Sunday, 15 February 2015

சமய நல்லிணக்கம் பேண ஏற்ற வழிகள் மேற்கொள்ள வேண்டும்

உலகிலேயே மதவிவகாரங்களை அதாவது மதங்களுக்கிடையேயான பிரச்சினைகளை,   தகராறுகளை ஆய்வு செய்து தீர்வு காண்பதற்காக தனிக்காவற்படை அமையப்பெற்ற நாடு என்ற பெருமை நமது தாய்த்திரு நாடு பெறுகின்றது.
இதில் பெருமைப்படுவதற்கு எதுவுமில்லை. இவ்வாறு மதங்களுக்கிடையேயான பிரச்சினைகளைக் கண்காணித்து,  ஆய்வு செய்து தீர்வு காண வழி செய்வதற்காக ஒரு காவற்படை அமைக்கப்படுகின்றது எனும் போது அது பல் மத கலாசாரம் கொண்ட நாடு என்று இதுவரை இருந்துவந்த பெருமைக்கு ,  கூற்றுக்குப் பெரும் பின்னடைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது எதிர்காலத்தில் மதங்களுக்கிடையேயான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்புக்கூற தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும், நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று சிந்திக்குமளவிற்கு நிலைமை விரிவடையவும் மாற்றமடையவும் இடமுண்டு.

 மனிதன் எப்படியும்  வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உரிய, முறையான,  பண்பான வழிகளைக் காட்டுபவையே  சமயங்கள். மனித குலத்தின் நாகரீகத்தின் ஒரு அங்கமாகவும் சமயங்கள் விளங்குகின்றன. மனிதனைத் தவிர உலகிலுள்ள ஏனைய உயிரினங்கள் பிறக்கின்றன,  உயிர் வாழ்கின்றன,  இறக்கின்றன,  இடைப்பட்ட காலத்தில் உண்கின்றன,  உறங்குகின்றன,   சந்ததியை பெருக்குகின்றன.

 ஆனால் பகுத்தறிவுள்ள மனிதகுலம் அதற்கு அப்பால் சிந்தித்து செயற்பட வழியமைக்கப்பட்டுள்ளது. அவற்றிலே பல பெறுமதிகள் பொதிந்துள்ளன. சமூக இணக்கப்பாடு,  நல்லுறவு வாழும் முறைமை, ஆராயும் ஆற்றல்,  ஒழுக்கம், கருணை,  உதவும் மனப்பான்மை என்று அவை விரிவடைந்து செல்கின்றன.
இவையாவற்றிற்கும் அடித்தளமாயிருப்பது,  ஆதாரமாயிருப்பது சமய வழிகாட்டல்களே என்பதை ஆராயும்போது புரிந்து,  தெளிந்து கொள்ள  முடிகின்றது.
இவ்வாறு பெறுமானம் மிக்க மனித குல நல்வாழ்வுக்கு,  நிம்மதியான வாழ்வுக்கு வழிகாட்டும் சமயங்களுக்கிடையே, சமய தத்துவங்களிடையே போட்டியும் போராட்டங்களும் ஏற்பட்டு சமூகச் சீரழிவு எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதென்றால் அதற்கான பொறுப்பு சமயத் தலைவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் மற்றும் பொறுப்பற்ற சுயலநலவாதி அரசியல்வாதிகளுமே காரணகர்த்தாக்களாக அமைகின்றனர். மறைக்கவோ,  மறுக்கவோ முடியாத இந்த நிலை யதார்த்தமானது,  கீழ்த்தரமானது.

இன்று பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள மதங்களுக்கிடையேயான குரோத சிந்தனை ஏற்பட்டு பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன என்பது வரலாற்றுப் பதிவுகளாகும்.

