் மிக முக்கியமானவை எட்டாவது வாயுவாகிய தனஞ்சனும், இரண்டாவது வாயுவாகிய பிராணனுமாம். பிராணன் என்னும் உயிர்க்காற்று மூக்கு நுனிக்கும் நாபியின் மேற்புறத்திற்கும் இடையில் ஊடாடி இயங்கி வரும் காற்று. பிரணாயமப் பயிற்சியில் கட்டப்படும் பிராணனைச் சித்தர்கள் சாகாக்கால் என்றும் வேகாக்கால் என்றும் குறிப்பிடுகின்றனர். யோகப் பயிற்சியினால் உயிர்க்காற்று ஒவ்வொரு ஆதாரத்தின் மேலேறித் தங்கும் போது யோகியர்க்கு இயற்கை கடந்த புதிய சக்தி கைவரப் பெறும். மூலாதாரம் முதல் ஆக்கினை இறுதியாக உள்ள ஆறு ஆதாரங்கட்கும் குண்டலினிச் சக்தியை எழுப்பும் பயிற்சியும் ஆற்றுலும் வாய்ந்த யோகியர் எண்வகைச் சித்திகளையும் பெறுவர்.19

அட்டமாச் சித்தி எனப்படும் இந்த எண்வகைச் சித்திகளையும் யோக முறைகளின் மூலம் உள்ளத்தைப் பக்குவப்படுத்திப் பெறமுடியும் என்பது உளப்பகுப்பாய்வின் இடைமனம் எனும் நனவடங்கு மனத்தைப் பக்குவப் படுத்துதலைக் குறிக்கும். ஆழ்மனப் பதிவுகளை மாற்றியமைக்க முடியாது என்கிறது உளப்பகுப்பாய்வு. புறமனம் மற்றும் இடைமனம் ஆகியவற்றின் செயல்பூக்கங்களுக்குத் தேவையான உந்துதல்களை அளிக்கும் அடிப்படை உணர்ச்சிகள் புதைந்து கிடப்பதே ஆழ்மனம். சித்தர்களின் ஆழ்மனத்தில் புதைந்து கிடந்த அத்தகைய அடிப்படை உணர்ச்சிகளான வாழ்வுணர்ச்சி மற்றும் சாவுணர்ச்சியே அவர்களின் இரு வேறுபட்ட செயல்பாடுகளை இயக்கின. இவ்விரு உணர்ச்சிகளுக்கிடையிலான போராட்டத்தின் விகிதாச்சார வேறுபாடுகளே சித்தர் சிந்தனையில் தென்படும் கருத்து வேறுபாடுகளின் பின்னணியில் இருந்தன.

நிறைவு:
தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமூக வரலாற்றிலும் சித்தர்களின் இருப்பை மறைக்க முடியாது. சித்தர்களின் தோற்றம் எல்லாக் காலகட்டத்திலும் எல்லாச் சமூகங்களிலும் தொடர்ச்சியாக நிகழ்வதுதான் என்றாலும் தமிழ்நாட்டில் கி.பி. 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சித்தர்கள் பெருமளவில் தோன்றியுள்ளதாகக் கணிக்கலாம். இதற்கான தேவையும் சமூகச் சூழலும் அப்போது இருந்ததை உணர முடிகிறது. தமிழ்ச் சித்தர்களின் காலகட்டமாக இதனைத்தான் குறிப்பிடுகின்றனர்.

