Tuesday 7 April 2015

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள்

சித்தர்கள், சித்தமருத்துவம் பற்றிய ஆராய்ச்சி
சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள் நிலவி வருகின்றன, ஏனெனில் அத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மூலங்களைப் படிக்காமல் பேசுவதால், எழுதுவதால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. மேலும் “சித்தர் பாடல்கள்” என்று பிரபலமாக வழங்கிவரும் பாடல்கள் சித்த மருத்துவத்துடன், தொடர்பு கொண்டிருந்தாலும், அவை, மருந்துகள் தயாரிக்கும் முறைகளைச் சொல்வதில்லை. இதையறிமால் எழுதுவதால் தான் தமிழ் சித்தர்களைப் பற்றிய கருத்துகள் ஏராளமாக, தாராளமாக ஆதாரங்களே இல்லாமல் பற்பல செய்திகளாகக் கொடுக்கப் பட்டு வருகின்றன[1]. மூலங்களைப் படிக்காமலே, பிரபலமாக எழுதப் பட்டுவரும்
புத்தகங்களை வைத்துக் கொண்டு சமீபத்தில் வரையப் பட்டுள்ள உருவாக்கப்பட்டுள்ள சித்திரங்களை வைத்துக் கொண்டு பிரமிக்க வைக்கும் அளவில் இணைதளங்களில் வர்ணனைகளை குவித்து வருகிறார்கள்[2]. அவையும் வேகமாகப் பரவி வருகின்றன. ஏதோ எல்லா நோய்களையும் சித்தமருத்துவம் தீர்த்துவிடும் அல்லது சித்தமருத்துவத்தில் இல்லாத தீர்வுகளே இல்லை என்பது போல எழுதி, விளம்பரப்படுத்தி வருகிறார்கள்[3].
ஆதாரங்களைக் கொடுக்காமல் எழுதப் படும் புத்தகங்கள்: சித்தர்களைப் பற்றி சித்தமருத்துவ முறையைப் பற்றி எழுதுபவர்களும் மூலங்களை – முதன்மை அல்லது இரண்டாம் வகை – கொடுப்பதில்லை[4]. எழுதுபவர் தம்மை அல்லது பதிப்பகத்தார் – ஆசிரியர் / வைத்தியர் / மருத்துவர் / சித்தவைத்தியர் / சித்தமருத்துவர் / வைத்தியத் திலகம்/ சித்தர் என்றெல்லாம் கூறிக்கொண்டு –
  • பரம்பரை சித்த வைத்தியர்,
  • மூன்று  பரம்பரையாக சித்தவைத்தியம் பார்த்து வருபவர்,
  • கைராச்சிக்காரர்,
  • தீராத நோய்களைத் தீர்த்து வைத்தவர்,
அறிமுகப்படுத்தப் படுகிறார் அல்லது அறிமுகமாகிறார். ஆனால் அவர்களுடைய  நோயாளிகளைப் பற்றியோ, அவர்கள் எவ்விதமாக சிகிச்சையளிக்கப் பட்டு, எத்தனை நாட்களில் காலத்தில் குணமடைந்தார் என்று குறிப்பிடுவதில்லை.  இருக்கும் மற்றும் புதியதாக தோன்றும் ஒவ்வொரு பதிப்பகமும் சித்தர்களைப் பற்றி, சித்தமருத்துவத்தைப் பற்றி யாதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தீருவது என்று தீர்மானமாக இருக்கிறது[5]. ஆனால், எழுதுபவரோ, எழுதும் ஆசிரியர் மற்றும் வைத்தியரோ அரைத்த மாவை அரைக்கிறாரே தவிர, புதியதாக எதையும் எழுதுவது கிடையாது. ஏதோ பத்து புத்தகங்களைப் படித்து ஒரு புத்தகம் எழுதுவது போலத்தான் எழுதி வருகிறார்கள். அதிலும் அந்த பத்து புத்தகங்களையும் குறிப்பிடுவதில்லை. உள்ள விஷயங்களை, விவரங்களை, செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுக்கும் போதும் மூலங்களைக் கொடுப்பதில்லை. சில விலக்குகளும் உள்ளன[6].
சித்தர் பாடல்கள் பதிப்புகள், வெளியீடுகள்: பெரிய ஞானக் கோவை என்று சித்தர் பாடல்கள் பெரிய எழுத்துப் புத்தகங்கள் முறையில் வெளியிடப்பட்டு வந்தன. சித்தர் ஞானக் கோவை என்று மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டார். சமீபகாலத்தில் (1980-90களில்) எஸ்.பி. ராமச்சந்திரன்[7] என்பவர் நூற்றுக்கணக்கான சித்தர்நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால் மற்ற பிரதிகளை ஆய்ந்து, சரிபார்த்து, திருத்தி வெளியிடவில்லை. இருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளார். பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ்[8], பிரேமா பிரசுரம் போல வெளியிடப்பட்டுள்ளன. வி. பலாரமய்யாவின் புத்தகங்களில் சில கூர்மையான அலசல்கள் உள்ளன[9]. மீ.ப.சோமசுந்தரம்[10] எழுதியுள்ள “சித்தர் இலக்கியம்” ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாகயுள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் இவற்றைக்கூடக் குறிப்பிடுவது கிடையாது. ஒருவேளை அவர்கள் இவற்றையும் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது படித்திருக்க மாட்டார்கள் போலும்.
ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன. அவற்றைப் பார்க்க, படிக்க, நகல் எடுக்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செல்வழிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் செலவிற்கு பயந்து, இரண்டாம்தர மூலங்களை அதாவது பதிக்கப்பட்ட புத்தகங்களை நாடவேண்டியுள்ளது. இவற்றில்தான் பாரபட்சம், விருப்பு-வெறுப்பு, சித்தாந்தம் முதலிய வேறுப்பாடுகள் வருகின்றன. அவற்றினால் உண்மைகளை மறைத்தல், திரித்து / மாற்றி எழுதுதல், வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் காட்டுதல் – மற்றவற்றை மறைத்தல், தமது கருத்தேற்றி எழுதுதல் முதலியவை வருகின்றன.
ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றது: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில், தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிலுக்கு கையினால் காகிதங்களில் எழுதப் பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. ஆனால், எடுத்துச் செல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் நகல்கள் அவ்வாறு எழுதிவைக்கப் படவில்லை. மெக்கன்ஸி சேகரிப்பே அதற்கு ஆதாரம். இருப்பினும் ஆற்றில் ஓலைச்சுவடிகளைப் போட்டார்கள், அதனால், தமிழ் நூல்கள் பல அழிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. அந்நியர்கள் அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருக்க ஆற்றில் போட்டார்களா, பழைய செல்லரித்த ஓலைகளைப் போட்டார்களா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. கடந்த 100-200 ஆண்டுகளில் சித்தர்களின் பெயரில் பற்பல போலி நூல்கள் எழுதப் பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. சில குழுமங்கள் ஆவணக் காப்பகங்கள் முதலிய இடங்களினின்றே அத்தகைய போலிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன. இன்றும் அத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மூலங்கள், மூலப்பிரதிகள், பிரதிகளின் நிலை: சித்தர் பாடல்களின் அச்சிட்டப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலப்பிரதிகள் எங்குள்ளன என்று கீழைத்திசை நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், கன்னிமாரா நூலகம் முதலிவற்றில் சென்று பார்த்தால், பெரும்பாலானவை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளவையாகவே உள்ளன[11]. ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளவைகளும் சமீபத்தில் எழுதப்பட்டுள்ளவை என்று, எழுதியுள்ள முறை, உபயோகப்படுத்தப் பட்டுள்ள ஓலை, எழுதுகோலின் கூர்தன்மை முதலியவற்றிலிருந்து தெரிகிறது[12]. இடைக்கால ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழைப் படிப்பது கடினம், வரிகள் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் பிரித்துப் படித்தப் பின்னரே, செய்யுளின் அடிகள், கிரமம் முதலியவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்[13]. ஆனால், இவற்றில் சுலபமாக, புத்தகத்தைப் பார்த்துப் படித்தபைப் போல படித்தறிய முடிகிறது. அதாவது, இப்பொழுதிலிருந்து (2012), கணக்கிட்டால் சுமார் 100-150 ஆண்டு காலத்தில் – 1850-1910 காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாசகாச சிகிச்சை, வாதரோக சிகிச்சை, கர்ப்பிணி பாலரோகம், மாடுகள்-குதிரைகள்-லட்சணம் வைத்தியம், சித்த மருத்துவச் சுடர், கர்ப்பிணி ரக்ஸா, முதலிய நூல்களை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. ஆனால், இவற்றைப் படித்துப் பார்க்கும் போது, இந்த “சித்தர்” பாடல்களுக்கும், இந்நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கிடைத்துள்ள விவரங்களை பாட்டுபோல் எழுதிவைத்துள்ளனர் என்று தெரிகிறது.
புரட்டு-போலி-மோசடி “சித்தர் பாடல்கள்” என்று உலவி வருவதைத் தடுப்பதெப்படி?:  பி. வே. நமச்சிவாய முதலியார், தமது தமிழ்மொழி அகராதியில் குறிப்பிட்டுள்ளது[14], “இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன. இவர்களால் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்”. இதற்கு பொ. பாண்டித்துரைத்தேவர், பூவை. கலியாணசுந்தரமுதலியார், முதலியோர் சிறப்பித்து அணிந்துரை பாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது[15]. அதாவது 1911 காலத்திலேயே, தமிழ் பண்டிதர்கள் அவற்றை “யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்” என்று தீர்மானித்து ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவற்றை உண்மை நூல்கள் போன்று, திரிபு விளக்கங்கள் கொடுத்து “சித்தர் பாடல்கள்” என்று இன்றளவும் பலர் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையறிந்து செய்கிறார்களா அல்லது வியாபாரத்திற்காகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே, சித்தர் இலக்கியம், சித்தர் பாரம்பரியம், சித்த மருத்துவம் முதலியை காக்கப் படவேண்டுமானால், இத்தகைய புரட்டு நூல்கள் வெளியிடப்படுவதை தடை செய்ய வேண்டும். அத்தகையோர் உண்மையறிந்து, தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் “சித்தர்” என்று அடைமொழியை உபயோகித்துக் கொண்டு அத்தகைய போலி-புரட்டு பேச்சு, எழுத்து, ஆராய்ச்சி செய்பவர்களையும் மற்றவர்கள் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.
© வேதபிரகாஷ்