 மதங்களுக்கிடையேயான குரோத உணர்வுகள் மேலெழவும் போட்டிகளும் விமர்சனங்களும் ஏற்படவும் காரணியாயமைந்துள்ளது. அன்று முதல் இன்றுவரை தவறான மதச் சிந்தனையே என்பது தெளிவானது. ஆம், தனது அல்லது தான் சார்ந்துள்ள மதம்தான் உயர்ந்தது மற்றைய சமயங்கள் அவற்றின் போதனைகள் தரமற்றவை என்று கூறும் போக்கு என்று உருவானதோ அன்றே மத நல்லிணக்கத்திற்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. இந்த உண்மை புரிந்து கொள்ளப்பட வேண்டும். 

நோயைக் கண்டறிந்து பரிகாரம் காண வேண்டும். பூசி மெழுகக்கூடாது. நம் நாட்டில் மதமாற்றம், அதன் மூலம் மொழி மாற்றம், இன மாற்றம் என்று பாதிப்புக்குள்ளான சமூகம் இந்துத் தமிழ்ச் சமூகமே என்பதை வரலாற்றுப் பதிவுகள் மிகத் தெளிவாகவே பதிவு செய்துள்ளன. வெளிப்படுத்தியுள்ளன. 

ஆதியிலே இலங்கையில் நிலைபெற்றிருந்த இந்து சமயம் பின்னாளில்  புகுந்த புத்த சமயத்தின் தாக்கத்தால் வலுக்குன்றியது. ஆனால் புத்த சமயம் தனது கோட்பாட்டை,  தத்துவத்தை வெளிப்படுத்தி மக்களை வசியப்படுத்தியதேயன்றி புத்த சமய கோட்பாட்டின்படி அன்று மதமாற்றம் செய்ய வேண்டுமென்று கூறப்படவில்லை. இன்றும் கூறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்து சமயக் கோட்பாடுகளுக்குப் பெரிதும் ஒத்ததாகவிருந்தமையே இந்துக்கள் ஆதியில் புத்த சமயத்தைத் தழுவுவதை இலகுபடுத்தியது.

 புத்த சமயத்தின் வருகையுடன் பாளி மொழியும் புகுந்ததால் தமிழுடன் அம்மொழியும் கலந்து புதிய மொழியை உருவாக்கிவிட்டது. ஒட்டுமொத்தமாக ஆதியில் இத்தீவில் புத்த மதத்திற்கான மதமாற்றம் தமிழ் மொழிக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

 பின்நாளில் இந்நாட்டில் புகுந்த இஸ்லாம், கத்தோலிக்க,  கிறிஸ்தவ மதங்கள் ஊடாக நாட்டில் மேலும் சமயப் பிளவுகள் உருவாக வழி செய்யப்பட்டன. மேற்குறித்த மதங்களும் மனித குல வாழ்வின் மேம்பாட்டிற்கான வழிகளையே போதிக்கின்றன,   காட்டுகின்றன.  அதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு மறுக்கும் போது தான் மதங்களுக்கிடையேயான பிரச்சினைகளும் தகராறுகளும் ஏற்படுகின்றன.
வேண்டத்தகாத சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படுகின்றது.
இன்று உலகின் சமூகங்களுக்கிடையேயான பிரச்சினைகளின் ஆணிவேராக அமைந்திருப்பது மொழி மற்றும் மதங்களாகவேயுள்ளன.  ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள,  புரியச் செய்ய வழி செய்யும்  மொழியால் நாடு நாசமடைந்ததற்கு நம் நாடே சான்று பகர்கின்றது. அதேபோல் மதங்களால் சீரழிவை நோக்கி நடைபோடும் நாடாகவும் நம் நாடு தடம்பதிக்கின்றது.

 தீர ஆய்வு செய்யும்போது இன்றைய நிலையைத் தடுத்து நாட்டில் சுமுக சூழ்நிலையையும் இனங்களுக்கிடையேயான நல்றுறவையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடிய வழியாக இந்து சமயம் காட்டும் வழியுள்ளது. அதாவது இந்து சமயத்திலே பிறப்பு முதல் இறப்பு வரை,  இறப்பின் பின்புகூட சமயம் சார்ந்த சடங்குகள்,  சம்பிரதாயங்கள் நிறையவேயுள்ளன. சடங்குகள் நிறைந்த சமயம் இந்து சமயம் என்று கூறப்படுகின்றது.

