குஜராத் மாநில பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோலியாக் கடற்கரையில் இருந்து மூன்று கி.மீட்டர் தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் உள்ள சிவாலயம்தான் உலகின் அறிவியல் மேதைகளுக்கு சவால்விடும் ஆன்மிக தலமாக உள்ளது.
கோலியாக் கடலில் உள்ள நிஷ்காலங்க் மகாதேவர் கோயில் இரவில் அலைகள் ஆர்ப்பரிக்கும் ஒரு சமுத்திரம். ஆனால், சூரிய உதயத்தில் இந்தக் கடல் குளம் போல் வற்றி, நிஷ்க லிங்கேஸ்வர் கோயிலுக்கு செல்லும் பாதையாக மாறிவிடுகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இங்கு வழிபட்டால், புண்ணியம் அதிகம் என்பது ஐதீகம். ஆனால், இந்த இரண்டு நாட்களிலும் அலைகளின் வேகம் அதிகமாக இருக்கும்
சிவனை தரிசிக்க செல்லும் ஆர்வத்தில், கோலியாக் கடற்கரையில் குவியும் பக்தர்கள் அலைகளின் வேகம் தணிந்து, வழி உருவான பின்னர் நடந்து சென்று சிவனை தரிசித்து வருகின்றனர். இந்த நிஷ்காலங்க் மகாதேவர்
கோயிலில் ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. இதனால், இங்கு செல்லும் பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான சிவலிங்கத்தை பூஜை செய்து, அருள் பெறுவது உண்டு.
ஆர்ப்பரிக்கும் அலை கடலுக்குள் நிஷ்காலங்க் மகாதேவர் கோயில் உருவானது குறித்து பாவ்நகர் மக்கள் கூறும் தகவல் இது...-மகாபாரதப் போர் பாண்டவர்கள், கவுரவர்கள் இடையே தீவிரம் அடைந்தது. இந்தப் போரில் கிருஷ்ணன் உதவியால் கவுரவர்களை பாண்டவர்கள் அழித்தனர். பங்காளிகளைக் கொன்ற பாவம் பாண்டவர்களை வாட்டி வதைத்தது. இதுகுறித்து கிருஷ்ணனிடம் கூறி, தங்கள் பாவ விமோசனத்துக்கு வழி கூறும்படி வேண்டினர். தன்னை நாடி வந்த பாண்டவர்களிடம் ஒரு கறுப்பு நிற கொடியையும், கறுப்பு நிற பசுவையும் கொடுத்த கிருஷ்ணன், ”பாண்டவர்களே... நீங்கள் கால் நடையாக நடந்து செல்ல வேண்டும். எந்த இடத்தில் இந்த கறுப்பு கொடியும், கறுப்பு பசுவும் வெண்மை நிறமாக மாறுகிறதோ, அந்த இடத்தில் நீங்கள் சிவனை நினைத்து தவம் செய்ய வேண்டும். சிவபெருமான் உங்கள் தவத்துக்கு மெச்சி அருள் செய்வார். அப்போது உங்கள் பாவங்கள் மறையும்" என்றார்.
கிருஷ்ணன் கொடுத்த கொடி மற்றும் பசுவுடன் நடக்கத் தொடங்கிய பாண்டவர்கள், ஊர் ஊராக, காடு மலையாக சுற்றினர். ஆனால், எந்த ஒரு இடத்திலும் அவர்களது கொடி நிறம் மாறவில்லை. இதனால் அவர்கள் சோர்வடைந்தனர். ஆனால், பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் மட்டும் கொஞ்சம் நம்பிக்கை கொண்டிருந்தார்."இன்னும் சில மைல்கள் நடப்போம்" என்று கூறினார். அண்ணன் சொல்லை தட்ட முடியாத பீமன், அர்ஜூனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் தொடர்ந்து நடந்தனர்.
