Friday, 27 February 2015

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 4 (ஆத்மஞானம்)

நான் ஆத்மா பேசுகிறேன். அருட்பெருஞ்ஜோதியான இறைவனின் ஒரு துளி நான். என் இயல்புகள், நோக்கம், ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

இயல்புகள்: ஒரு புள்ளி வடிவத்துடன் இருப்பவன் நான். எனக்கு அழிவில்லை. இறைவனின் கட்டளைப்படி பிறவி எடுக்க வேண்டியது என் கடமை. நான் பக்குவப்பட்டால், உணர/அறிய ஒன்றும் இல்லாத பட்சத்தில் பிறவி எடுக்க வேண்டியதில்லை. அதை முடிவு செய்பவரும் இறைவனே. இறைவனின் படைப்பில் எல்லா ஆத்மாக்களுக்கும் சமமே. இறைவனின் துளி என்பதால், எனது இயல்பு சுயநலமற்ற தூய அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடாகிய பிற ஆத்மாக்களுக்கு உதவி செய்வதே எனது சுயதர்மம். அமைதியாய், ஆனந்தமயமாய் இருப்பது எனது இயல்பு.

பிறவிகள்: இறைவனின் ஆணைப்படி நான் பிறப்பெடுக்க வேண்டும். எடுக்கும் பிறவிகளில் சில நிலைகள் உண்டு. முதல் நிலை ஓரறிவு (தொடுணர்வு) படைத்த புல்பூண்டு, மரங்கள். இரண்டாம் நிலை ஈரறிவு (சுவையுணர்வு) கொண்ட நீந்துவன. மூன்றாம் நிலை மூன்றறிவு (நுகர்வுணர்வு) கொண்ட ஊர்வன. நான்காம் நிலை நான்கறிவு (பார்க்கும் திறன்) கொண்ட பறப்பன. ஐந்தாம் நிலை ஐந்தறிவு (செவியுணர்வு) கொண்ட விலங்கினம்.

பல பிறவிகள் எடுத்து ஐந்து நிலைகள் கடந்து எடுக்கும் பிறவி மனிதப்பிறவி. இப்பிறவிகளில் எல்லாம் இயற்கையின் நியதிக்கு உட்ப்பட்டு வாழ வேண்டிய கட்டாயம். இயற்கையுடன் இயைந்து வாழ்வதால் ஆனந்தம் மட்டுமே.

நான் எடுக்கும் உடல்களில் ஆதார சக்தியாய் விளங்குபவன் நானே. தன்னிச்சையாய் செய்யப்படும் காரியங்களுக்கு (சுவாசிப்பது, செரிப்பது, இருதயம் துடிப்பது, இரத்தம் ஓடுவது) சக்தி வழங்குவது நானே.

மனிதப்பிறவி: நான் எடுக்கும் பிறவிகளிலே மிகவும் உன்னதமான பிறவி மனிதப்பிறவி ஆகும். ஏனென்றால், இப்பிறப்பின் மூலம் இறைவனை அடையலாம். மனிதப்பிறவி எடுக்கும்பொழுது மட்டும், மனம் (மனஸ்-மனுஷன் - மனிதன்) என்ற ஒரு வஸ்து உருவாகிறது. இதுவே ஆறாம் நிலை என்ற ஆறாம் அறிவு (பகுத்தறிவு) ஆகும்.

மனம்: மனம் என்பது எண்ணக்குவியல். வாயின் மூலம் வலை கட்டி அவ்வலையிலே இருக்கும் சிலந்தி போல மனது. எண்ணத்தை தோற்றுவித்தும், அவ்வாறு தோன்றிய எண்ணங்களில் கிடப்பதும் மனமே.

மனம் என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த வரம் மற்றும் சாபம் ஆகும். மனமிருப்பதால் எண்ணமுடியும், எண்ணியதை ஐம்புலன்களினால் அடைய முடியும். அதனால் மனமென்பது வரமாகும். மற்ற உயிரனங்களுக்கு இல்லாத ஒன்று மனிதனுக்கு மட்டும் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் பகுத்தறிவு.