 ஆனால் எத்தனையோ சடங்குகளைக் கடைப்பிடிக்க வழி செய்யும் இந்து சமயத்தில் பிற அந்நிய மதத்தவரொருவனை இந்து சமயத்தில் இணைத்துக் கொள்ளவென்றோ அன்றி இந்து சமயத்திலிருந்து நீக்கவென்றோ எந்தவொரு கோட்பாடோ,  சடங்கோ,  சம்பிரதாயமோ இல்லை. அதாவது சமயம் கடந்த சமயமாக சகல மக்களும் ஒரே இறைவனின் படைப்புகளாக நோக்கும் இந்து மத சிந்தனையின் படி ஒருவரை ஒருவர் மதமாற்றம் செய்யும் செயற்பாடுகள்,  சடங்குகள்,  சம்பிரதாயங்கள் கைவிடப்பட்டால் அல்லது தடை செய்யப்பட்டால் நாட்டில் சமூக நல்லுறவுக்கு வழிதிறந்ததாயமையும்.
 மதமாற்றப் போதனை செய்வோர் தமது மதக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம்  கொடுத்து விளக்கமளிப்பதைவிட மாற்று சமயங்களை இழிவுபடுத்துவதிலேயே குறியாயிருப்பதை எவராலும் மறுதலிக்க முடியாது. உண்மை நிலை, யதார்த்த நிலை இதுவாகவேயுள்ளது.

 பல்லாயிரம் ஆண்டுகளாக உலகில் நிலைபெற்றது மட்டுமல்ல உலகின் ஆதி முதல் சமயமான இந்து சமயத்திலுள்ள உருவ வழிபாட்டை இழிவுபடுத்தி,  விமர்சித்து மதமாற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதை காண முடிகின்றது. இந்து சமயத் தத்துவங்கள் இழிவு செய்யப்படுகின்றன,  விமர்சிக்கப்படுகின்றன,  இந்துக் கோயில்கள் தாக்கப்படுகின்றன. சில பாடசாலைகளில் பயிலும் இந்துப் பிள்ளைகள் தமது சமய சின்னங்களை அணிவதும் சமய நிகழ்வுகள் நடத்துவதும் தடுக்கப்பட்டுள்ளன.

 இந்நாட்டின் பௌர்த்தர்களில் மிகப் பெரும்பான்மையினர் மட்டுமல்ல அநேகமானவர்கள் இந்துத் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்துக்களின் சமய ரீதியான விசேட தினங்கள்,  சம்பிரதாயங்கள் கூட சுவீகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்துக்களை அந்நியராக பார்க்கும் நிலையுமுள்ளமையும் காணப்படுகின்றது. பல்கலைக்கழகத்தில் பௌத்த நாகரீக பாடத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற அம்மணியொருவர் என்னிடம் நீங்கள் பிள்ளையாரையும் முருகனையும் வணங்குகின்றீர்களா? இந்துவான நீங்கள் ஏன் அவர்களை வணங்குகிறீர்கள் என்று கேட்டது மனதில் நிழலாடுகின்றது. சமயங்களுக்கிடையே புரிந்துணர்வு,  அறிவு அந்த அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தெய்வமான கந்தன் கோயில் கொண்ட கதிர்காமம் இந்து யாத்திரைத் தலமா? பௌத்த யாத்திரைத் தலமா? அன்றி பொதுவானதா? கதிர்காமத் திருத்தல முகப்பிலேயிருந்த ‘ஓம்‘ என்ற தமிழ் எழுத்து அகற்றப்பட்டது சமய நல்லுறவின் சிதைவின் வெளிப்பாடு. அது மட்டுமல்ல அநுராதபுரம் புனித நகரம் என்ற போர்வையில் அங்கிருந்த இந்து,  இஸ்லாம், கிறிஸ்தவ மதத் தலங்கள் அகற்றப்பட்டமையும் அண்மையில் தம்புள்ளை மற்றும் கொள்ளுப்பிட்டியில் இருந்த அம்மன் திருக்கோயில்கள் அகற்றப்பட்டமையும் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு செய்யும் செயல்கலல்லவா? 