பாண்டவர்கள் அனைவரும் கோலியாக் நகர் கடற்கரை பகுதியில் வந்ததும் அவர்கள் கையில் இருந்த கறுப்பு கொடியும், அவர்கள் அழைத்து வந்த கறுப்பு நிற பசுவும் வெண்மை நிறத்துக்கு மாறியது. இதனால், உற்சாகம் அடைந்த பாண்டவர்கள், அதே இடத்தில் சிவனை நினைத்து தவம் செய்யத் தொடங்கினர். பல ஆண்டுகள் கடுமையான தவம் செய்தனர்.
பாண்டவர்களின் தவத்தால் மனம் மகிழ்ந்த சிவன், அவர்கள் முன் ஐந்து சிவலிங்கங்களாக பிரசன்னமானார். இதனால், மகிழ்ச்சியடைந்த பாண்டவர்கள் தங்களுக்கு முன்னர் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை பய பக்தியுடன் வழிபட்டனர். சிவ வழிபாட்டால் அவர்களது பாவம் மறைந்தது. பாண்டவர்கள் புனிதமானார்கள்.
பாண்டவர்களுக்கு தரிசனம் கொடுப்பதற்காக அங்கே சுயம்புவாக தோன்றிய சிவன், ஐந்து லிங்கங்களாக அதே இடத்தில் கோயில் கொண்டார். ஆரம்ப காலத்தில் கடற்கரையாக இருந்த சிவலிங்கங்கள் இருந்த இடம் காலப் போக்கில் கடல் சூழ்ந்த இடமானது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆடி அமாவாசை நாளில் திருவிழா நடைபெறுகிறது.
ஒரு முறை விழாவுக்காக கொடியேற்றினால், அடுத்த திருவிழா வரை அந்தக் கொடி இறக்கப்படாது. கொடி பறந்து கொண்டே இருக்கும். இந்தக் கொடி பாவ்நகர் மகாராஜா சார்பில் வழங்கப்படும். இந்தக் கொடி சிவன்கோயிலில் உள்ள முப்பது அடி உயர கொடிக் கம்பத்தில், புனித பூஜைகளுக்கு பின்னர் ஏற்றப்படும்.
இந்தக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தேங்காய், பழங்கள் படைத்து, பல வண்ண பூக்களை சிவ லிங்கங்களுக்கு சாற்றி வழிபடுகின்றனர். ஐந்து சிவலிங்கங்களும் வெவ்வெறு இடங்களில் உள்ளன. ஒவ்வொரு சிவலிங்கத்தின் முன்னரும் ஒரு நந்தி சிலை உள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தொட்டியில் உள்ள நீரில் கை, கால்களை கழுவிய பின்னரே சிவனை தரிசிக்கச் செல்கின்றனர்.
நிஷ்காலங்க் மகாதேவர் கோயிலில் உள்ள கடல் பகுதியில் தங்கள் முன்னோர்களின் அஸ்தியை கரைத்தால், அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால், இங்குள்ள கடலில் முன்னோர்களின் அஸ்தியை கரைப்பவர்கள் அதிகம். அதேபோல், இந்தக் கோயிலில் உள்ள கொடி கம்பம் எப்போது நடப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடல் நீரால் இந்தக் கொடி கம்பம் இதுவரை சேதம் அடைந்ததே இல்லை. கடும் புயல், கடுமையான சீற்றத்துடன் கூடிய அலைகள் இந்தக் கம்பத்தை அசைத்தது இல்லை. அதே போல், இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. பின்னே, அறிவியலுக்கே சவால் விடும் இந்த அற்புத கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு யாருக்குத்தான் மனம் இருக்காது
வாழ்நாளில் நாமும் ஒருமுறை நிஷ்காலங்க் மகாதேவர் கோயிலுக்கு சென்று வரலாம்
வாழ்நாளில் நாமும் ஒருமுறை நிஷ்காலங்க் மகாதேவர் கோயிலுக்கு சென்று வரலாம்
#எப்படிசெல்வது?
No comments:
Post a Comment