Thursday, 5 March 2015

எகிப்தில் சில நாட்கள்

“அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை. இரண்டு பேருமே குடிகாரர்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் போத்தில்கள் தனியாக கதை சொல்லும். கம்பன் வீட்டு கைத்தறிபோல எகிப்தில் எந்த குடிவகையும் குடிக்க முடியாது என்பதும் எங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல்களில் ஒன்று. அது இஸ்லாமிய நாடு. இதன் காரணத்தால் துபாயில் ஆளுக்கு இரண்டு போத்தல்கள் வாங்கியபோது அதற்கு உபரியாக எடுத்துச் செல்ல தள்ளிக்கொண்டு செல்லும் அழகான பெட்டியையும் தந்திருந்தார்கள். அந்தப் பெட்டியை எப்படியும் எகிப்துக்கு எடுத்துச் செல்வது எமது நோக்கமாக இருந்தது.
எகிப்திய விமான நிலையத்தில் இறங்கியதும் ஐரோப்பியரது நிறத்தில் அழகான இளைஞர் ஒருவர் எங்களுக்கான முகவர் என கூறி தன்னை அகமட் என அறிமுகபபடுத்திவிட்டு எங்களுக்கு விசா எடுத்துத்தருவதற்காக பாஸ்போட்டுகளுடன் சென்று விட்டார்.
மனிதர்களை எப்பொழுதும் கூர்ந்து பார்ப்பது எனது இயல்பு. அவுஸ்திரேலியாவில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். கருப்பு நிறமான அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இருந்த இடத்தில் சகல கண்டங்களையும் சேர்ந்தவர்கள் வந்துவிட்டார்கள். மனிதர்களின் நிறம் மூக்கு கண்; என்ற பனரோமிக்கான இந்த வித்தியாசங்கள் வெவ்வேறு சீதோசணத்திற்கு ஏற்ப பரிணாமமடைந்தபோது உருவாகியது. ஆனால் இப்பொழுது இந்த வித்தியாசங்கள் ஒரே இடங்களில் வாழும்போது விஞ்ஞானிகளின் பரிணாமக் கருத்தும் கட்டுடைபடுகிற வேளையில் படைப்பு கருத்தாக்கமும் கேள்விக்குள்ளாகிறது. இனிமேல் அவுஸ்திரேலியாவில் ஆண்டவனால் படைக்கப்படுபவர்கள் ஏன் வித்தியாசப்படவேண்டும்? அதேபோல் வெள்ளையர்கள் எல்லோரும் அவுஸ்திரேலிய சீதோசணத்திற்கேற்ப பரிணாம கருத்துப்படி கருமையாவார்களா?
விமான நிலையத்தில் உள்ள எகிப்திய மக்களின் நிறமும் பல தரப்பட்டது. தென் ஆபிரிக்காவின் நிலக்கரி நிறத்தில் தொடங்கி ஐரோப்பியரின் வெளிர் நிறம் வரையில் பலவண்ணமேனியர் வாழ்கிறார்கள். எல்லோருக்கும் மூக்கில் மட்டும் ஒற்றுமை இருந்தது. யாழ்ப்பாணத்தில் அந்தக்காலத்தில் மூக்குப்பேணி வீடுகளில் வைத்திருப்பார்கள். சாதி ரீதியில் குறைந்தவர்கள் அல்லது சாதி தெரியாதவர்கள் வந்தால் மட்டும் மூக்குப்பேணி வெளியே வரும் அந்த மூக்குப் பேணியின் மூக்கை நினைவுபடுத்தினார்கள்.
எகிப்தியர்கள் பாதிரிமாரின் நீண்டஅங்கியைப்போன்ற ஆடைகளை அணிகிறார்கள். அந்த உடைகள் பாலைவன வெப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் பகுதி வேட்டி சேலை போல் உள்ளே சென்ற காற்று வெப்பத்தை வெளியேற்றும் காற்றோட்டத்தை உருவாக்கும் உடுப்பு என நினைத்தேன். பெரும்பாலான பெண்களும் முகத்தை தவிர்த்து மற்ற பகுதிகளை ஆடைகளினால் மூடியிருந்தார்கள. ஆண்களிலும் பெண்களிலும் பெருந்தொகையினர் ஐரோப்பிய உடை அலங்காரத்தில் காணப்பட்டார்கள.;
அகமது இலகுவாக விசாவையும் எடுத்துக்கொண்டு, எங்கள் பெட்டிகளையும் எடுத்துவர உதவி செய்ததால் விமான நிலையத்தை விட்டுச் செல்வது மிகவும் இலகுவாக இருந்தது. மேலும் விமான நிலையத்தில் ரக்சியில் பேரம் பேசுவது போன்ற விடயங்கள் அவசியப்படவில்லை. ஒரு விதத்தில் இந்த பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்காதது கவலையை அளித்தாலும் அரபிய மொழி தெரியாமல் பேரம் பேசுவது இமயமலை ஏறுவது போல் இருந்திருக்கும்
மாலை நேர போக்குவரத்து நெருக்கடியில் ஹொட்டலுக்கு போவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுக்கும் என்று அகமத் சொல்லி விட்டு எங்களை வானில் ஏற்றினார்.
சிகப்பு கலந்த மண்நிற கட்டிடங்கள் நகரமெங்கும் அடுக்கு மாடியாக இருந்தன. வண்ணக் கலவையில் பச்சைக்கு பஞ்சம் இருந்தது. கண்களுக்கு அதிகமான வித்தியாசங்கள் இல்லை. எகிப்து 7 கோடி மக்களைக் கொண்ட பெரியதேசமாக இருந்த போதிலும் நைல் நதியை அண்டிய பிரதேசத்தில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள்.
உலகவரலாற்றில் பல போர்களையும் பல படையெடுப்புகளையும் பார்த்த தேசத்தின் தலைநகர் கெய்ரோ. அதன் சரித்திரத்தை மேலோட்டமாகவேனும் பார்க்காவிடில் மக்களையோ நகரத்தையோ புரிந்து கொள்ள முடியாது இப்போது உள்ள கெய்ரோவை புரிந்து கொள்ள சரித்திரத்தின் சில சுவடிகளைப் கொஞ்சம் பார்ப்போம்.