ஆனால், இந்த மனத்தில் தோன்றும் முதன்மையான எண்ணங்களில் ஒன்று, ‘நான்’ என்ற ஆணவம். ‘நான் ஆத்மா அல்ல, இந்த உடலே நான்’ என்ற எண்ணமே!. இதுவே சாபம்! இந்த ஆணவத்தினால் செய்யப்படும் வினைகளினால் வினைப்பயன் (கர்மா) என்னை தொற்றிக்கொள்கிறது. நிலையாகிய இறைவனையும், ஆத்மாவாகிய என்னையும் மறந்து, இந்த உடலே நிலையானது, உடலால் அனுபவிக்கும் இன்பமே நிலையானது என்ற எண்ணம் வலுக்கிறது. இந்த எண்ணமே மாயை. ஆக தூய ஆன்மாவாகிய நான் மனித உடலெடுத்ததும் ஆணவம், கன்மா, மாயை என்ற மும்மலங்கள் சூழ்கின்றன. இந்த மலங்களை என்னிடம் இருந்து களைய நான் பலப்பல பிறப்புகள் எடுக்க வேண்டியுள்ளது.
மனத்தின் இயல்பு கேட்க மட்டுமே தெரியும். என் இயல்பு கொடுக்க மட்டுமே தெரியும். மனம் உலக ஆசையில் ஈடுபட்டு, என்னை மறந்து, ஐம்புலன்களையும் தன் இஷ்டப்படி ஆட்டுவித்து உவகை கொள்ளும். உவகை இல்லாத நிலையில், கவலை கொள்ளும். உவகை அடைந்து முடித்த பின்னர், மற்றொரு ஆசையை தேடி ஓடும். மனதின் ஆசைகளுக்கு அளவில்லை, அடையும் துன்பத்திற்கும் எல்லையில்லை.
ஆத்ம திருப்தி:கொடுக்க மட்டுமே தெரிந்த எனக்கும், கேட்க மட்டுமே தெரிந்த மனதிற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் மனிதன் இழப்பது அமைதி/நிம்மதி. ஆத்மா, மனம், உடல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் பயணப்பட்டால் வாழ்க்கை இனிமையானதாய் இருக்கும். ஆனால் பல மனிதர்களின் வாழ்வில் இம்மூன்றூம் வெவ்வேறு வழியில் பயணப்படுகிறது. ஆகையால்தான், மனித வாழ்வில் பல துயரங்கள், துன்பங்கள்.
உதாரணத்திற்கு, கர்ணனின் கடமை தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களை காப்பதும், அவர்கள் கேட்பதை அளிப்பதும். தன்னை எதிர்ப்பவர்கள் தனது தம்பிகள் என்று அறிந்தும், தன்னிடம் தஞ்சம் புகுந்த துரியோதனனை காத்தான். கிருஷ்ணனிடம் புண்ணியத்தின் பலனை தானம் செய்து மோட்சம் அடைந்தான்.
இப்படி ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு காரண காரியத்திற்காக / கடமை செய்ய இவ்வுலகில் மனித பிறவி எடுக்கின்றன. அது என்ன கடமை என்று அறிய மனிதன் முற்பட வேண்டும். அதை அறிந்து, அந்த கடமையை செய்தால் ஆத்மதிருப்தி கிடைக்கும். மனித வாழ்வும் இனிமையாய், பயனுள்ளதாய், ஆனந்தமயமாய் இருக்கும்.
ஆத்ம ஞானம்: இவ்வுலகில் மனதின் ஆசையை நிறைவேற்றி கொள்ள ஓடும் மனிதர்கள் எல்லோரும் ஆறாம் நிலையில் இருக்கிறார்கள். அப்படி தெறிக்கட்டு ஓடும் மனதை அடக்கி, ‘நான் ஒரு ஆத்மா’ என்று உணர்பவர்கள் ஏழாம் நிலையில் அடியெடுத்து வைக்கிறார்கள். இந்நிலையில் இருந்தவர்கள், மனோநாசம் செய்து, எண்ணங்களற்ற நிலையில் இருந்த இரமணர். ‘ஆசைகளே துன்பத்திற்கு காரணம்’ என்று கூறி ஆசைகளை துறந்து, ஆன்ம நிலையான அன்பின் வடிவமாய் இருந்த புத்தர்.
ஆத்ம திருப்தி அடைந்து, இந்த ஏழாம் நிலையை அடைய வேண்டியதுதான் மனிதப்பிறவி எடுத்த எனது நோக்கம்.

No comments:

Post a Comment