சோமாலியா என்ற பெயரைக் கேட்டவுடன் பலர் முகத்தை சுழிப்பார்கள். கடும்போக்கு தமிழினவாதிகள் கூட, பழந்தமிழன் பெருமையை சோமாலியாவுடன் இணைத்துப் பார்க்க விரும்ப மாட்டார்கள். சோமாலியா என்றால், "தினம் தினம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க மக்களின் நாடு," என்ற வல்லாதிக்க பிரச்சார விதிகளுக்கு உட்பட்டு தான், தமிழனின் பெருமை பேசப்படுகின்றது. இதனால் தமிழன், தனது முன்னோர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க தாயகத்தை மறக்க விரும்புகின்றான். அதற்குப் பதிலாக, "குமரி கண்டம்" என்ற கற்பனையான தாயகத்தை, தானே உருவாக்கிக் கொள்கிறான். "தனது சொந்த தாய் ஏழையாக இருப்பதால்", அவளை "அம்மா" என்று அழைக்க விரும்பாத பிள்ளை, இன்னொரு கற்பனைத் தாயை மனதில் வரித்துக் கொள்வது போன்றது இது. தங்களை ஆப்பிரிக்காவுடன் இனங் காண விரும்பாத தன்மை, தமிழின வாதிகளுக்கு மட்டுமே உரிய குறைபாடு அல்ல. தூய ஆரிய பூர்வீகத்தை புனைவதற்காக, சிங்கள இனவாதிகள் விஜயனின் வருகையுடன் தமது வரலாற்றை தொடங்குகின்றனர். ஒரு காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், திராவிட இன மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் மூதாதையர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தனர். அவர்களது தாயகம், சஹாரா பாலைவனத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. அங்கிருந்து அரேபியா சென்று, ஈரான் வழியாக இந்தியா வந்து சேர்ந்தார்கள். புராதன ஆப்பிரிக்க-திராவிட இன மக்கள் தங்கி வாழ்ந்த இடங்களில் விட்டுச் சென்ற சாட்சியங்களின் அடிப்படையில், இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப் படுகின்றது.
தமிழ் மக்களுக்கும், சோமாலிய மக்களுக்கும் பொதுவான கலாச்சார ஒற்றுமைகள் நிறைய உள்ளன. ஊறுகாயுடன் சோறு உண்பது முதல், சாப்பிட்டு விட்டு வெற்றிலை போடுவது வரையில், ஒரே மாதிரியான உணவுப் பழக்கத்தை கடைப் பிடிக்கின்றனர். சில சொற்களும் இந்தியாவை நினைவு படுத்துகின்றன. உதாரணத்திற்கு, பரிஸ் பிலாவ் (பிலாவு அரிசி), பான் (பீடா) என்பன. இந்த ஒற்றுமையை, 1330 ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த மொரோக்கோ நாட்டை சேர்ந்த யாத்திரீகர் இபுன் பதூதா, பயணக் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். சோமாலியாவில், மொகாடிஷு அரசரின் விருந்தாளியாக சென்ற இபுன் பதூதா, "ஒரு தட்டில் பாக்கு, வெற்றிலை வைத்துக் கொடுத்து" வரவேற்கப் பட்டார். இந்தியாவில், விருந்தாளிகளை கௌரவிப்பதற்காக பாக்கு, வெற்றிலை கொடுக்கும் பழக்கத்தை இபுன் பதூதா அறிந்து வைத்துள்ளார். அது மட்டுமல்ல, சோமாலியர்களின் உணவுப் பழக்கம் கூட இந்தியர்களை ஒத்திருந்ததை சிலாகித்து பேசுகின்றார். (As soon as he was settled in Mogadishu, the sultan sent him two small welcoming gifts: a plate of betel leaves and areca nuts, and a vial of Damascus rosewater.http://www.saudiaramcoworld.com/issue/200504/the.traveler.ibn.battuta.htm) தமிழர்களுக்கும், சோமாலியர்களுக்கும் இடையிலான இன்னொரு பொதுவான அம்சம், பாரம்பரிய உடை. ஆண்கள், வேட்டி, சாரம் உடுப்பதும், பெண்கள் சேலை உடுப்பதும், இரண்டு கலாச்சாரங்களுக்கும் பொதுவானது.
