அவன் அந்த அறையில் நடந்து கொண்டிருந்தான். அந்த அறையில் அவன் மட்டும் இருந்தான். ஒளி குறைவாக இருந்தது. அங்கிருந்த கட்டிலில் ஒரு தலையணை மட்டும் இருந்தது. அங்கிருந்த கடிகாரம் சரியாக 12 முறை அடித்தது. மேலிருந்த பேன் ஓட வில்லை, இருந்தும் அவனுக்கு வேர்க்கவில்லை. பேய்க்கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனிடம் மேலோங்கியது. தரையில் ஒரு படம் வரையப்பட்டிருந்தது. அருகில் வெறுமையான மருந்துப்புட்டி மட்டும் இருந்தது. அறையை கழுவி ஒரு வாரம் இருக்கலாம். திடீரென்று அவன் முகம் பிரகாசமானது. அங்கிருந்த மேசையில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். வாரம் ஏழு லட்சம் பிரதி வெளியாகும் ஒரு வாரப்பத்திரிக்கை அவன் அருகே காற்றில் ஆடியது. காற்று அந்த பத்திரிக்கையின் ஒரு பக்கத்தை மட்டும் படிக்க தன்னை தானே நிறுத்தி கொண்டது. அந்த பக்கத்தில் ஒரு புத்தகத்தின் விமர்சனம் இருந்தது,
"எழுத்தாளர் ஜீவ ராகவன் பேய்க்கதை எழுதுவதை நிறுத்திவிட்டு பழையபடி ஆன்மிகக்கதை எழுதலாம். " அவனது கண்கள் எதேச்சையாக அந்த பக்கத்தை பார்த்து சிவந்தது. அந்த பத்திரிக்கையை அறையின் மூலையில் எறிந்தான். தான் எழுதவதை தொடர்ந்தான். சரியாக அவன் எழுத எடுத்துக்கொண்ட நேரம் 23 மணி நேரம், 56 நிமிடங்கள், 35 விநாடிகள். முடித்த பொழுது அவனது உடலில் எல்லா பாகங்களும் சந்தோஷத்தில் திளைத்தன. பெருமூச்சு விட்டான்.
அவன் தூக்கி எறிந்த, போன வார பத்திரிக்கையின் கீழே இந்த வார பத்திரிக்கை இருந்தது. அதன் அட்டைப்படத்தில் ஒரு செய்தி வந்து இருந்தது. "எழுத்தாளர் ஜீவராகவன் தற்கொலை."
இரண்டு நாள் கழித்து அந்த வாரப்பத்திரிக்கையின் அலுவலகத்தில்,
"என்னையா??? ஏன் இப்படி நடுங்குற???"
"சார், ஒரு வாரத்துக்கு முன்னால் இறந்து போன ஜீவராகவன் அட்ரஸிலிருந்து ஒரு பேய்க்கதை வந்து இருக்கு சார். ஷ்டாம்ப் ஒட்டலை. இரண்டு நாள் முன்னால் அனுப்ப பட்டிருக்கு."
"யோவ், புதுசா எழுதுபவன் தான் கதை ப்ரசுரிக்கப்படணும்னு அந்த அட்ரஷ் போட்டு அனுப்பி இருப்பான்."
"சார், அவர் கையெழுத்து இருக்கு...."
"அப்படியா!! சரி, விடு. அவர் கடைசியா அனுப்பி இருப்பாரு. படித்து பார். நல்லா இருந்தால், அவர் கடைசி கதை என்று பிரசுரம் பண்ணிடலாம்."
அந்த நேரம், அந்த அறையில் இருந்து ஒரு ஆனந்த கூச்சல், யார் காதிலும் கேட்காமல் ஒலித்தது. சற்று நேரத்தில் அந்த அறையில் இருந்து ஒரு வௌவால் சிறகடித்து பறந்தது.
No comments:
Post a Comment