Wednesday, 1 April 2015

கடவுள் எங்கே இருக்கின்றார்?

"அறிவொன் றறிநின் றறிவார் அறிவில்
பிறிவொன் றறநின்ற பிரானலையொ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டறும்வே லவனே." - கந்தரநுபூதி

"அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
அடியா ரிடைஞ்சல் தளைவோனே" - திருப்புகழ் 

கடவுள் இருக்கின்றாரா என்பது பலருக்கு ஐயப்பாடு. இருந்தால் அவர் எங்கே இருக்கின்றார் என்பதிலும் ஐயம். 

அவர் என்ன வடிவில் இருக்கின்றார் என்பதிலும் ஐயம்.

சில பொருள்களைக் கண்ணால் காணமுடியாது. காணமுடியாமையால் அப்பொருள் இல்லை யென்று கூறுவது அறிவுடமையாகாது. 



மலரில் மணம் இருக்கின்றது. அந்த மணத்தைக் கண்ணால் காண முடியாதல்லவா? ஒருவன், இம்மலரில் மணம் இருக்கின்றதா என்று முப்பது ஆண்டுகளாகக் கண்ணால் உற்றுப் பார்த்தேன். பூதக் கண்ணாடி வைத்தும் பார்த்தேன். வாசனை இருந்தால் என் கண்ணுக்குத் தெரியாதா? ஆகவே இம்மலரில் வாசனை இல்லை என்று முடிவு கட்டினான். 

அப்படி முடிவு கட்டிய மேதாவிக்கு மூக்கில் சதை வளர்ந்திருந்தது. காற்று வாய் வழியாக வந்து போய்க் கொண்டிருந்தது. அவன் மலரின் மணத்தைக் கண்ணாலன்றி வேறு எதனால் அறியத் தலைப்படுவான்? அவனைப் போலவே மூக்கில் சதை வளர்ந்தவர்கள் ஊருக்கு நான்கு பேர் ஒன்றுகூடி மலரில் மணம் இல்லையென்று தீர்மானம் செய்தால், அதை நல்ல மூக்குள்ள ஒருவன் ஒப்புக் கொள்வானா என்பதைச் சிந்தியுங்கள்.

மலரின் மணத்தை நாசியினால் அறிதல் வேண்டும். ஒரு செய்யுளில் பொதிந்து கிடக்கும் கருத்தை அறிவினால் அறிதல் வேண்டும். இனிக் கடவுளை மெய்யறிவினால் அறிதல் வேண்டும். மெய்யறிவு என்பது நூல்களைப் படிப்பதனால் வரும் கலையறிவு அன்று. நூலறிவால் வாலறிவனாகிய இறைவனை அறிய முடியாது. மெய்யறிவு என்பது அநுபவத்தில் விளைவது. சுட்டியறிகின்ற உலக அறிவு முழுவதும் அற்றுப்போன இடத்திலே அநுபவ அறிவு தலைப்படும். அந்த அளவில் அறிவுக்கறிவான இறைவனுடைய அருட்காட்சி தோன்றும். இதனை அநுபவ ஞானியாகிய அருணகிரிநாத சுவாமிகள் கந்தரநுபூதியில் இனிமையாகவும் அழகாகவும் கூறுகின்றார் 

No comments:

Post a Comment