சித்தர்களுடைய சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் பின்னணியை உளவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி ஆராய்வதற்கான பரப்பு இன்னும் நிறையவே உள்ளது. தனிமனித விருப்பு வெறுப்புகள், குடும்ப மற்றும் சமூக அமைப்பின் அபத்தங்கள், ஏற்றத்தாழ்வுகள் போன்றவை சித்தர்களின் உள்ளத்தைப் பாதிப்படையச் செய்யும் நிலையில் அவர்களின் ஆழ்மனத்தில் சாவுணர்ச்சியின் ஆதிக்கம் மேலோங்குகிறது. இதற்கு எதிரான வாழ்வுணர்ச்சி ஏற்படுத்தும் உலகியல் இன்ப நாட்டங்கள் ஒடுக்கப்பட்டு, அவர்கள் சமூகத்தை விட்டு வெளியேறி காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து புலன்களை ஒடுக்கி வாழ்ந்தனர். இச்செயல்பாடுகளின் பின்னணியில் சாவுணர்ச்சியின் தீவிரம் தென்படுகிறது.

சாவுணர்ச்சியால் அடக்கியாளப்பட்டாலும் தன்னுடைய இருப்பை முற்றிலுமாக அழித்துக் கொள்ளாத வாழ்வுணர்ச்சியின் தூண்டல்கள் வேறு விதங்களில் சித்தர்களின் வாழ்வில் வெளிப்படுகின்றன. தங்கள் உயிரைக் காத்துக் கொள்வதிலும், உடலைப் பேணுவதிலும் அவர்கள் கொண்டிருந்த அக்கறை சித்த மருத்துவ முறையாகத் தோன்றி வளர்ச்சி பெற்றது. உடல் மற்றும் உள்ளத்தின் ஆற்றலை முறைப்படுத்தவும், பக்குவப்படுத்தி வளப்படுத்தவும் யோக முறைகள், தியானப் பயிற்சி போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டதுடன் தங்களின் பதிவுகள் வழியே அவற்றை மக்களுக்கும் வலியுறுத்தினர். இச்செயல்பாடுகளின் பின்னணியில் அவர்களின் ஆழ்மனத்தில் அழிக்கப்படாத வாழ்வுணர்ச்சியின் இயக்கம் தென்படுகிறது.

சாவுணர்ச்சி என்பது அழித்தல் செயலைத் தூண்டுகிறது. சமூக வெளியில் தன் இருப்பை அழித்துக் கொள்ளுதல், புலனின்பங்களை ஒடுக்கித் தன்னைத் தானே வருத்திக் கொள்ளுதல் போன்றவை சாவுணர்ச்சியின் வெளிப்பாடுகள். வாழ்வுணர்ச்சி என்பது ஆக்கச் செயல்பாடுகளைத் தூண்டுவது. உடலைப் பேணுவதற்கான மருத்துவ முறைகளை ஆராய்தல், உள்ளத்தைப் பேணுவதற்கான யோக மற்றும் தியான முறைகளைக் கடைபிடித்தல், சமூகக் கேடுகளைக் கண்டித்தல் போன்றவை வாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடுகள்.

குறிப்புகள்:
1.    சித்தர் தத்துவம், (பதிப்பாசிரியர்: ச.மெய்யப்பன்), தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1990, பக்.11.
2.    மேலது, பக்.3233.
3.    கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004, பக்.438. 
4.    தி.கு.இரவிச்சந்திரன், சிக்மண்ட் ஃப்ராய்ட்: உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2005, பக்.172.
5.    மேலது, பக்.174175.
6.    மேலது, பக்.236.
7.    பட்டினத்தார், சித்தர் பாடல்கள், பதிப்பாசிரியர்: அரு.ராமனாதன், பிரேமா பிரசுரம், சென்னை, 1987, பக். 3637.
8.    தி.கு.இரவிச்சந்திரன், மு.நூல், பக்.238.
9.    சித்தர் பாடல்கள், பக்.47.
10.    மேலது, பக்.53.
11.    மேலது, பக். 96.
12.    மேலது, பக்.103.
13.    மேலது, பக்.125.
14.    மேலது, பக்.185.
15.    மேலது, பக்.185.
16.    மேலது, பக்.30.
17.    மேலது, பக்.124.
18.    க.நாராயணன், சித்தர் தத்துவம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1990, பக்.54.
19.    மேலது, பக்.89.

No comments:

Post a Comment