Wednesday 15 April 2015

வள்ளுவன் காட்டும் இறைவன்...

எனது இந்த 50வது பதிவு, நிலையான ஒரு தத்துவத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிலை மாறும் இவ்வுலகில் நிலையான ஒன்று இறைவன் மட்டுமே. இறைவனை விவாதப் பொருளாக எடுத்தால், அந்த விவாதம் முற்றுப் பெறாது என்பதை, எனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தேன். இம்முறை இறைவனை பாடுபொருளாக வைத்து எழுத எனக்கு தகுதியில்லை என்பதை நன்கு அறிவேன். அச்சமயம், எனது ஆசான், வள்ளுவன் என் நினைவுக்கு வந்தான். நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், அனைத்திற்கும் வள்ளுவனின் குறளில் தீர்வு உள்ளது. அப்படியென்றால் இறைவனை பற்றிய எனது கேள்விக்கும் வள்ளுவனிடம் பதில் இல்லாமலா போய்விட போகிறது. இறைவனை பற்றிய எனது ஏழு (ஒவ்வொரு குறளின் நீளம் ஏழு வார்த்தைகள்தானே..) கேள்விகளுக்கு வள்ளுவன் கூறும் பதிலை காணலாம்.


முதலில் எனது கேள்வி இருக்கும். அதன் பின்னர் பதிலாக வள்ளுவனின் குறள்/குறளின் சில வார்த்தைகள் இருக்கும். வள்ளுவனின் அந்த பதிலை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் என்பதை, அதன்பின்னர் விளக்கி இருக்கிறேன். எனது கேள்விக்கு ஏற்றாற் போல குறளின் வரிசையை மட்டும் மாற்றி இருக்கிறேன். பொருளை மாற்றவில்லை. தவறு இருப்பின், வள்ளுவனின் நேசர்கள் என்னை மன்னிக்கவும்.

முதல் கேள்வி : இறைவன் இருக்கிறானா??

பதில் : ஆதி பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: 'உலகு' என்பது ஆகுபெயர். இந்த பூமியை மட்டுமில்லாமல், பூமியில் வாழும் உயிர்களையும் சேர்த்து உலகு என்று குறிப்பிடுகிறார். ஆக இப்புவியில் முதலில் தோன்றிய உயிருக்கும், கடைசியில் தோன்றும் உயிருக்கும் முதன்மையானவன் அவன். அப்படிப்பட்ட முதன்மையானவன் இல்லாமல் இருப்பானா?? நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த தாய்-தந்தையரும் இறைவனின் அம்சமாக கருதப்படுவதற்கும் காரணம் இதுவே... தாய் மூலம்தான் நாம் இந்த உலகிற்கு பிறந்தோம் என்று நம்புவோமேயானால், இறைவன் இருப்பதையும் நம்பித்தான் தீர வேண்டும்.

இரண்டாம் கேள்வி: 'எனது தாயை காண்கிறேன். அவளுடன் பேசுகிறேன். அவள் பேச்சை கேட்கிறேன்.' என்பதனால் அவள் இருப்பை நான் நம்புகிறேன். பார்க்க முடியாத, கேட்க முடியாத, இறைவனை இருப்பதாய் நான் எப்படி நம்ப முடியும்?

பதில் : தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்.

விளக்கம்:- புரியாத ஒன்றை எளிதாய் புரிய வைக்க 'உவமை' கையாளப்படும். 'வெள்ளத்தனைய...', 'இனிய உளவாக...' போன்ற குறள்களில் உவமைகளை வெகுவாக, அழகாக கையாண்ட வள்ளுவனே இறைவனை ஒரு உவமைக்குள் அடக்க இயலவில்லை. ஐம்பொறிகளால் நாம் இறைவனை உணர முடியுமென்றால், வள்ளுவன் உவமையுடன் விளக்கி இருப்பான். ஆக மனதினால் மட்டுமே இறைவனை நீ உணர முடியும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

பிறவிக்குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்து அவரவர் கற்பனைக்கு ஏற்றபடி உணர்ந்து கொள்வதுபோல், மனதினால் இறைவனின் எண்குணத்தை உணரலாம்.

மூன்றாவது கேள்வி: மனதினால் மட்டுமே உணர முடிகின்ற இறைவனின் இயல்புகள் என்னென்ன?? (அல்லது) நான் இறைவனாக முடியுமா??

பதில் : வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி.