இபுன் பதூதா சுற்றுப் பயணம் செய்த காலங்களில், கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரையில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிந்திருந்தது. அதனால் ஏற்பட்ட வர்த்தகத் தொடர்புகளையும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், பல உணவுப் பதார்த்தங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகி இருக்க வாய்ப்பில்லை. அவை யாவும், ஏற்கனவே கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயிரிடப் பட்டுக் கொண்டிருந்தன. வெற்றிலை போன்றதொரு இலைவகை, அந்தப் பிராந்தியத்தில் போதைவஸ்தாக பயன்படுத்தப் படுகின்றது. "காட்" (Khat, Qat, http://en.wikipedia.org/wiki/Khat) வெற்றிலையை விட சிறிய இலை வகை தாவரம். ஆனால், காரம் அதிகமானது. அதன் சாறு தரும் போதை, ஒருவரை மயக்கத்தில் ஆழ்த்தக் கூடியது. காட் இலை சாப்பிடும் பழக்கம், எத்தியோப்பியா, சோமாலியா, யேமன் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. அந்தப் பிராந்தியத்தின் சரித்திரக் காலகட்டத்திற்கு முன்பிருந்தே, காட் இலை உமிழும் பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த திராவிட இன மக்கள், குடியேறிய நாடுகளில் எல்லாம் வெற்றிலை உமிழும் பழக்கமும் தொடர்ந்து சென்றது. இபுன் பதூதா காலத்தில், "ஆதித் திராவிடரின் இடப்பெயர்வு" பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. ஆராய்ச்சி செய்யவுமில்லை. அதனால், சோமாலியர்களின், யேமனியர்களின் அரிசி உண்ணும் பழக்கும் கூட, இந்தியாவில் இருந்து சென்றதாக கருதினார்.
தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான காலை உணவுகளில் ஒன்று, "அப்பம்". வட இந்தியாவில் கூட அந்த உணவை கேள்விப் பட்டிருக்க முடியாது. ஆனால், ஆயிரம் மைல்களுப்பால், சோமாலியாவிலும், எத்தியோப்பியாவிலும் வாழும் மக்கள் காலை உணவாக அப்பத்தை உட்கொள்கின்றனர் என்பது வியப்பல்லவா? (injera,http://en.wikipedia.org/wiki/Injera) தமிழர்களுக்கும், எத்தியோப்பிய, சோமாலிய மக்களுக்கும் இடையிலான, இது போன்ற கலாச்சார ஒற்றுமைகளை அடுக்கிச் சென்றால், அதற்கென தனியாக புத்தகம் எழுத வேண்டி இருக்கும். தமிழ் மொழிக்கும், சோமாலி மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகளை சிறிது பார்ப்போம்.
சோமாலிய மொழி - தமிழ் மொழி
பரஸ் - பரி (குதிரை)
ப(B)ரிஸ் - அரிசி
ஆப்பா - அப்பா
யரான் - சிறுவன்
ஹிந்டிஸ் - சிந்துதல்
அலோல் - அல்குல் (பெண்குறி)
குன் - உண்
சோமாலிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். மேற்கு ஆப்பிரிக்க மொழிகளான, செனகல், புலானி மொழிகளுக்கும் இடையில் கூட சில ஒற்றுமைகள் காணப் படுகின்றன. உதாரணத்திற்கு: கண், வாய், கல், குட்டி.... இது குறித்து மேலும் அறிய விரும்புவோர் இந்த நூலை வாங்கி வாசிக்கவும். (Africans In The Americas Our Journey Throughout The World: The Long African Journey Throughout The World Our History A Short Stop In The Americas,http://www.amazon.com/Africans-Americas-Journey-Throughout-World/dp/0595302475)
கிழக்கே சோமாலியா முதல், மேற்கே செனகல் வரையிலான ஆப்பிரிக்க மொழிகளுக்கும், தமிழ் மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையானது, ஒரு அடிப்படை உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. தமிழர்களின் மூதாதையரான ஆதித் திராவிடர்கள், அந்தப் பிராந்தியத்தில் தான் தோன்றி இருக்க வேண்டும். அதாவது, இன்று சஹாரா பாலைவனம் இருக்கும் இடம், ஒரு காலத்தில் செழிப்பான மண் வளம் கொண்ட பூமியாக இருந்துள்ளது. அங்கு பிற ஆப்பிரிக்க பகுதிகளை விட, நாகரீகம் அடைந்த மக்கள் கூட்டம் வாழ்ந்து வந்தது. பூகோள வெப்பம் அதிகரித்த காரணத்தால், சஹாரா பாலைவனம் விரிவடைந்து கொண்டு சென்ற காலத்தில், அவர்களது