[1] சித்தர் ஆரூடம், சித்தர் ஜோதிடம், சித்தர் நெறி, சித்தர் தத்துவம், சித்த மருத்துவ பச்சிலைகள், சித்தர் பரிபாஷை, சித்தர் கையேடு…..என்று “சித்தர்” மற்ரும் “சித்த மருத்துவ” அடைமொழிகளோடு உருவாக்கபட்ட சொற்றொடர்கள் தலைப்புகளாக் கொண்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடந்த 70 ஆண்டு காலத்தில் தோன்றியுள்ளன.
[2] பல இணைதளங்கள் சித்தர்களைப் பற்றி, சித்தர்மருத்துவத்தைப் பற்றி இணைதளங்களில் அதிகமாகவே விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கம் போல மூலங்களைக் கொடுக்காமல், மற்றவர்களின் எழுத்துகளை, கருத்துகளை, தமது போல வெளியிட்டு வருகிறார்கள்.
[3] Weiss, Richard S, Recipes for Immortality – Medicine, Religion and Community in South India, , Oxford University Press, USA, 2008, pp.3-4.
[4] படிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதனால், அவ்வாறு எழுதுகிறார்களா அல்லது மூலங்களைக் கொடுத்தால், தமது கையாண்ட முறை தெரிந்துவிடும் என்று தயங்குகிறார்களா அல்லது அவை இல்லவேயில்லையா என்ற சந்தேகங்களும் எழவேண்டிய நிலையுள்ளதால், மூலங்களைக் கொடுப்பது நல்லது.
[5] நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அவ்வாறு நூற்களை வெளியிட்டுள்ளதால் அவற்றைக் குறிப்பாக பெயர் சொல்லி எடுத்துக் காட்டவில்லை.
[6] சீ. கல்யாணராமன், பா. கமலக்கண்ணன் எழுதியுள்ள புத்தகங்களில் குறிப்பாக முக்கிய விஷயங்களை ஆதாரத்துடன் தந்துள்ளார்கள். வானதி பதிப்பகம் (17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017) பின்னவருடைய நூல்களை வெளியிட்டுள்ளது. கல்யாணராமன் தானே வெளியிட்டுள்ளார் – 1, 35வது தெரு, நங்கநல்லூர் காலனி, சென்னை – 600 061.
[7] தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை – 600 026.
[8] பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ், 25, வெங்கட்ராமர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை – 600 079.
[9] அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, சஞ்சீவி நகர், அரும்பபக்கம், சென்னை – 600 106.
[10] மீ.ப.சோமசுந்தரம், சித்தர்இலக்கியம்(இரண்டு பகுதிகள்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1988.
[11] மெக்கன்சி ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றான். பிறகு மூன்றில் ஒருபங்குதான் திரும்பக் கொடுக்கப்பட்டது. அவற்றிலும் பல பிரதிகளே. ஆங்கிலேயர் காலட்திலேயே, காகிதத்தில் பிரதியெடுக்கும் வேலை ஆரம்பித்தது.
[12] சாதாரணமாக, முறையாக பதப்படுத்தி, முறையான எழுதுகோல் மூலம், எழுதும் திறமையுடையவர்களால் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரம் ஆண்டு காலம் வரை இருக்கும். ஆனால், புதிய ஓலைச்சுவடிகளில், சமீபத்தில் எழுதியிருந்தால், அதனைத் தொடும்போது, நுகரும்போது காட்டிக் கொடுத்துவிடும். இப்பொழுது பதப்படுத்த ரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்துகிறார்கள்.
[13] இவையெல்லாம் முறையான அத்தகைய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் முதலியோர்களால் தான் முடியும். எல்லோரும், தமிழ் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லோரும், படித்து அர்த்தமும் தெரிந்து கொள்ளலாம் எனும்போது, அதன் ககலத்தைக் கட்டிக் கொடுத்துவிடுகிறது.
[14] P. V. Namasivaya Mudaliar, The Coronation Tamil Dictionary – A guide indispensable to Tamil Professors and scholars, Madras, 1911, p.626.
[15] இத்தமிழ் அகராதி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நமச்சிவாய முதலியார் அவர்களால் 1911ல் ஆங்கில அரசன் “இந்திய சக்கவர்த்தியாக” முடிசூட்டிக் கொண்டதன் நினைவாக வெளியிடப்பட்டது. பிறகு ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் என்ற பதிப்பகம், அதனை நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி என்று வெளியிட்டு வருகிறது.
N. Kathiraiver Pillai’s Tamil Moli Akarathi, Asian Educational Srvices, New Delhi, 1992.

No comments:

Post a Comment