கெய்ரோ
தற்போதைய எகிப்து இஸ்லாம் மதத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதால் நாம் பார்க்கும் சரித்திரம் இஸ்லாமிய மதத்தின் வருகையில் இருந்து தொடங்குகிறது. AD 640 அரேபியாவில்-அக்கால அரேபியா இக்கால சிரியா, ஜோர்டான், ஈராக் மற்றும் அரேபிய வளைகுடா நாடுகளைக் கொண்டது. இந்தப் பகுதியில் இருந்து இஸ்லாம் எகிப்திற்கு சென்றது. சிரியாவின் ஒரு மாகாணமாக மாறியது. அக்காலத்தில் கெய்ரோ தலைநகராக இருக்கவில்லை. புராதன காலத்தில் இருந்து எகிப்தில் பல தலைநகர்கள் இருந்தன. புராதன எகிப்தின் தலைநகரம் மெம்பிஸ். கிரேக்கர் ஆண்டபோது அலெக்சாண்டிரா. கெய்ரோ பிற்காலத்தில்தான் எகிப்தின் தலைநகராகியது. AD  969 எகிப்துக்கு படை எடுத்த ருனிசியர்கள் அதனைக் கைப்பற்றினார்கள். (The Fatimid Caliphate- – பத்திமா முகமது நபியின் மகளாகவும் அலியின் மனைவியாகவும்; இஸ்லாத்தின் முக்கியமான இடத்தை வகிப்பவர். இவரது பெயரில்தான் அக்காலத்தில் உருவாகிய வட ஆபிரிக்காவில் பெரிய பிரதேசத்தை உள்ளடக்கிய இராச்சியம் இருந்தது.) கைப்பற்றியதும் அல்-கயிரோ(AL Qahira) பெயரிட்டு உருவாக்கிய நகரம் திரிபடைந்து பிற்காலத்தில் கெய்ரோவாகியது (Cairo). இந்த பாத்திமா கலிப்பேட் அரசு இஸ்லாத்தின் சியா எனப்படும் பகுதியில் இஸ்மயிலியை ((Ismailism)சேர்ந்தவர்கள். ஆனால் அக்காலத்தில் பெரும்பாலான எகித்திய மக்கள் சுனி இஸ்லாமியர்கள். மற்றவர்கள் கொப்ரிக் கிறிஸ்துவர்கள். இவர்கள் எகிப்தை சிலுவை யுத்தகாலம் வரை ஆண்டார்கள். சிலுவை யுத்தம் ஜெருசலேத்தை கைப்பற்ற மேற்கு ஐரோப்பா ரோமன் கத்தோலிக்க அரசுகளால் 1096 தொடங்கிய போது பாலஸதீனம் பத்திமா கலிப்பேட்டின்; சுயாதீனமான ஒருபகுதியாக இருந்தது. இந்த சிலுவை யுத்தம் இரு நூறு வருடங்கள் நடந்தது.
ஜேருசலேத்தை ஐரோப்பியரிடம் இருந்து மீண்டும் கைப்பற்றிய சலாடினால்(Saladin) எகிப்து சிரியாவில் ஒரு மாகாணமாகியது. இதன்பின்பு இதன் இடைப்பட்ட சில காலம் பிரான்சிய மன்னன் லுயிஸ் எகிப்தை(1249-1250) ஆளமுயன்றாலும் விரைவில் மாமலுக்கால்(Mamaluke); தோற்கடிக்கப்பட்டார்.
மாமலுக்கர்கள் சலாடினோடு போர்வீரர்களாக வந்த கோக்கேசிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள்; எகிப்தை பல நூற்றாண்டுகளாக ஆண்டார்கள்.
1798 பிரான்சிய தளபதியாக நெப்போலியன் வந்து மலுக்கை தோற்கடித்தாலும் அவர்கள் அதிக காலம் நிற்கவில்லை. இங்கிலாந்தால் தோற்கடிக்கப்பட்டதால் பிரான்ஸ்; வெளியேற 1801இல் அந்த இடத்தை ஓட்டமான் பேரசு என அக்காலத்தில் சொல்லப்பட்ட துருக்கியர் பிரான்சின் வெற்றிடத்தை நிரப்பவந்தார்கள். அப்படி வந்த துருக்கிய படையணியின் தளபதி ஆர்மேனியாவை பிறப்பிடமாக கொண்ட முகமட் அலி. அவரே தற்போதைய நவீன எகிப்தின் தந்தையாவார். இவர் அன்னியராக இருந்த போதிலும் எகிப்தை ஐரோப்பிய நாடுகள் போன்ற அரசை உவாக்குவதற்கு அரச நிர்வாகிகள் தேவை என நினைத்து மாணவர்களை ஐரோப்பா அனுப்பினார். தொழிற்சாலைகள் பாதைகள் பாதுகாப்பு படைகள் என்று ஒரு நவினமான தேசத்துக்கு தேவையான விடயங்களை கட்டமைப்பதிலும் ஈடுபட்டார்.
எகிப்தின் வரலாறு எகிப்தியல் என புதிய ஒரு கல்விப் பகுதியாக பல பல்கலைக்கழகங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இது வரலாறு மட்டுமல்ல பொறியியல் தொல்பொருளியல் மற்றும் மொழியியல் என பல துறைகளின் சேர்க்கையாகும்.
உலக வரலாற்றில் எகிப்தின் இடம் எவ்வளவு முக்கியமானது எனப் புரிந்து கொள்ள சிறிய தகவல் போதுமானது. வரலாறு பதிவாகிய காலத்திலிருந்து பேசப்படும் வீரர்களில் முக்கியமானவர்கள் மகா அலக்சாண்டர், ஜுலியஸ் சீசர் என்போர் கிறீஸ்துவிற்கு முன்பாக எகிப்;துக்கு வந்து போனார்கள். சிலுவை யுத்தத்தை வென்ற கேடிஸ் முஸலீம் ஹீரோ சலாடின் பின்பு நெப்போலியன் இருவரும் பிற்காலத்தில் வந்து போனார்கள். இப்படியான வீரர்கள் நடந்த மண்ணில் நாம் காலடி எடுத்து வைக்கிறோம் என்பது பெருமையாக இருந்தது.
இதை விட எகிப்தின் பாதிப்பால் பல விடயங்கள் உலகத்தில் நடந்தன. அதில் ஒரு விடயம் நமக்கு முக்கியமானது.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் நடந்த வாணிபம்; ஆரம்பகாலத்தில் சில்க் ருட் எனப்படும் மத்திய ஆசியா வழியே நடந்தது. பல போரால் அந்தப் பாதை மூடப்பட்டபோது பெரும்பாலான கிழக்கு – மேற்கு- வாணிபம் எகிப்;து வழியே நடந்தது. இந்த வியாபாரத்தை அக்காலத்தில் எகிப்தை ஆண்ட மாம்லுக்கியர் தங்கள் கையில் வைத்திருந்தார்கள்;. இதனால் எகிப்து செல்வச் செழிப்பான நாடாக இருந்தது. இந்த ஒற்றைப்படையான வர்த்தகத்தை உடைக்கவே 1498ல் வாஸ்கொடிகாமா கீழைத் தேசங்களிற்கு புதியவழி தேடி தென் ஆபிரிக்காவை சுற்றி இந்தியா வந்தார். அதனால்தான் இலங்கைக்கு போர்த்துக்கேயர் வந்தனர். பின்னாட்களில் கோட்டை அரசனையும் சங்கிலி மன்னனையும் தோற்கடித்தனர்.
எமது வரலாற்றில் எகிப்தின் தாக்கம் எப்படி இருக்கிறது?
செங்கடலையும் மத்தியதரைகடலையும் இணைக்கும் கால்வாயை நெப்போலியன் கட்ட நினைத்தது பிற்காலத்தில். அதை முடித்தபின் ஆங்கில –பிரான்ஸ் கொம்பனிகள் தங்கள் வசம் வைத்திருந்தன. அதை கமால் அப்துல் நாசர் தேசிய மயமாக்கியது போன்ற விடயங்கள் உலக சரித்திரத்தில் ஆழமாக பதிவான விடயங்கள்.

எனது நண்பன் பிரயாண ஒழுங்கை செய்திருந்ததால் நான் கடைசிவரையும் எந்த ஹோட்டல் என்று கூட பார்க்கவில்லை. பிரயாண விடயங்களை ஒழுங்காக செய்வதில் அவனில்; எனது நம்பிக்கை பலமானது. ஆனால் கிரடிட் கார்ட் பசிபிக் சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்க வேண்டும்.மற்றும்படி எந்தக் குறையும் இல்லை.