வாழ்விடங்களும் மண்ணுக்குள் புதையுண்டு போயின. இதனால் அடிக்கடி இடப்பெயர்வுக்கு ஆளான மக்கள், முதலில் அரேபிய தீபகற்பத்திற்கும், பின்னர் ஆசியாவுக்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இன்று இந்தப் பிராந்தியத்தில் பேசப்படும் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை அதற்கு சாட்சியம். ஏற்கனவே வட ஆப்பிரிக்காவின் துவாரக் (பேர்பர்) பழங்குடி இன மக்கள் பேசும் மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். (பார்க்க :ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்!,http://kalaiy.blogspot.no/2012/05/blog-post_21.html) இன்றைய சூடானில், ஒரு காலத்தில் அங்கிருந்த கறுப்பின மக்களின் ராஜ்யமான நுபியாவின் அழிவுற்ற நகரங்களை இன்றும் காணலாம். இன்று அவை, மனிதர்கள் வாழ முடியாத பாலைவனமாக காணப்படுகின்றன. நுபிய ராஜ்யத்தில் வாழ்ந்த மக்களை, கூஷி இனத்தவர்கள் என்று அழைப்பர். அவர்கள் பேசிய கூஷி மொழி இன்றைக்கு அழிந்து விட்டது.
பண்டைய எகிப்திய சாம்ராஜ்யமும், பண்டைய நுபியாவும் அயல் நாடுகள். இரண்டுக்கும் இடையில் நிறைய கலாச்சார பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரச நிர்வாகம், மதம், கட்டிடக் கலை என்பன மட்டுமல்ல, மொழி கூட ஒன்றுக்கொன்று தொடர்பு பட்டுக் காணப் படுகின்றது. உதாரணத்திற்கு: பண்டைய எகிப்திய "அனி" என்ற சொல்லை எடுத்து ஒப்பிட்டுப் பார்ப்போம். கூஷி மொழியிலும் "அனி", சோமாலிய மொழியில் "மான்", தமிழ் மொழியில் "நான்"!
இந்த மொழிகளை ஆராய்ந்து கொண்டே போனால், இது போன்ற நிறைய ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். ஆகவே, தமிழர்களுக்கும், சோமாலியர்களுக்கும், எகிப்து அல்லது நுபியா பொதுவான தாயகமாக இருந்திருக்க வேண்டும். புராணக் கதைகள், மத நம்பிக்கைகள் கொண்டும் இந்தத் தொடர்பை விளக்கலாம். அதற்கு, இன்றைய சோமாலிய இனத்தவர்கள் அதிகம் உதவப் போவதில்லை. ஏனெனில், பிற்காலத்தில் நூறு சதவீதம் இஸ்லாமியர்களாக மாறி விட்ட சோமாலிய மக்கள், தங்களது பாரம்பரிய மத நம்பிக்கைகளை மறந்து விட்டனர். இன்றைய சோமாலிய மொழியில் அரைவாசியாவது அரபுச் சொற்களின் கலப்பு காணப்படுகின்றது. அதனால், "தமது மொழியானது, இஸ்லாமிய மதத்தோடு சேர்ந்து இறக்குமதியான அரபி மொழிப் பாதிப்பால் புதிதாக உருவானது" என்று, சோமாலிய மக்களே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரபி, ஹீபுரு, மற்றும் இயேசு கிறிஸ்து பேசிய அரேமிய மொழி என்பன, செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இந்தத் தகவல் உலகம் முழுவதும் தெரிந்தளவுக்கு, ஆப்பிரிக்க செமிட்டிக் மொழிகள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. பிற்காலத்தில், செங்கடலை கறுப்பின ஆப்பிரிக்காவின் எல்லையாக வகுப்பதற்காக, மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய பிழையான படம் ஒன்று காட்டப் பட்டது. இன்றைக்கும் நாங்கள் அந்த பிழையான உலக வரைபடத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம், அரபி, ஹீபுரு, அரமிக் மொழிகளை பேசும் மக்கள் "வெள்ளை இனத்தவர்கள்" என்ற இனவாதக் கருத்துகளை பரப்புவதாகும். ஆனால், ஒரு காலத்தில், இவை எல்லாம் கறுப்பின மக்களின் மொழிகளாக இருந்துள்ளன. இந்திய உபகண்டத்திற்குள் வெள்ளை நிற ஆரியர்கள் நுழைந்த அதே காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளையும் ஆக்கிரமித்தார்கள். இந்திய ஆரியர்கள், திராவிடர்களின் பிராமி மொழியை தமதாக்கி, சமஸ்கிருதம் என்ற புதிய மொழியை உருவாக்கினார்கள். அதே போன்று, அரேபிய தீபகற்பத்திற்குள் நுழைந்த வெள்ளைநிற ஆரியர்கள், உள்ளூர் மக்கள் பேசிய, ஹீபுரு, அரபி, அராமி ஆகிய மொழிகளை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர். பின்னர், அந்த மொழிகளை செழுமைப் படுத்தி வளர்த்தெடுத்தார்கள்.