அதேபோல் வடக்கு,  கிழக்கு மாகாணங்களுக்குட்பட்ட நாட்டின் பல பகுதிகளில்  இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டும் சிதைக்கப்பட்டுமுள்ளன. மட்டக்களப்பு போன்ற தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமே வாழும் பகுதிகளில் சிதைக்கப்பட்ட இந்துக் கோயில்களை சிதைத்த சமூகவிரோதிகள் அடையாளம் காணப்படவில்லை, காட்டப்படவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்தது போல இன்றைய நிலை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

எந்த சமயம், எந்த சமயக் கோட்பாடுகள் உயர்ந்ததென்று பகிரங்க விவாதத்திற்கு  அறைகூவல் விடுக்கப்படுகின்றது. முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இன்று பல தரப்பினரும் இது பற்றி கூப்பாடு போடுகின்றனர். நியாயம் கோரப்படுகின்றது. நிலைமையின் உச்சகட்டமாக தனிக் காவற்படைக் கோட்பாடும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்துக் கோயில்கள் தாக்கப்பட்ட போது குரல் கொடுக்க எவருமிருக்கவில்லை. இடைக்கிடை முனகல் சத்தம் மட்டுமே வெளிப்பட்டு அடங்கிவிடும் வழக்கம் தொடர்ந்தது.

 உலகில் இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரு நாடுகளான  இந்தியாவும் நேபாளமும் இன்று தம்மை மதச்சார்பற்ற நாடுகளாக பிரகடனப்படுத்தியுள்ளன. ஆனால் பல நாடுகள் மதம் சார்ந்த நாடுகளாகத் தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளன. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் அல்லாதோர் பயணிக்கக்கூடாத வீதிகளும் உள்ளன. அவ்வாறே அந்நாட்டின் மதம் தவிர ஏனைய மதங்களைப் பின்பற்றுவது கூட தடை செய்யப்பட்ட நாகரிக நாடுகள் உலகிலுள்ளன.
மனிதனை நல்வழியில் வாழ வழிகாட்டும் சமயங்களையும் அவற்றின் கோட்பாடுகளையும் பின்பற்றுவதைவிட மாற்று மதங்களுக்கெதிராகச் செயற்படுவதே சமய வாழ்வு,  சமயத்திற்குச் செய்யும் சேவை என்ற தப்பிதமான சிந்தனை நிலவும் வரை சமயங்கள் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு செய்பவையாகவே அமையும் நிலை உள்ளமையை அவதானித்தறியலாம். நமது நாட்டில் தனிக்காவல் படை அமைத்து சமயங்களுக்கிடையேயான பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற நோக்கு எவ்வளவு பயன் தருமோ தெரியாது.
பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை போலும் ஆகலாம். அதற்கு வரலாற்றிலும் ஒரு பாடமுண்டு. தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்க,  உள்ளூரில் பாதுகாப்பை மேற்கொள்ள ஊர்காவல் படை அமைக்க வேண்டும் என்று அன்றைய ஜனாதிபதிஜே.ஆர். ஜயவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்தது.

 நோக்கம் சரியாக இருந்த போதிலும் அந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிந்தனையில் உதித்த ஊர்காவல் படையால் பெற்ற அனுபவத்தை  மறந்துவிட முடியாது. இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே சுமுக நிலை, நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால்,  ஏற்படுத்த வேண்டுமானால் முதலில் மாற்று மதங்களை விமர்சித்து மதமாற்றம் செய்யும் தற்போதுள்ள நடைமுறைச் சட்டத்தால் தடுக்கப்பட வேண்டும். இதுவே  நாட்டின் சகல சமூகங்களும் பிரச்சினையின்றி இணைந்து வாழ வழி செய்யும். மதப்பிரச்சினைகளுக்கு வழி செய்வோர் தண்டிக்கப்படவும் வேண்டும்.

No comments:

Post a Comment