Wednesday, 18 February 2015

நான் ஏன் மதம் மாறினேன்…? – 2

இரண்டு விஷயங்கள்:
ஒன்று – இந்தப் பதிப்பில் வேறு வழியில்லாததால் சில பல கிறித்துவத்திற்கே உரித்தான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கொஞ்சம் நெருடலாக இருக்கலாம். அந்தச் சொற்கள்: விவிலியம் ( பைபிள்), யேசு, ஜெபம் (prayer), பூசை (Holy Mass), பாவம், நரகம், மோட்சம், விசுவாசம் (faith), தேவதூஷணம் (blasphemy) சாத்தான் (satan). . .இரண்டு – நிறைய விஷயங்களில் கீழே வரும் பகுதி கிறித்துவத்திற்கும், இஸ்லாமுக்கும் பொருந்தியே வரும்.எண்பதுகளின் கடைசிகளில் என்றுதான் நினைக்கிறேன். ஒரு புத்தாண்டு தினம்; இரவுப் பூசை. மதுரை தூய மரியன்னை ஆலயம்.
பூசையின்போது நடுவில், முந்திரிப்பழ ரசம் யேசுவின் ரத்தமாக மாறுவதாக ஒரு கட்டம்; எழுந்தேற்றம் என்பார்கள். எல்லோரும் தலை வணங்கி, ஆராதிக்கும் இடம். அன்று, அந்த நேரத்தில் மனசுக்குள் ஒரு பொறி; இதெல்லாமே ஒரு அடையாளம்தானே; உண்மையிலேயே அப்படியேவா ரசம் யேசுவின் ரத்தமாக மாறுகின்றது என்ற எண்ணம். ச்சீ..ச்சீ ..இப்படியெல்லாம் நினைப்பதே பாவம் – என்னை நானே கடிந்துகொண்டு மேலும் தீவிரமாக பூசையில் ஜெபிக்கலானேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. எண்ணம் தீவிரமானது. இவை எல்லாமே வெறும் அடையாளங்கள் ஒரு simulation என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. இந்த எண்ணங்கள் எல்லாம் சாத்தானின் வேலைதான்; இதிலிருந்து வெளிவரவேண்டும் என்று உறுதிகொண்டேன். அதற்காகவே தினமும் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். ‘கடவுளே, எனக்கு சந்தேகங்களைக் கொடுக்காதே; அப்படியே கொடுத்தாலும், அதற்குரிய பதில்களையும் கொடு’ என்று உண்மையாக வேண்டினேன். ஆனால் மனதில் மேலும் மேலும் கேள்விகள் தோன்ற ஆரம்பித்தன. புதுப் புதுக் கேள்விகள். ஜெபமும் தொடர்ந்தது. பயன்தான் ஏதுமில்லை.

இப்போது ஜெபத்தின் மீதே ஒரு கேள்வி. ஜெபங்கள் கேட்கப்படுமா? “கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்” என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதே – அது உண்மைதானா என்ற ஒரு புதுக்கேள்வி இப்போது. சந்தேகங்கள் திரண்டு ஒரு புது தொடர் கேள்வி கீழ்க்கண்டவாறு உருவானது.

‘கடவுள்’ இருந்தால் – ‘அது’ முழு வல்லமை பொருந்தியதாக இருக்கவேண்டும். – omniscient

முழு வல்லமை பொருந்தியதாக இருப்பின் ‘முக்காலமும்’ உணர்ந்ததாக இருக்கவேண்டும்.

அவனன்றி அணுவும் அசையாது – என்ற நிலை. நடப்பதெல்லாம் நாராயணன் (கடவுளென வாசிக்கவும்) செயல்தானே!

அதாவது, எல்லாக் காரியங்களுமே, predetermined ஆக இருக்க வேண்டும்; அந்த நிலை – PREDETERMINISM.

(உன் தலையில் உள்ள ஒவ்வொரு முடியும் கூட எண்ணப்பட்டுள்ளது..)( தேவனன்றி எதுவும் எழுவதுமில்லை, விழுவதுமில்லை…) இப்படியாக பைபிளில் பலவாராகவும் கூறப்பட்டுள்ளது.

எல்லாமே predetermined ஆக இருந்தால், எல்லாமே ‘அவன்’ திட்டப்படி நடப்பதாக இருந்தால் – மனிதன் என்னதான் ஜெபம், தவம் செய்தாலும் எல்லாமே கடவுளின் திட்டப்படிதானே நடக்கும்; நடக்க வேண்டும்.
ஜெபத்தால் நடக்குமென்றால், கடவுளின் திட்டம் மாறக்கூடியதா? மாறக்கூடியதாயின், predeterminism என்னாவது?

predeterminism-கேள்விக்குள்ளானால், ‘கடவுளின்’ முழு வல்லமை என்னாவது?

ஆகவே, ஜெபத்தால் முடியாதததில்லை என்ற கிறித்துவத்தின் அடிப்படைக் கருத்து எனக்குக் கேள்விக்குறியானது.