எத்தியோப்பியா/எரித்திரியாவில் பேசப்படும் அம்ஹாரி மொழி, சோமாலி மொழி என்பன, செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தவை தான். ஆனால், அவர்களின் மொழிகள் பிற்காலத்தில், ஹீபுரு, அரபி மொழிகளின் செல்வாக்குக்கு உட்பட்டது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், யூத மதமும், கிறிஸ்தவ மதமும் அபிசீனியாவில் (இன்றைய எத்தியோப்பியா) பரவின. சில நூறாண்டுகளுக்குப் பின்னர் இஸ்லாமிய மதம், எத்தியோப்பியாவிலும், சோமாலியாவிலும் பரவியது. அதனால், அந்தப் பிராந்திய மக்கள் புதிய நாகரீகங்களை பின்பற்றத் தொடங்கினார்கள். அவர்கள் பேசிய மொழிகளும் மாற்றமடைந்தன. கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைப் பேசும் மக்கள், சம்ஸ்கிருத தாக்கத்தின் காரணமாக, தமது மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து உருவான கிளை மொழிகள் என்று நினைத்துக் கொள்கின்றனர். அதாவது, பிற்காலத்தில் உருவான மதங்களின் பாதிப்பு காரணமாக, மக்கள் தமது பூர்வீகத்தையே மறந்து விடுகின்றனர். எந்த மதமும், தான் ஆதிக்கம் செலுத்தும் மக்கள் திரளை நூறு சதவீதம் மாற்றுவதில் வெற்றி பெறவில்லை. எங்காவது ஒரு மூலையில், சில ஆயிரம் பேராவது பழைய மத நம்பிக்கைகளை பின்பற்றுவார்கள். அந்த நூலிழையை பிடித்துச் சென்று தான், நாம் அந்த மக்களின் வேர்களைத் தேட முடியும்.
தமிழர்களின், அதாவது ஆதி திராவிடர்களின் தாயகமான, வட-கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்கள், மத நம்பிக்கையிலும் வளர்ச்சியடைந்த தத்துவத்தைக் கொண்டிருந்தனர். யூதர்களின் தீர்க்கதரிசி மோசஸ் யூத மதத்தை தோற்றுவிக்கும் முன்னர், உலகில் எங்குமே ஓரிறை வழிபாடு இருக்கவில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மூன்றும், "ஒரே கடவுள்" கொள்கையை பின்பற்றுவதாக மார்தட்டிக் கொள்கின்றன. ஆனால், உலக வரலாற்றில் இந்த மூன்று மதங்களும் தோன்றுவதற்கு முன்னரே, ஆப்பிரிக்காவில் ஒரே கடவுளை வழிபடும் மதங்கள் இருந்துள்ளன. இப்பொழுதும் இருக்கிறது. மோசஸ் யார்? எகிப்திய பரோ மன்னனின் அரண்மனையில் வளர்ந்த, ஒரு கறுப்பின தீர்க்கதரிசி அல்லவா? "கடவுள்" என்ற தமிழ்ச் சொல் எங்கே தோன்றியது? அது ஒரு ஆப்பிரிக்க கடவுளின் பெயரா?
No comments:
Post a Comment