விளக்கம் : இறைவன் விருப்பு-வெறுப்பு அற்றவன். இவ்வுலக பொருள்களின்,உயிர்களின் மேல் விருப்பு-வெறுப்பு இருக்கும்பட்சத்தில் மனிதனுக்கு மன அமைதி இல்லாமல் போய்விடுகிறது. ஆக இந்த இரண்டும் இல்லாமல் சமநிலையில் இருக்கும்போது நாம் இறைவனாவோம். உதாரணம்: ரமணர். மனோநாசம் செய்து, விருப்பு-வெறுப்பு அற்றவர்.
இறைவன் ஐம்புல ஆசைகளை ஒழித்தவன். உலக ஆசைகள் எல்லாம் துறந்தால், நாமும் இறைவனாய் போற்றப்படுவோம். உதாரணம்: புத்தர், பட்டினத்தார்.
இறைவன் அறக்கடல். 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தில் அறத்தை பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கிறார். வள்ளுவன் வலியுறுத்தும் அறங்களை,நெறிகளை பின்பற்றினால், 'வானுறையும் தெய்வத்துள் வைக்கபடும்' என்று அவரே கூறியிருக்கிறார். உதாரணம்: பகவான் ராம கிருஷ்ணர், வள்ளலார்.

நான்காம் கேள்வி: அத்தகைய இயல்புடைய இறைவன் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கட்டும். நான் என் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தொடர்பற்ற நிலையில் இருந்துவிட்டு போகிறோமே.. என்ன கெட்டு போச்சு??

பதில் : கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


விளக்கம் : என்னை அடித்து துவைத்த குறள் இது. இது வள்ளுவனின் இரண்டாவது குறள். முதல் குறளில் இறைவனை வணங்குகின்றார். அடுத்த குறளிலேயே நம் அனைவரையும் வணங்க சொல்கிறார். தனது குறளை படித்து அர்த்தம் புரிந்து கற்க முடியுமென்றால், அக்கல்வியின் பயனாக இறைவனை தொழுதே தீர வேண்டும் என ஆணித்தரமாக அடித்து சொல்கிறார்.

படிப்பது வேறு, கற்பது வேறு. படித்த,கேட்ட, மற்றவர் செய்து காட்டிய ஒன்றை நாம் செய்து பார்த்து அதை உணர்ந்து கொள்வதே கற்பது. அப்படி, நாம் உணர்ந்து கற்றுக்கொள்ள உறுதுணையாய் இருக்கும் இறைவனை தொழாமல் இருப்பது தவறு என்று இடித்துரைக்கிறார்.

ஐந்தாம் கேள்வி: இறைவனை தொழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் தொழுவதால் எனக்கு என்ன பயன்?

பதில்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


விளக்கம்: இறைவனின் உண்மையான புகழை விரும்பி நினைக்கும் அன்பர்க்கு அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் அடைவதில்லை.

ஆறாம் கேள்வி: தொழ வேண்டிய அந்த இறைவனை நான் தொழாமல் போனால் என்னாகும் ? (அல்லது) இறைவனை தொழுவதால் ஏற்படும் பயன் எனக்கு ஒன்றும் தேவையில்லை. அப்படி தொழாமல் இருந்து விட்டு போகிறேனே... என்ன கெட்டு போச்சு??

பதில்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


விளக்கம்: பிறவி என்னும் பெருங்கடலில் நாம் அனைவரும் விழுந்து விட்டோம். அதான், பிறந்து விட்டோமே. கரை சேர வேண்டுமென்றால் இறைவனடியை தொழ வேண்டும். இல்லையென்றால் கரை சேர முடியாது.

ஏழாவது கேள்வி: ஒரு செயலை செய்யாவிட்டால் தீங்கு கண்டிப்பாக ஏற்படும். செய்தால் நன்மை ஏற்படும். அப்படிப்பட்ட செயலை செய்பவன் அறிவாளி, செய்யாதவன் கற்றறிந்த மூடன். இறைவனை தொழுவதும் அப்படிப்பட்ட செய்கையே ஆகும். நான் எப்படி இறைவனை தொழ வேண்டும்?? எந்த முறை சிறந்த முறை?

பதில் : மலர்மிசை ஏகினான்

விளக்கம் : அன்பரின் நெஞ்ச மலரில் வீற்றிருப்பவன் இறைவன். நமக்கு விருப்பபட்ட உருவத்தில் (விநாயகராய்,முருகனாய்,பெருமாளாய், அபிராமியாய்,இயேசுவாய்,அல்லாவாய், ராமனாய், கிருஷ்ணனாய், புத்தரை, அனுமானாய், ஈஷ்வரனாய்) இறைவனை அன்புடன் மனத்தினில் நினைத்தாலே, நமது இதய கமலத்தில் வந்து வீற்றிருப்பான். நமது வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினரை, குழந்தையை கனிவாய் கவனிப்பது போல், நமது இதய கமலத்தில் வந்து குடியேறிய இறைவனையும் விருப்பபடி உபசரிப்பதே மிகச்சிறந்த தொழுகையாகும்.

ok

1 comment:

  1. The most inspiring 7 questions and answers in my lifetime .Thankyou for such an inspiration Sir .

    ReplyDelete