எங்களை சுமந்து கொண்டு வந்த வாகனம் வந்து சேர்ந்த இடம் கெய்ரோ மரியட். நைல் நதிக்கு மிக அருகாமையில் மட்டுமல்ல கெய்ரோவின் பிரதான பகுதியிலும் உள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து பல மணித்தியால பயணம் என்பதால் விரைவாக அறைகளுக்கு போய் இளைப்பாறுவது என்பதுதான் எமது நோக்கமாக இருந்தது. எமது அறையிலிருந்து நைல் நதியை பார்க்கக் கூடியதாக இருந்தது. நாங்கள் வெளியே பார்க்கிறோமோ இல்லையோ அறையின் ஜன்னல் ஊடாக என்ன தெரிகிறது என்பது முக்கியமானது. ஒரு முறை சென்னையில் ஒரு ஹோட்டலில் நடு இரவில் சென்று தங்கிவிட்டு காலை எழுந்ததும் அருகில் ரயில்வே தண்டவாளங்களை பார்த்துவிட்டு உடனே அந்த ஹோட்டலை காலி செய்தேன். அதேபோல் சைகோனில் எங்களுக்குத் தந்த அறையில் ஜன்னலே இருக்கவில்லை . மூன்று பக்கமும் சுவராக இருந்தது. இவ்வளவிற்கும் அமெரிக்கர்கள் கடைசியாக இருந்துவிட்டு தப்பிப்போன ஹோட்டல் சைகோன். உடனே காலிசெய்தேன். இணையத்தில் பதிவு செய்யும்போது எல்லாவற்றையும் காட்டுவார்கள். ஜன்னலைத்தவிர.
விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு எப்படி வெளியேறும் கதவுகள் முக்கியமோ அதேபோல் ஜன்னலும் முக்கியம். பணத்தை கொடுக்கும் போது நமக்கு விரும்பியதை கேட்பது நீதியானதுதானே?
நைல் நதியின் காட்சியில் லயித்துக்கொண்டிருந்த போது அறைக்கு வந்து அரை மணித்தியாலமாக எமது உடைகளைக் கொண்ட பொதிகள் வரவில்லை.
“என்ன பெரிய ஹோட்டல் என்கிறீர்கள். அரைமணிநேரமாக பேக்குகளைக் காணவில்லை” என்றள் எனது மனைவி.
தொலைபேசியில் கஸ்ரமர் சேர்விஸில் கேட்டபோது அந்தக் குரல்
“நீங்கள்தானே அந்த இந்திய பெண்மணியோடு வந்தவர். இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்கள் பொதிகள் வந்து சேரும்.” எனச்சொன்னது.
ஒரு விதத்தில் ஆச்சரியமாக இருந்தது. மறுபுறத்தில் கோபமாக வந்தது. ஒரு இந்திய அயிட்டத்தை தள்ளிக்கொண்டு வந்த எகிப்தியன் என்ற அர்த்தமா. இல்லை இஸ்லாமிய நாகரீகத்துக்கு ஏற்ப முடிந்தவரை உடலை மறைத்துப் போடும்படி சொன்னதால் பஞ்சாபி உடையை அணிந்து என் மனைவி வந்ததால்; வந்த குழப்பமா என்பது தெரியவில்லை. அவன் சொன்னதை எனது மனைவிக்கு சொல்லியிருந்தால் என்ன நடக்கும் என நினைத்துவிட்டு அமைதியை வேண்டியதால் சொல்லாமல் “விரைவில் பொதிகள் வரும்” என்றேன்
நாங்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்று உடைகளை அணிந்து கொண்டு பெண்களை மட்டும் நமது கலாச்சாரத்தை சுமக்கும் சுமைதாங்கியாக மாற்றிவிடுகிறோம். அவுஸ்திரேலியால் ஏதாவது விசேடத்திற்கு நான் சூட் போட்டால் எனது மனைவி பட்டுச்சேலை கட்டுவது எனக்கே வியப்பாக இருக்கும். இதேமாதிரியான காட்சிகள் எகிப்தில் மட்டுமல்ல துபாயிலும் கண்டேன். ஏவாள் தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட காலத்தில் இருந்து இனப்பெருக்கத்தின் சுமையுடன் இந்த கலாசார சுமையையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு ஹாயாக முன்னால் நடக்கிறோம். குறைந்தபட்சம் ஐரோப்பியர் பக்கத்தில் நடக்கிறார்கள். ஆசியர்கள் சில அடி முன்னால் நடக்கிறார்கள்.
(தொடரும்)



கெய்ரோவில் நாங்கள் தங்கிய ஹோட்டலின் உள்ளே செல்லும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. அவை விமானமேறுவதற்கு முன்பாக செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளான மெற்றல் டிடெக்ரர் மற்றும் செக்கியுரிட்டி ஸ்கானர் என்பனவாகும்.  இதே போன்ற பாதுகாப்புகளை தாண்டித்தான் இலங்கையில் சில மந்திரிமாரை போர்க் காலத்தில் பார்க்கப் போகவேண்டும். டெல்லியில் சில ஷொப்பிங் பிளாசாக்களுக்குள் சென்ற போதும் இந்த அனுபவம் ஏற்பட்டது. ஆனால், உல்லாசப் பயணியாக சென்ற அந்த நாட்டில் ஹோட்டலில் ஏற்பட்ட அனுபவம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இந்த ஹோட்டல் ஏனையவை போன்றது அல்ல. எகிப்தின் அரசரால் அக்காலத்தில் ஒரு பெரிய சாம்ராச்சியத்தின் மகாராணி தங்குவதற்காக கட்டப்பட்டது. இந்த ஹோட்டலின் பின்னால் ஓரு வரலாறு இருக்கிறது. எகிப்தில் எங்குதான் வரலாறு இல்லை என நீங்கள் நினைக்கலாம்.  உண்மைதான். 19 ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட முகம்மதலியின் பேரனாகிய கெடிவ் இஸ்மயில் (Khedive Ismail) காலத்தில் சூயஸ் கால்வாய் திறந்து வைக்கும்போது அந்த வைபவத்திற்கு வருகை தரும் முக்கிய விருந்தாளியை தங்கவைக்க இந்த மாளிகை கட்டப்பட்டது.
மாளிகையின் பெயர் ஜெசிரா பலஸ் (Gezirah Palace ) பிரான்ஸ் நாட்டின் மகாராணி தங்குவதற்காக பிரான்சில் உள்ள அரசமாளிகையின் பிரதியாக வடிவமைத்து கட்டப்பட்டது இந்த மாளிகை. போர்க்காலத்தில் வைத்தியசாலையாக மாறியது. மாளிகை இப்பொழுது ஆயிரம் அறைகள் கொண்ட ஹோட்டலாக உருவாகியுள்ளது. நைல் நதிக்கரையில் வாசல் வைத்து வரவேற்பு பகுதி பறவையின் உடலாகவும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அறைகள் இரண்டு சிறகுகளாகவும் கெய்ரோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
அக்காலத்து அரசமாளிகைகள் ஹோட்டலாக தற்பொழுது இந்தியாவில் உள்ளன. அழகையும் அமைப்பையும் பாதுகாப்பதற்கு உதவும் அதே நேரத்தில் சமானியர்கள் பார்த்து மகிழவும் வசதியாக உள்ளது.
இரவுச் சாப்பாட்டை எகிப்தின் உணவாக சாப்பிடவேண்டும் அத்துடன் வெளியே சென்று பார்ப்பதும், சாதாரண மக்களையும் சுற்றாடலை அறிவதற்கும் உதவும் என்பதால் வெளியே வழிகாட்டி இல்லாமல் சென்றோம். எனது மனதில் நைல் நதியில் உருவாகிப் பின்பு ஆபிரிக்கா எங்கும் மிக விரும்பி உண்ணப்படும் நைல் பேச் எனப்படும் மீனை ருசித்து பார்க்க எண்ணம் இருந்தது. அவுஸ்திரேலியா நன்னீர் மீனான பரமண்டியை (Barrmundi) சாப்பிட்டதால் அதை விட ருசியாக நைல் பேச் இருக்கும் என்று  கேள்வி ஞானம்.  ஆபிரிக்காவில் இருந்த எனது நண்பன் கூறினான், ‘பரமண்டி நாக்கில் உருகும் என்றால் நைல்பேச் நாக்கில் கரையும்.’ அந்தக் கூற்றில் உள்ள உண்மையை அறிந்து கொள்ள ஆவல் இருந்தது.