கடவுளின் குமாரனாகக் கருதப்படும் யேசு பல இடங்களில் ஜெபம் செய்ததாக பைபிளில் கூறப்பட்டாலும், சிலுவையில் அறையப்படுவதற்கு சிறிது முன்பு, ‘முடியுமானால் இந்தக் கடினமான பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது; ஆனால், அது உம் எண்ணப்படியே ஆகட்டும்’ என்று ஜெபித்ததாகத் தெரியும். ஆனால் அவரது ஜெபமே கேட்கப்படவில்லை! அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஏனெனில், அது ஏற்கெனவே இப்படி நடக்குமென்று எழுதப்பட்டு விட்டது . அதைத்தான் நான் சொன்னென் – predeterminism என்று. அப்படியானால், கிறித்துவம் சொல்லும் ‘ஜெபமே ஜெயம்’ என்ற கூற்று என்னாவது?

இதனைத் தொடர்ந்த இரண்டாம் கட்டம்:

மனிதனுக்கு FREE WILL (தமிழில்..? – தன்னிச்சைச் செயல்நிலை-சரியாக இருக்குமா?) கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது; அதை அவன் நல்ல முறையில் செயல்படுத்தவேண்டும் என்பது கிறித்துவத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் = omniscient; அப்படியாயின், அவனன்றி அணுவும் அசையாது; அசையக்கூடாது. ஆடுபவனும் நானே; ஆட்டுவிப்பவனும் நானே! – என்ற தத்துவமே சரியானதாக இருக்கவேண்டும். அப்படியாயின், நடக்கும் காரியங்களுக்கு கடவுள்தானே பொறுப்பு? மனிதன் (ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்? ) எப்படி பொறுப்பாவான். கடவுளின் திட்டம் நிறைவேற மனிதன் ஒரு பகடைக்காய்தானே? FREE WILL உண்மை என்றால் PREDETERMINISM தவறாகாதா? PREDETERMINISM உண்மையெனின் FREE WILL தவறாகாதா? இரண்டில் ஒன்றுதானே இருக்கமுடியும். கடவுளின் omniscience சரியா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் freewill சரியா?

மதத்தை எதிர்த்தும், கடவுள் கோட்பாட்டையே கேள்வி கேட்கிறோமே என்ற அச்சநிலையிலிருந்து – எதுவும் கேள்விக்குட்பட்டதே என்ற நிலை நோக்கி நகரத்தொடங்கினேன். பெருத்த தயக்கமான தருணங்கள் அவை.

இந்த நேரத்தில் எனக்கு நானே ஒரு “பத்துக்கட்டளைகள்” ஏற்படுத்தியிருந்தேன். (இப்போது அதில் ஒன்றை மறந்து விட்டேன்!! இப்போது ஒன்பதுதான்!!) அதில் – என் இரண்டாவது கட்டளை: you open YOUR own eyes. உன் கண்களை நீயே திறந்து கொள். எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்; எனக்குள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் பிறர் சொல்லிக்கொடுத்து வந்தது. எனக்கு நானே ஏன் உண்மை என்ன என்பதைக் காணக்கூடாது? காணக் கண் திறந்தேன் – என் கண்களை எனக்கு நானே திறந்துகொண்டேன். இந்த நேரத்தில் தான் நான் முன்பு சொன்னபடி எந்தவித வெளித் தாக்கங்களின்றி, என்னைக் காத்துக்கொண்டு, எனக்கு நானே ஆசானாய் மாறி, எனக்கு நானே மாணவனாய் மாறி…மெல்ல..மெல்ல…மாறினேன். அந்த மாற்றங்களைப்பற்றி சொல்வதற்கு முன் உங்களிடம் தனியாக ஒரு வார்த்தை.

நான் முன்பு (சமய நம்பிக்கையோடு)இருந்த நிலையில் வாசிப்பவர்கள் நீங்கள் யாராவது இருப்பின் உங்களுக்காக ஒரு கேள்வி; உங்கள் பதிலும் -நியாயமான, உண்மையான- பதிலும் தேவை:

நீங்கள் ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ இரண்டில் எதுவாயினும் (இந்துக்களை இந்த ‘ஆட்டை’யில் சேர்த்துக்கொள்வதாயில்லை; காரணம் உங்களுக்கே புரியும். அதோடு அதைப்பற்றி பிறகு பேசுவதாக ஒரு திட்டம். நீங்கள் அப்போது, அங்கே கோபித்துக்கொள்ளலாம்; சரியா ? ) சரி; ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one? ஒரு வேளை ஒத்துக்கொள்ளலாமோ என்று நினைத்தாலும், நம்மோடு பிறந்து வளர்ந்த நம் மத உணர்வுகள் நம்மை அப்படி ஒத்துக்கொள்ள விடாது என்பதே உண்மை. அதேபோல், நீங்கள் ஒரு கிறித்துவர் என்று கொள்வோம்; இஸ்லாம்தான் / யூதமதம்தான் உண்மையான மதம்; நம்மை உய்விக்கும் மதம் என்று கூறினால் ஒத்துக்கொள்வீர்களா? அதைப்போலவே, நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருப்பின், கிறித்துவம்தான் நம்மை இறைவனோடு ஐக்கியப்படுத்தும் உண்மையான மார்க்கம் என்று கூறினால் … ?

