அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந்த மரத்தின் விதைகள், வேர், பட்டைகள் முதலியன பயன்படுகிறது. இதில் ஒருவகை மரம் வேர் அழிஞ்சில் என்பதாகும்.
ஏறிழிஞ்சி: ஏறு+ இழிஞ்சி என்பதே இவ்வாறு ஏறிழிஞ்சி என சேர்ந்து புணர்ந்தது. இழிஞ்ச மரத்து விதைகள் கீழே விழுந்து மீண்டும் மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும்
வித்தியாசமான மரமே ஏறிழிஞ்சி. இது
வித்தியாசமான மரமே ஏறிழிஞ்சி. இது
தெய்வீக மரமாகும். அழிஞ்சி, அழிஞ்சில், வேர் அழிஞ்சில் என்றும் இந்த மரம் வழங்கப்படுகிறது.
இந்த வேர் அழிஞ்சில் மரமானது பங்குனி, சித்திரை,மாதங்களில் பூத்து குலுங்குகிறது. பூக்கள் நறுமணம் வீசும். நல்ல அழகுடையது. ஆனி மாதத்தில் இதன் காய்கள் பழமாகின்றன. பழுத்த பழங்கள் கீழே விழுகின்றன. விழுந்த விதைகள் சில தேர்ந்தவிதைகள் நகர்ந்து ஏறி அடிமரத்திலும் கிளைகளிலும் ஒட்டிக் கொள்கின்றன. இவ்வாறு மரத்தில் ஒட்டிய விதைக் கூடுகளை பிரித்து எடுக்கவே முடியாது. நூற்றுக்கணக்கான விதைக் கூடுகளை எக்காலத்திலும் பார்க்க முடியும்.
நம் உடலில் ஏற்படும் சிறு கொப்புளங்கள் போல இந்த விதைக்கூடுகள் மரம் முழுவதும் ஒட்டி இருப்பது அதிசயமானது. இதன் விதைகள் ஏதோ ஓர் அற்புத சக்தியால் ஈர்க்கப்பட்டு இப்படி மரத்தின் வேரில் ஒட்டிக் கொண்டு இருப்பது காணக் கிடைக்காத ஓர் அற்புதமாகும்.
அழிஞ்சில் கூறும் ஆத்ம தத்துவம்!
அழிஞ்சில் மரத்தின் விதைகள் நகர்ந்து மரத்தில் ஏறி தாய் மரத்தை பற்றி விடாமல் இருப்பதைப் போல பக்குவப்பட்ட உயிரிகள் சில அம்மையப்பனை நோக்கி நகர்ந்து சென்று அவனிடம் சரணடைந்து அவனை விடாமல் பற்றிக் கொள்கின்றன. இந்த மரத்தை தரிசித்து வலம் வரும்போது உயிர்களும் இறைவனும் ஒட்டிப் பொலிகின்ற ஈஸ்வரனை தரிசித்த மன மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படுகின்றன.
ஆதிசங்கரர் பாடிய சிவானந்த லஹரியில் 61 ம் ஸ்லோகத்தில் ஐந்து உவமைகளுடன் பக்தி விளக்கப்பட்டுள்ளது.
அங்கோல மரத்தில் அதன் விதைகள் ஒட்டிக் கொண்டிருப்பது போல, காந்தத்தால் ஊசி ஈர்க்கப்படுவதைப் போல, கணவனது நினைவிலேயே கற்புடை மனைவி ஆழ்ந்து கிடப்பது போல, கொழுக்கொம்பை பற்றி கொடி தழுவி வளர்வது போல
கடலில் ஆறு சங்கமம் ஆகி மறைவது போல பசுபதியின் தாமரை திருவடிகளில் மனதை ஒருநிலைப் படுத்தி தியானிப்பதே பக்தி!
இதில் ஆதிசங்கரர் குறிப்பிடும் அங்கோல மரமே அழிஞ்சில் மரமாகும். பக்தியின் தன்மை இந்த அழிஞ்சில் மரம் போல இருக்க வேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.
சின்னகாவனம் சிவன் கோயில்:
பொன்னேரியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சின்னகாவனம் என்னும் ஊர் இங்குள்ள சிவன் ஆலயம் புராதணமானது. அஷ்டோத்திர ஈஸ்வரர் எனும் நுற்றெட்டீஸ்வரர் இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கிறார்.
கா என்றால் சோலை! வனம் என்றால் காடு. காவனம் சோலைவனம்! சின்ன காவனம் சிறிய சோலைவனம் என்று பொருள் படும். விஜயநகர மன்னர்கள் காலத்தில் இந்த ஊர் அதாவது வனம் பிரிக்கப்பட்டு பெரிய காவனம், சிறியகாவனம் என்று இரண்டாக பிரித்து இரண்டு சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது. பெரிய+அக்கா+வனம் பெரியகாவனம், சிறிய+அக்கா+வனம் சிறியகாவனம் என்று வழங்கி நாளடைவில் சின்னகாவனம் ஆனது என்றும் சொல்வர்.
பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்றும் சொல்வர். இங்குள்ள சிதைந்த கல்வெட்டுக்கள் பல்லவர் காலத்திய கோயில் என்று பகர்கின்றன.
இங்குள்ள அம்பாள் அஷ்டோத்திரவல்லி எனும் சிவகாமி அம்பிகை! பாசம் அங்குசம் இன்றி மேலிரு கரங்களில் தாமரை மலர் ஏந்தி லஷ்மி அம்சமாக திகழ்கின்றாள். கருணை வடிவாக காட்சி தரும் இவரை வணங்கினால் செல்வம் வளரும் என்பது நம்பிக்கை.
இந்த சின்னகாவனம் ஆலயத்தின் தல விருட்சம் நாம் முன்பு கண்ட வேர் அழிஞ்சில் ஆகும். காண்பதற்கு அரிய இந்த தல மரத்தையும் இறைவனையும் தரிசித்து வருதல் நமக்கு பெரும் பாக்கியமாகும்.
சின்னகாவனம் வள்ளலார் வாழ்ந்த இடமாகும். வள்ளலாரின் பாட்டி சின்னம்மாவின் ஊர் சின்னகாவனம். வள்ளலாரின் பரம்பரையை சேர்ந்தவர்கள் இன்றும் இங்கு வாழ்கின்றனர். இந்த ஊரில் வள்ளலாரின் நினைவு வழிபாட்டு மண்டபம் ஒன்றும் உள்ளது.
இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த சின்ன காவனம் சென்று அதிசய அழிஞ்சிலையும் ஆலயத்தையும் அதன் இறைவனையும் தரிசித்து இறைவனின் திருவடி பணிவோமாக!
(டாக்டர் டி செல்வராஜ் எழுதிய இலக்கியங்களில் சிவபெருமான் என்ற நூலில் இருந்து தழுவி எழுதியது)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
No comments:
Post a Comment