பல சந்துகள் கடந்து உணவு விடுதியைத் தேடிச் சென்ற போது பலகாலம் மழை கண்டிராத வரண்ட தரைகள் குறுகிய சந்துகள் உடலுழைப்பாக வேலை செய்யும் தொழிலாளர்கள் தென்பட்டார்கள். ஆண்டவன் ஆதாமின் விலா எலும்பை தேடும் நேரத்தில் உள்ள நிலைமை போன்று, மூலை முடுக்குகள் எங்கும் பெண்களைக் காணவில்லை.
கட்டிடங்கள் மனிதர்கள் தாவரங்கள் எல்லாம் இந்தியாவின் ஜெய்பூர் பகுதியால் செல்வது போன்ற உணர்வைத்தந்தது. எல்லாம் பாலை நிலத்தின் வெளிப்புறக்காட்சிகள். மாலை நேரமானதால் நாங்கள் தேடிய உணவு விடுதியை கண்டு பிடிப்பதற்கு சிரமமாக இருந்தது. எங்களுடன் வந்த பெண்மணிகள் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கலாம் என்றனர். பிரயாண களைப்பு அவர்களை அப்படிச் சொல்ல வைத்தது. எங்கள் ஆங்கிலத்திற்கும் எகிப்திய அரபு மொழிக்கும் நடந்த சிறிய மொழிப் போராட்டத்தின் பின்பாக, அந்த ஹோட்டலை அடைந்தபோது, நாங்கள் எதிர்பார்த்த மேசைகள் கதிரைகள் மற்றும்  பாலிஷ் செய்த யுனிபோர்ம் அணிந்த பரிமாறுபவர்கள் என்ற நாகரீகமான சூழ்நிலையில் அந்த உணவு விடுதி இருக்கவில்லை. கதவைத் திறந்து உள்ளே சென்ற போது மிகவும் இருட்டாக இருந்தது. உள்ளே செல்லுவதற்கு வாசலில் தயங்கிய போது,  உட்பகுதி யாழ்ப்பாணத்தில் புகையிலை போட்டு வாட்டும் குடில்போல் புகை மண்டலமாக காட்சிஅளித்தது. முன்வைத்த காலை பின்வைக்காமல் மெதுவாக அடியெடுத்து உள்ளே சென்றால் உள்ளுர்வாசிகளுடன் பல ஐரோப்பியரும் ஹு க்கா எனப்படும் நீண்ட குழாய் மூலம் புகையிலையை புகைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆரம்பத்தில் பாரசீகத்தில் தொடங்கி பின்பு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகையிலையை வைத்து அதை கரியின் ஊடாக எரித்து புகையை தண்ணீர் ஊடாக இழுத்துப் புகைத்தல் இப்பொழுது மத்திய கிழக்கு அரேபிய நாட்டின் கலாச்சார கூறாகிவிட்டது.
இந்தப் புகையில் அப்பிள் திராட்சை என பல வாசனைகளையும் சேர்த்து புகைத்தபடி கோப்பியை குடிப்பது ஒரு பொழுது போக்காகிவிட்டது. இதற்காக ஏராளமான கபேக்கள் தெரு எங்கும் உள்ளன. மேற்கு நாட்டவர்களுக்கு மதுசாலைகள் கலாச்சாரத்தில் இடம் பெறுவது போல். நாங்கள் சென்ற உணவுச்சாலையிலும் மேற்கு நாட்டவர்கள் பியரை குடித்துக் கொண்டு உணவு வரும் வரையும் இந்த புகைத்தலில் ஈடுபட்டார்கள்.
உணவகங்கள் எங்கும் புகைத்தல் தடைசெய்யப்பட்ட அவுஸ்திரேலியாவில் இருந்து சென்ற எனக்கு ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தது. மற்றவர்களுக்கு வெறுப்பாக இருந்தது. குறைந்த பட்சம் என்னோடு வந்தவர்களில் எனக்கு மட்டும் இள வயதில் சிகரட்டை பிடித்த அனுபவம் உள்ளது. உள்ளே சென்று அமர்ந்ததும் கொஞ்சம் புகையோடு வந்த சிறிதளவு பிராணவாயுவை சுவாசிக்க எனது நாசி பழகிவிட்டது.
அன்று நைல் பேர்ச் இல்லை. எனக்கு ஏமாற்றம். கத்தரிக்காயை எண்ணெயில் வாட்டி அத்துடன் ஆட்டிறச்சியும் சோறும் கொண்டு வருவதற்கு ஓடர் கொடுத்திருந்தோம். உணவு வரும் வரையும் நானும் எனது நண்பனது மகன் அனுஸ்சும் ஹுக்காவை புகைப்பது எனத் தீரமானித்து கொண்டுவரச் சொன்னோம். புகைத்தல் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல.  எனது மனைவியாருக்கு முகம் கோணியது.
பாம்பு தின்னும் ஊருக்குச் சென்றால் நடுமுறி நாங்கள் உண்ண வேண்டும் என்றேன் எங்களுக்கு திராட்சை வாசத்துடன் புகைப்பதற்கு கொண்டு வரப்பட்டது. இது சாதாரண சிகரட் புகைத்தலில் இருந்து சிறிது வேறுபடுகிறது தண்ணீரில் புகையிலையில் இருந்து வரும் தார் எனப்படும் கரியே புகைத்தலின் போது முதலாவதாக உணரப்படுவது. அதுதான் நுரையீரலில் துசிபோல் படிகிறது. அந்தத் தார் இங்கு தண்ணீரில் கரைந்து விடுகிறது.மேலும் புகை தண்ணீர் ஊடாக வருவதால் சூடாக இருப்பதில்லை. ஆனால் சராசரியாக ஹுக்காவை அதிக நேரம் புகைப்பதால் அதிகமான நிக்கெட்டின் செல்வதுடன் உடலில் பல தீங்குகளை உருவாக்குகிறது. இந்த நிக்கொட்டினே புகைத்தலின் உந்து சக்தியாகிறது.

மறுநாள் வெள்ளிக்கிழமை கெய்ரோ மியூசியம் செல்வதாக இருந்தது. அந்த மியூசியத்தின் ஒரு பக்கத்தில் டாகிர் ஸ்குயர் (Tahrir Square) உள்ளது. எகிப்தில் நடந்த மக்கள் போராட்டத்தில் பழைய ஜனாதிபதியாக இருந்த முபாரக் அகற்றப்பட்ட பின்பு முக்கியமான அம்சமாக இந்த வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்திவிட்டு, இந்த ஸ்குயரில் மக்கள் கூடி ஆற்பாட்டம் செய்வார்கள். ஆரம்பத்தில் முபாரக்குக்கு  எதிராக ஒன்றாக இருந்த மக்கள் தற்போதய முஸ்லீம் பிறதகூட் தலைமையில் அரசாங்கம் அமைத்தபோது இரண்டாகப் பிரிந்தார்கள். எகிப்தில் இந்தப் பிரிவு மேற்கு நாடுகளில் மற்றைய நாடுகளில் பழமைவாதக்கட்சிகள் மற்றும் தொழிற்கட்சிகள் (Conservative Liberal) போன்ற தன்மையுடையவை. ஆனால் இப்படியான முரண்பாட்டை தீர்க்கும் பொறிமுறை இன்னமும் உருவாகவில்லை. அரேபிய நாட்டில் அப்படியான பொறிமுறை உருவாவதற்கு சாத்தியமான நாடும் எகிப்துதான். அதன் மூலம் முன்னுதாரணமாக நடைபெற வாய்ப்புண்டு.