அனேகமாக, இரு தரத்தாரும் ஒரே பதிலைக்கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். ‘எங்கள் மதம் / மார்க்கம் சரியென்று தெரிந்தபிறகு எதற்காக அடுத்த மதம் சரியென்று நான் சொல்லவேண்டும்’ – என்றுதான் இந்நேரம் நினைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படித்தான் நினைக்க முடியும்; ஏனெனில், நாம் அனைவரும் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம் அப்படி. “என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை” என்று இரண்டு மதமும் போதிக்கின்றன; அவற்றில் வளர்ந்த நம்மால் அடுத்த மதத்தில் உண்மை இருக்கலாம் என்று நினைக்கவும் முடியாது. தன்னிலைப்படுத்துதல் = subjectivity -இதுதான் மதங்கள் விஷயத்தில் நாம் கொள்ளும் நிலைப்பாடு. இதிலிருந்து மீள, மாற, மீற நம்மால், மதங்களைப்பொறுத்தவரை obectivity -யோடு (obectivity = தமிழ்ச்சொல் ? ) நடந்துகொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மதங்கள் எல்லாமே பொதுவாக பிறப்போடு வருவது. நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்ட விஷயம். நம்பிக்கையென்றாலே, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட காரியங்கள். அங்கே, rationality is the first victim – இங்கே, rationality என்பதற்கு ‘ பகுத்தறிவு’ என்று மொழியாக்கம் செய்தால் சரியாக வராது. கேள்விகளுக்கு இங்கு அளிக்கப்படும் அந்தஸ்து – தேவதூஷணம். நம்மை நாமே ஒரு வட்டத்துக்குள் வைத்துக்கொள்கிறோம். அதிலிருந்து வெளியே தலை நீட்டுவதே பாவம் என்ற கருத்தோடு வளர்க்கப் பட்டவர்கள் நாம்.

இதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால், என் மதம்தான் சரியென்ற கருத்து நம் எல்லோரிடமும் மிக ஆழமாகப் பதிந்துபோய் விடுகிறது. என் அம்மா நல்லவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், என் அம்மாதான் நல்லவர்கள் என்று சொல்வதுதான் தவறு.

இதைவைத்தே யோசிப்போமே; நம் தாய், தந்தையர்கள் எல்லோரும் தவறே இல்லா புனிதர்களா என்ன; ஆயினும், நம் அப்பா, அம்மா என்ற பாசத்தில், பிரியத்தில் அவர்களிடம் நாம் ஒட்டியிருக்கிறோமே அதுபோலத்தான் மதங்களோடு நம் உறவு. தாய், தந்தையரையாவது ஒரு கட்டத்தில் அவர்களின் தவறுகளை வைத்துக் கணிப்போம். ஆனால், நம் மதத்தில் தவறுகள் இருக்கக் கூடும் என்ற நினைவே நமக்கு ஒவ்வாதது .

சிக்கெனப்பிடித்தது மதம்.












  • தருமி,
    கலக்குறீங்க!
    என்னுடைய பதிலை சுருக்கமாக சொல்ல முயற்சி செய்கிறேன்..என் புரிதல் படி யூதர்கள், கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள் அனைவரும் வணங்கும் கடவுள் ஒன்று தான் (கடவுள் ஒருவரே என்பதற்காக இல்லை .’யாவே’ யும் ,’பரமபிதா’வும் ,’அல்லா’ வும் வேறு சொல் பிரயோகங்களே) . மோசஸ்(மூசா நபி) , இயேசு (ஈசா நபி) ,முகமது (முகமது நபி) ஒரே கடவுளையே பிரதிநிக்கின்றனர் .மேரி -க்கு இறைவார்த்தையை அறிவித்த கபிரியேல் தூதர் தானே முஹமதுவுக்கு குரானை இறக்கியதாக சொல்லப்படுகிறது (தவறென்றால் முஸ்லிம் அன்பர்கள் திருத்தவும்) .ஆக யூதர்கள் இயேசுவின் வருகைக்கு முற்பட்ட அனைத்தையும் நம்புகின்றனர் .கிறிஸ்தவர்கள் அதோடு கூடுதலாக இயேசு இறைமகன் என்று நம்புகின்றனர் ..முஸ்லிம்கள் இயேசு இறைமகன் அல்ல ,இறை தூதர் என்ற திருத்தத்தோடு ,இறுதித் தூதராக முகமதுவை நம்புகின்றனர் ..ஆக இறை தூதர்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவர்கள் அனைவரும் வணங்கும் கடவுள் ஒன்று தானே? ‘அல்லா’ என்பது ‘கடவுள்’ என்பதன் அரபு வார்த்தை .அரபு விவிலியத்தில் கூட ‘அல்லா’ என்று தான் இருக்கும் என கேள்விப்படுகிறேன் .
    எனவே மத ரீதியாக சில நடைமுறைகளும் நம்பிக்கைகளும் வேறுபடினும் இம்மக்கள் குறிப்பிடும் கடவுள் ஒன்று தான்.
  • No comments:

    Post a Comment