Friday, 6 March 2015

ஆதி சேஷனின் ஆணவமும் ஆனை முகனின் கருணையும்! பாப்பாமலர்!


முன்னொரு சமயம் கைலாயத்தில் பார்வதி-பரமேஸ்வரர் தம்பதியராக வீற்றிருக்க தேவர்கள் அனைவரும் அவர்களை தரிசித்து வணங்கி ஆசிப்பெற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சிவனாரின் ஜடா மகுடத்தில் சுற்றி இருந்த பாம்பான ஆதி சேஷன் தேவர்கள் அனைவரும் தன்னைத்தான் வணங்கி செல்வதாக நினைத்து ஆணவம் கொண்டான்.

    உலக நாயகனான பரமேஸ்வரரின் கழுத்தில் இருப்பதால் தன்னை எல்லோரும் வணங்குகிறார்கள் என்ற மமதை கொண்டான். மரியாதை என்பது தாமாக வருவது கேட்டுப்பெறுவது அல்ல! பெரியோருடன்
சிறியோர் இருக்கையில் பெரியோருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் பெரியோரைச் சேர்ந்ததே! சிறியோருடையது அல்ல! இதை ஆதிசேஷன் உணர்ந்தான் இல்லை! ஈசனின் கழுத்தை அலங்கரிப்பதால் எல்லோரும் என்னை வணங்கி செல்கின்றனர் என்று தவறாக நினைத்துக் கொண்டான்.
   ஆதிசேஷனின் இந்த நினைப்பை அறிந்த ஈசன் அவனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தார். தன் கழுத்தை சுற்றியிருந்த நாகத்தை பிடித்து இழுத்து தரையில் மோதினார். ஆதிசேஷனின் சிரம் ஆயிரம் பிளவாக பிளந்து போக அவன் மூர்ச்சித்து விழுந்தான்.தன்னுடைய கர்வமே தனக்கு இந்த அவல நிலையை தந்தது என்று துக்கித்து அழுதான்.
   அந்த சமயம் அங்கு நாரதர் வந்தார். ஆதிசேஷனே! ஈசனின் திருமுடியை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்ற நீ வீண் கர்வத்தால் இந்த துர்பாக்கிய நிலையை அடைந்தாய்! ஈசனுக்கு கிடைக்கும் மரியாதை உனக்கு கிடைப்பதாக அகம்பாவம் கொள்ளலாமா? ஈசனின் கோபம் தணிய வழி சொல்கிறேன் கேள். சர்வலோக நாயகனான விநாயகரை தொழு! அவரது நாமங்களை உச்சரித்து அர்ச்சனை செய்! அவரது அருள் உனக்கு கிட்டுமானால் உன் துன்பம் நீங்கும் என்றார்.
   ஆதிசேஷனும் நாரதரிடம் விநாயகரின் மூல மந்திரத்தை உபதேசம் பெற்று விநாயகரை பலவாறாக துதித்து வணங்கி வந்தான்.சதுர்த்தி விரதமும் அனுஷ்டித்து வந்தான். விநாயகர் அவனது தவத்திற்கு மெச்சி சிங்க வாகனத்தில் பத்து திருக்கரங்களோடு எழுந்தருளினார்.
   ஆதிசேஷன் அவரை வணங்கி! ஐயனே! என்னை மன்னித்தருளவேண்டும்! என்று வேண்டினான். யானைமுகத்தானும் அகமகிழ்ந்து, உன் கர்வத்தால் நீ இழந்த சக்திகள் உன்னை வந்தடையும். ஈசன் உன்னை ஓங்கி அடித்தமையால் பிளவுண்ட உன் தலையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு சிரமாகி ஆயிரம் சிரங்களுடன் இப்புவனம் முழுவதையும் நீ தாங்கி வருவாய். ஐந்து முகத்தோடு பரமேஸ்வரரின் திருமுடியிலும் இருந்து வரும் பாக்கியம் பெறுவாய். இப்போதைய நிலையில் நீ எனக்கு உத்திர பந்தனமாகவும் ஆகக் கடவாயாக! என்று வரங்கள் தந்தருளினார்.
  ஆதிசேஷனை தனது இடுப்பில் சுற்றி அணிந்தும் கொண்டார். விநாயகரின் அருளால் கருணையினால் இழந்த சக்திகளை பெற்ற ஆதிசேஷனும் முன்போல கர்வம் கொள்ளாது தனது பணிகளை செய்து வந்தான்.

ஆணவம் அழிவைத் தரும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

No comments:

Post a Comment