கெய்ரோ மியூசியம் செல்லாமல் காலையில் சிற்றாடல் எனப்படும் முக்கிய கோட்டைக்குச்சென்றோம். ஜெருசலேமைச் சுற்றி சிலுவை யுத்தம் நடந்தபோது அங்கு போரிட்ட மேற்கு ஐரோப்பிய கத்தோலிக்க அரசுகள் எகிப்தை தாக்கலாம் என எண்ணிய சலாடினால் 1176 இல் இந்த கோட்டை கட்டப்பட்டது. ஆனால் சலாடினால் முடிக்கப்படவில்லை பின்னால் வந்தவர்களால் இந்தக் கோட்டை முடிக்கப்பட்டது இங்கிருந்துதான் அடுத்த 700 வருடங்கள் முழு எகிப்தின்  ஆட்சி நடந்தது.
அக்காலத்தில் அங்கு  அழிக்கப்பட்ட 19 நூற்றாண்டின் பள்ளிவாசல் மற்றும்  மியூசியம் என்பன மீள்நிர்மாணம் செய்யப்பட்டன.  எகிப்தை பார்க்க வருபவர்கள் இந்த இடத்தை தவறாமல் பார்ப்பார்கள். இந்தப் பகுதி சிறிய மலையில் இருப்பதனால் இங்கு இருந்து பார்க்கும் போது முழுக் கெய்ரோவும் தெரிகிறது.
இந்தக் கோட்டையில் அழகான பள்ளிவாசல் அலபஸ்ரார் என்ற கல்லால் கட்டப்பட்டுள்ளது. இந்த அலபஸ்ரர் என்பது பொதுவாகச் சொன்னால் நமது ஊர் பளிங்கு. ஆனால் எகிப்தில் கல்சியம் காபனேற் கலந்தது. ஆனால் ஐரோப்பிய பளிங்கு ஜிப்சம் வகை சேர்ந்தது. அவுஸ்திரேலியாவில் ஐரோப்பிய பளிங்கு சிறந்தது என்பார்கள்.
இந்த அலபஸ்ரரை புராதன மன்னர்கள் தங்களது கட்டிட வேலைகளுக்கு பாவித்திருக்கிறர்கள். சிலைகள் வாசனைப் போத்தல்கள் ஆலயங்களின் ஜன்னல்கள் என்பனவற்றுக்கு பாவிக்கப்படும் இந்தப் பளிங்கு எகிப்தில் பிரபலமானது. தூய்மையான பளிங்கு வெள்ளை நிறமானது.  மற்ற மூலப் பொருட்களில் சேர்க்கை இருந்தால் அவற்றிற்கு ஏற்ப வண்ணம் பெறுவது இந்த அலபஸ்ரர் ஆகும். இந்த அலபஸ்ரர் பள்ளிவாசல் முகம்மதலி தனது இறந்த மகனது நினைவாக கட்டியது எனச்சொல்லப்படுகிறது. ஆனாலும் இதற்கு முன்பு மாலுக்கர்களது பல அடையாளங்களை அழித்துத்தான் இந்த பள்ளிவாசல் எழுந்தது. என்ற வரலாறும் உண்டு.
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அடிப்படையில் மூன்று வகைப்படுகிறது. அரேபிய பாரசீக துருக்கிய கட்டிட அமைப்பு வடிவம். இவைகள் மினரிட்டிலும் டோமுகளிலும் வேறுபடுத்தப்படும்.
இந்தப் பள்ளிவாசல் பென்சில் போன்ற இரு மினரட்டுகளுடன் நடுவில் வட்டமான கூரை. அதைச் சுற்றி அழகான நான்கு அரைவட்டக் கூரைகள் அமைந்த அமைப்பு.
வெளிப்பகுதி வெகுதூரத்திலே கண்ணைக் கவரும் தன்மையுடையது. உயிருள்ளவற்றை சித்திரமாக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட உள்பகுதி மிகவும் கண்ணைக் கவருகிறது. இங்கே முகம்மதலியின் சமாதியும் உள்ளது.
நாங்கள் சென்ற நாளன்று அங்கே பலர் தொழுதுகொண்டு இருந்தார்கள். இந்த அழகான கட்டிடத்தை வார்த்தைகளால் வர்ணிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதை விட மலுக்கியரால் முன்பு கட்டப்பட்ட பாரசீக சாயலான பள்ளிவாசல் இங்குண்டு. அந்தப் பள்ளிவாசலில் உள்ள மினரட்டைக் கொண்டே இதை பாரசீகத்தின் சாயல் என்கிறார்கள். பழைய கட்டிடங்களில் இது மட்டுமே தப்பியுள்ளது. அதற்குக் காரணம் இந்தப் பள்ளிவாசல் குதிரை கட்டும் இடமாக பாவிக்கப்பட்டது.
இந்த அழகான இடங்களில் பல பயங்கரங்களும் நடந்திருக்கின்றன. எகிப்தில் அன்னிய நாடுகளான கிரீஸ், ரோம் மற்றும் பிரான்ஸ் நாட்டினர் என ஆக்கிரமிப்புக் கொலை, புராதன கட்டிடங்களை இடித்தல் கலாச்சாரத்தின் விலைமதிக்க முடியாத பொருட்களைத் திருடுதல் என மேற்கொண்ட செயல்களும் நடைத்தியிருக்கிறார்கள். அதற்கு சற்றும் குறைவற்று இஸ்லாமிய காலத்தில் அதாவது சிலுவை யுத்தத்தின் பின்பு அராபிய பாரசீக மற்றும் துருக்கியர்கள் இஸ்லாம் என சொல்லிக் கொண்டே அதே அழிவு வேலைகளைச் செய்திருப்பதும் எகிப்தின் வரலாறாகிறது.
முகம்மது அலி துருக்கியின் பிரதான பிரதிநிதியாக வந்தபோது அக்காலத்தில் எகிப்தில் அன்னியரை எதிர்த்த மாலுக்கியரை விருந்துக்கு அழைத்து கபடமாக இந்த கோட்டையில் 500 பேரைக் கொலை செய்தது எகிப்தின் வரலாற்றில் முக்கிய திருப்பம்.
இங்குள்ள பொலிஸ் மியூசியம் இங்கு முன்னாள் ஜனாதிபதி அன்வார் சதாத்தை கொலை செய்த குற்றவாளியையும் மற்றும் பலரையும் வைத்திருந்ததாக சொல்கிறது. இன்னும் ஒரு முக்கியமான இரு பெண்கள் இங்கிருந்தார்கள். 1921 இல் அலக்சாண்ரியாவில் விபச்சார விடுதி நடத்திய இரு சகோதரிகள் 17 பெண்களை கொலை செய்திருக்கிறார்கள். இந்த இரு பெண்களான இராயா((Raya) சக்கீனா (Sakina) பற்றி தற்போது பல நாடகங்கள் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகினறன.  நாவல்களும் எழுதப்படுகின்றன. அந்தச் சகோதரிகள் கலைப் படைப்புகளுக்கு கருப்பொருளாகிறர்கள். வெள்ளிக்கிழமை காலை முழுவதும் இந்தக் கோட்டையை சுற்றிப்பார்த்தோம். ஆனாலும் ஒரு கிழமை நின்று பார்க்கத்தக்க இடமாக அது  இருந்தது. எகிப்தில் நடக்கும் அரசியல் போராட்டம் பல மேல் நாட்டு உல்லாசப் பயணிகளை முக்கியமாக அமெரிக்கர்களை பயமுறுத்தியுள்ளது தெரிகிறது. அதனால் பல இடங்களை நெருக்கடி இல்லாமல் ஆறுதலாக பார்க்கக் கூடியதாக இருந்தது.


சலாடினால் கட்டப்பட்ட சிற்றாடல் என்ற அந்தக் கோட்டையின் சிலபகுதிகளை மட்டும்பார்த்து முடித்துக்கொண்டு மதியத்திற்கு கெய்ரோவின் கடைகளை பார்ப்பதாக ஜனநாயக முறையில் தீர்மானித்தோம். எந்த ரகமான கடைகள் என்பது பிரச்சனையாக முளைத்தது. பெண்கள் நவீன சொப்பிங் கொம்பிளக்ஸ் போவோம் என கூறியபோது எனது நண்பனும் நானும் புராதன காலமாக அமைந்துள்ளதும் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் பெரியகடைவீதி அருகில் உள்ளது. அங்கு செல்வோம் என்று முடிவு எடுத்து கான் எல்-காலி (Khan El-Khalili) கடைவீதிக்கு சென்றோம். வெள்ளிக்கிழமையாதலால் அந்தப் பகுதியில் நமது நல்லூர் திருவிழா போல் உள்ளுர் மக்கள் நின்றார்கள். ஆனால் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளைக் பெருமளவு அங்கு காணவில்லை. பள்ளிவாசல் கடைவீதி மற்றும் கோப்பி கடைகள் என எல்லாம்அருகருகே அமைந்துள்ளன.
கான் எல் காலில் என்பது கெய்ரோவில் கடைகள் உள்ள இடம். 1382 ஆண்டுகாலத்தில் மாமலுக்கியரால் உருவாக்கப்பட்டது .அதன்பின் ஓட்டமான் காலத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக பழமைவாய்ந்த கடைப்பகுதியாகும். இது அரசுகள் இருந்து ஆண்ட சிற்றாடலுக்கு அல்குசையின் பள்ளிவாசலும் (Al-Hussein Mosque) அருகே இருக்கிறது. இதைகெய்ரோவின் இஸ்லாமியப் பகுதிஎன்பார்கள். எப்பொழுதும் வெளிநாட்டுஉல்லாசப்பிரயாணிகளும் உள்ளுர்வாசிகளும் நிறைந்து காணப்படுவார்கள். ஏராளமான காப்பி கபேக்கள் இங்கு இருக்கிறது. சென்னையில் பர்மா பசார். புதுடெல்கியில் சாந்தினி சவுக் போன்றது. ஆனால் ஆயிரக்கணக்கில் கடைகள் இருப்பதால் என்ன பொருட்களும் இங்கு வாங்கலாம்.
இப்படியாக வெளிநாட்டவரும், உள்ள நாட்டவர்களும் கூடும் இடமான படியால் மூன்று முறை பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வெளிநாட்டவர்கள் குழுமும் இடமாகவும் கடைகளும் நெருக்கமாக இருப்பதால் பயங்கரவாதிகள் இந்தஇடத்தை தேர்ந்தெடுதிருக்கிறார்கள். பயங்கரவாதத்தில் மரணிப்போரின் எண்ணிக்கை பயங்கரவாத செயலின் தாக்கத்தின் அளவுகோலாக இருங்கிறது. நவீன ஊடகங்களும் இதே அளவுகோலை பாவிப்பது இந்த செயலில் ஈடுபடுவோர்களுக்கு ஊக்கத்தையும் பிரசாரத் தாக்கத்தையும் கொடுக்கிறது.
இங்கு எனது மனைவி சியாமளாவும் நண்பனின் மனைவிநிருஜாவும் பட்சணக்கடைக்குள் பாயும் சிறுவர்கள் போல் செல்லும் போது நானும் நண்பனும் பின்தொடர்வதைவிட வேறு வழியில்லை. இந்த இடத்தில் மூன்று முறை குண்டு வெடித்த விபரம் அவர்களுக்கு தெரியாது. தெரியாமல் இருப்பதும் நன்மையே.
முயலுக்கு தனக்காக வேட்டைக்காரன் காத்திருப்புது தெரியாது. மீனுக்கு துண்டில் முள் இரையின் பின் இருப்பது தெரியாது. அதோ போல் மனிதனும் தன்னை சூழ்ந்த விடயங்களை மற்றும் வரலாறை சிந்திக்காத போதும் விடயத்தை புரிந்து கொள்ளாதபோதும் அதனைப் பற்றி பொருட்படுத்தாமல் இருப்பது அவனுக்கு மகிழ்வாக இருக்க முடிகிறது.
2005ல் தற்கொலைத்தாக்குதல் நடந்தபோது பல உல்லாசப்பிரயாணிகள் கொல்லப்பட்டார்கள் அதோ போல் 2009 பெப்ரவரியில் குண்டு வெடித்து பதினேழு வயதான பிரான்சியப் பெண் இறப்புடன், மேலும் பலர் காயங்கள் அடைந்தனர். அதே இடத்திலே நான் நின்று கொண்டிருக்கும்போது மனம் பயங்கரவாதிகளையும் அவர்கள் நியாயங்களையும் மீள்பரிசீலிக்கிறது
எந்தஒருஅரசியல் நோக்குடன் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களைக் கொலைசெய்வதும், அவர்களை காயப்படுத்துவதுமான பயங்கரவாதம் நமது நாட்டிலும் பல காலமாக பேசும் பொருளாகியது. மக்களுக்கு ஏதோஒருவிடிவைத்தரும் வழிமுறையென பலஅறிவாளிகளால்கூடஊக்குவிக்கப்பட்டது. உலகசரித்திரத்தில் இந்த பயங்கரவாதத்தின் தோற்றுவாயை தேடியபோது பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள கதையில் இஸ்ரேலியர்களின் ஹீரோவாக சாம்சன் வரலாறு முதலாவதாக எழுதப்பட்ட பயங்கரவாத சம்பவமாக புரிந்துகொள்கிறேன்.
தற்போது சொல்லப்படும் பயங்கரவாதத்தின் ஆணிவேர் மத்திய கிழக்கில் உள்ளது என்றால் பலருக்கு ஆச்சரியம் ஏற்படும். ஏன் என்னில் ஆத்திரமும் ஏற்படலாம். ஆனால் பைபிளின பழைய ஏற்பாட்டை, மதத்திற்கு அப்பால் நின்று ஒருசமூகத்தின்இலக்கிய வரலாறாக பார்க்கும்போது சாம்சனின் கதை இதைத்தான் சொல்லுகிறது. பழைய ஏற்பாட்டில் அறிமுகமில்லாதவர்களுக்காக இந்தக்கதையை சிறிது விபரமாக சொல்லவேண்டி இருக்கிறது.
இஸ்ரேலியர்களின் கிளைக் குலத்தை சேர்நத மனோவ(Manoah) மனைவியின் முன்பாக (மனைவியின் பெயரை பைபிள் சொல்லவில்லை) தேவனின்துாதுவன்தோன்றி “ நீ மலடாக, குழந்தை இல்லாமல் இருக்கிறாய். ஆனால் விரைவில் குழந்தையை பெறுவாய். அதனால் கர்ப்பகாலத்தில் வைனையோ நொதித்த பதார்த்தத்தையோ அல்லது அசுத்தமான பண்டங்களை (unclean) உண்ணாதே. உனக்கு விரைவில் ஆண்குழந்தை உண்டாகவிருக்கிறது. அந்த குழந்தையின் தலைமயிரை எக்காலத்திலும மழித்துவிடாதே. இவன் இஸ்ரேலியர்களை,பிலிஸரீனியரிடம்(Philistines )இருந்துகாப்பாற்றுவான்“.
அந்தப்பெண் கணவனிடம் சென்று கடவுள் தோன்றியதையும் தனக்கு கிடைத்த சேதியையும் சொல்லிவிட்டாள். மனோவ கடவுளை தானும் காண ஆசைப்பட்டதால் தேவதுாதன் அவனிடம் தோன்றி அந்த கர்ப்பகாலத்தில் புறக்கணிக்க வேண்டிய விடயத்தை அவனிடமும் சொல்லி மறைந்தார்.
சாம்சன் வளர்ந்து பிலிஸ்னிய( Philistines ) பெண்ணை காதலித்து போது அன்னியகுலப் பெண்ணென பெற்றோர்கள் மறுத்தார்கள். ஆனால் பின்பும் விடாப்பிடயாக அவர்களை வற்புறுத்தி அந்தப்பெண் இருக்குமிடத்திற்கு பெற்றோரோடுசெல்லும் போது சிங்கம் ஒன்று உறுமிக்கொண்டு எதிர்வந்தது. தேவனின் ஆவி சாம்சனில் குடிபுகுந்ததும் அந்த சிங்கத்தை ஆட்டுக்குட்டிபோல் கிழித்து கொன்று போட்டான். மீண்டும் அவளைபெண்ணைபார்த்துவிரும்பிவிட்டான். பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மணக்க அவர்கள் சம்மதித்ததும் வழியில் அவனால் கிழித்துப் போடப்பட்ட சிங்கத்தின் சடலத்தில் தேன்கூடு கட்டியிருந்தது . அந்த தேன்கூட்டில் உள்ள தேனை எடுத்து குடித்ததுடன் தாய் தந்தையர்களுடன் பகிர்ந்து கொண்டான் . சிங்கத்தைகொன்றதையோ சடலத்தில்இருந்து தேன் எடுத்ததையோ பெற்றோரிடம் மறைத்துவிட்டான்.
குலத்துக்குரிய சம்பிரதாயத்துக்கு ஏற்றபடி திருமண விருந்தில் சாம்சனுக்கு முப்பது தோழர்கள் மணமகளோடு கிடைத்தார்கள். அப்பொழுது சாம்சன் அவர்களுக்கு ஒருவிடுகதை சொல்ல விருப்பதாகவும் அந்த விடுகதையை அவிழ்த்தால் முப்பதுபேருக்கும் அணிந்துகொள்ள உடையளிப்பதாகவும் இல்லையேல் அவர்கள் தனக்கு உடைகள் வாங்கி அளிக்கவேண்டும் எனக்கூறினான்
அவர்கள் அதற்கு சம்மதிக்கவும் உலகத்தில் பலமானதும் இனிப்பானதும் எது என விடுகதை போட்டான்.
மூன்று நாட்களாக அவர்கள் பதில் சொல்லவில்லை. நான்காவது நாள் சாம்சனின் மனைவியிடம் தோழர்கள் விடுகதையின் விடையை அறிந்து வரும்படி கூறினார்கள் ,பெண்ணின் நச்சரிப்புத் தாங்காமல் ஏழாம் நாள் அந்த விடுகதையை கூறியது தோழர்கள் இனிமையானது தேன் பலமானது சிங்கமென்றனர்.
அப்பொழுது சாம்சன் எனது கன்னிப்பசுவை வைத்து வயலை உழாதுவிடில் இது உங்களுக்குப் புரிந்திராது எனக்கூறி அவர்களது உடைகளை உருவியதுடன், ஆத்திரத்தில் வீடு திரும்பியதால் சாம்சனின் மனைவியாகவிருந்தவள் அங்கு வந்திருந்த நண்பனொருவனுக்கு கொடுக்கப்பட்டாள்.
சில நாட்களின் பின் இளம் ஆட்டுடன் மீண்டும் மனைவியை தேடி செல்ல முயன்றபோது சாம்சனின் தந்தை ,அவளை ஏற்கனவே நண்பனுக்கு கொடுத்துவிட்டாய். உன் மனைவியின் தங்கை அழகானவள். அவளை உன்னுடையவளாக எடுத்துக்கொள் என்ற போது “இல்லை பிலஸ்ரைன்களுக்கு நான் யார் என காட்டுகிறேன்“ எனக் கூறியதுடன் மூன்னுாறு நரிகளை இரட்டை இரட்டையாக வால்களோடு பிணைத்துவிட்டு அவற்றின் வாலில் தீயை வைத்து பிலஸ்ரைனது சோளக்கொல்லையுள்ளும் திராச்சைத் மற்றும் ஒலீவ்தோட்டத்தின் உள்ளும் விரட்டிய போது அந்த தோட்டங்கள் எரிந்து சாப்பலாகியது.
இந்த சம்பவத்திற்கு எதிரான பழிவாங்கலாக சாம்சன் மனைவியையும் அவளது தந்தையும் பிலஸ்ரினர் கொன்றுவிட்டார்கள். இதற்கு பழிவாங்க பலபிலஸ்ரைனரை சாம்சன் அடித்தும் கொலைசெய்துவிட்டு மலைக்குகையில் தங்கிவிட்டான். பிற்காலத்தில்அவனைத் தாக்கவந்த பிலஸ்ரைனரை கொலைசெய்துவிட்டு சாம்சன் இருபது வருடங்கள் இஸ்ரேலியர்களுக்கு தலைவனாக வழி நடத்தினான்.
இதன்பின்பு டாலியா(Delilah) என்ற பெண்ணை காதலித்தான். அவளிடம் 1100 வெள்ளிகளை பிலஸ்ரினியர் தலைவர்கள்கொடுத்து “நீ சாம்சனின் அசாத்திய பலத்தை எங்கிருந்து பெற்றான் என்பதை அறிந்து கொண்டு எங்களுக்குசொல்“ என்றனர்.
அவள் தொடர்சியாக சாம்சனிடம் “நீ என்னை காதலிப்பது உண்மையென்றால் உனத்து பலத்தின் இரகசியம் என்ன என்றுசொல்“ எனக் கேட்டபோது “எனது தலைமயிரில்தான் அது உள்ளது. அது தேவனால் அருளுப்பட்டது.“ டாலியா இதை பிலஸ்ரினியருக்கு அறிவித்துவிட்டு தனது மடியில்தூங்க வைத்தாள். தூங்கும்போது தலைமயிரை மழித்து சிறைப்பிடித்ததுடன் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்து விட்டனர். சிறையில் இருந்த காலத்தில் தலைமயிர் மீண்டும் வளர்ந்தது. தங்களது எதிரியான சாம்சனை சிறைப்பிடிக்க உதவிய தேவனுக்கு நன்றி செலுத்த ஆலயத்துள் சடங்கை நடத்தினார்கள். அந்த சடங்கில் ஒரு காட்சிப்பொருளாக்க சாம்சனை கொண்டுவந்தபோது நான்பிலஸ்ரினர்களுடன் இறக்கிறேன் எனக்கூறிக்கொண்டு அந்த ஆலயத்தின் பிரதான துண்களை உடைத்ததன் மூலம் அங்கிருந்த பிலஸ்ரேனியர் இறந்தார்கள். இந்த சடங்கை பார்க்கவந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 3000 பேருக்கு மேலாக இறந்ததாகவும் பழையஏற்பாடு செல்கிறது.
அக்காலத்தில 3000 இக்காலத்தில் எவ்வளவுக்கு சமனாகும்?
நான் நினைக்கிறேன் முழு இனமும் அழிந்ததற்கு சமனாகும். மேலும் இந்த செயலில் அரசியல் இருப்பதால் இது பயங்கரவாதமாகிறது
ஏன் எகிப்தை பற்றி எழுதும்போது பழைய ஏற்பாடு வருகிறது என்று. எகிப்தியர்- இஸ்ரேலியர்கள்- அரேபியர்கள் பூணுநூலின் முப்புரி போல் இணைந்து இருப்பார்கள்.
நாங்கள் எல்லோருமாக கடைவீதியை விட்டு வந்து கோப்பிக் கடையொன்றில் இருந்த போது எதிரில் இருந்தஅல்குசேன்பள்ளிவாசலில் ( Al-Hussein Mosque)தொழுகை தொடங்கியது. இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்த பள்ளிவாசலின் உள்ளே செல்லமுடியாது. மிகவும் அழகான கட்டிட அமைப்புடன் இருந்த பள்ளி வாசல் மிகவும் புராதனமானதும் புகழ்வாய்ந்ததுமாகும்.
இந்த பள்ளிவாசலில் சியா முஸ்லிம்களுடன் சுனிகளும் சேர்ந்து வணங்குவதாக அறிந்து கொண்டேன். எகிப்தில் மிகவும் சிறிய அளவில் சியா முஸ்லீம்கள் இருந்தாலும் ஒருகாலத்தில் அரசாண்டவர்கள். அதே போல் பத்துவீதமானவர்கள் பழமைவாய்ந்த கிரிஸ்ரியன் பகுதியை சேர்ந்தவர்கள். மத்தியகிழக்கில மதங்களிடையே சகிப்புத்தன்மை கொண்ட ஒரு நாடு உருவாகுமானால் அது எகிப்தாகவே இருக்கும், இருக்க வேண்டும்.
நபிகள் நாயகத்தின் மகள்வழிப் பேரனான (Hussain Ali ) குசையின் அலி பேரில் கட்டபட்டது மட்டுமல்ல, 680 AD யில் கொலை செய்யப்பட்டு இங்கு அவரது தலை புதைக்கப்பட்டுள்ளது. ஆனால் உடல் தற்பொழுது (Kabala) கபாலா( (Imam Husayn Mosque in Kabala,Iraq) உள்ள பள்ளிவாசலில் புதைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில், பௌத்தம்போல் உருவ வழிபாடு இல்லாத போதிலும் பின்பற்றியவர்களால் எச்சங்கள் புனிதமாக்கப்படுகிறது.
680 AD யில் இஸ்லாத்தின் உடலில் கூரிய கத்தியாக செருகப்பட்டு இப்பொழுது மட்டுமல்ல இன்னும்பல்லாண்டு காலத்திற்கு குருதிவடிந்து கொண்டிருக்கும். நபிகள் நாயகத்தின் பேரனான குசையின் அலி கொலைசெய்யப்பட்டதில் இருந்து இஸ்லாம் இரண்டு பிரிவாகியது. இதனால்தான் இன்னமும் ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் இரத்த ஆறு ஓடுவதும், அவுஸ்திரேலியாவுக்கு, ஆப்கானிஸ்தானில் உள்ள ஹஸாரா இனத்தவர்கள் வள்ளங்களில் உயிர் பிழைக்க அகதி அந்தஸ்த்து கேட்டு வருவதற்கும், தற்போது சிரியாவில் நடக்கும் போரில் சியா-அலவிசார்பு சிரியப்படைகளுக்கு லெபனிய ஹிஸ்புல்லா குழுவினரும் இரானியரும் உதவியளிப்பதன் காரணமாகும்.
யுத மக்களோடு மனஸ்தாபம் 1948ல் இஸ்ரேல் உருவானதாலே ஏற்பட்டது. அதற்கு முன்பு யுதர்கள், ரோமனியரிடம்,கத்தோலிக்க திருச்சபையிடம் இருந்து பதுகாப்பாக முஸ்லீம் நாடுகளில் வாழ்ந்தார்கள். நான் முன்பு எழுதியதுபோல் இஸ்லாமியர்களும் யுதர்களும் சிலுவையுத்தத்தில் ஒன்றாக இணைந்து கத்தோலிக்கரான ஐரேப்பிய அரசுகளை எதிர்த்து போரிட்டனர்.
ஈராக்கில் கொலைசெய்யப்பட்ட குசேன் அலியின் தலை ஈராக்கில் இருந்து இங்கு கொண்டு வந்ததில் இருந்த வரலாற்றை நான் படித்தபோது சுவையாகவும் அதிர்ச்சியாக இருந்தது.
ஆரம்பத்தில் குசேன் அலியன் தலை வைத்திருந்த பேழை பாதுகாப்புக்காக தற்போதய இஸ்ரேலுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு 250 வருடங்கள் பாதுகாக்கப்பட்டது. அதன்பின்பு அக்காலத்தில் பத்திமா இராச்சியம் எனப்படும் சியா அரசாட்சி எகிப்தில் நடந்தபோதுஅங்கு மாற்றப்பட்டு 1153ல் பத்திமா இமாமால் அந்தப் பேழை நிலத்தில் புதைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது.
1169 சலாடின் (குர்டிஸ சுன்னி) சிரியாவில் இருந்து வந்து தனது அதிகாரத்தை நிலை நிறுத்தும்போது, பழைய மாளிகைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கபட்டதாகவும் நூல்நிலையங்கள் அழித்து புத்தகங்கள் நைல் நதியில் வீசப்பட்டதாக வரலாறு எழுதப்பட்டுள்ளது.
தனது உளவுப்படை மூலம் சலாடின் இந்த குசேனது தலைகொண்ட பேழையின் இரகசியத்தை அறிந்த ஒருவரை அது எங்கிருக்கிறது என்ற இரகசியத்தைக் கூறும்படி உத்தரவிட்டபோது அவர் மறுத்தார். பலவகையின் துன்புறுத்தி பார்த்தான் பின்பு அவரது தலையை மழித்துவிட்டு குல்லாயில் இரத்தம் குடிக்கும் அட்டைகளை விடும்படி உத்தவிட்டான், அவர் முகத்தில் வலி தெரியவில்லை மீண்டும் ஏராளமான அட்டைகள் அந்தக் குல்லாயில் நிரப்பப்பட்டது. அவரது முகத்தில் வலியின் சிறிய உணர்வு கூடத்தெரியவில்லை.
வியப்புடன் சலாடின் அந்த மனிதரது குல்லாயை அகற்றியபோது அந்த அட்டைகள் இறந்திருந்தன. மேலும் வியப்படைந்த சலாடின் அந்த புனிதரிடம் விந்தைக்கு காரணத்தைக் கேட்டபோது அவர் குசையின் அலியின் பேழையின் இரகசியம் எனது தலைக்குள் இருக்கிறது. அதுவே இரகசியம் என்றார்.
இந்த பள்ளிவாசலில் முதலாவது எழுதப்பட்ட குரானின் கை எழுத்துப் பிரதி இங்குள்ளதாக சொல்லபடுகிறது.
எங்களுடன் வந்தஎகிப்திய வழிகாட்டி பிரமிட்டுகள் பார்க்கப்போவோம் என அழைத்தார்…..

No comments:

Post a Comment