Wednesday 1 April 2015

வாழ்க்கையினை எளிமையாக எடுத்துக்கொள்ள ஆறு வழிகள்

வாழ்க்கை வாழ்வதற்கே கஷ்டம் என்று புலம்புபவரா நீங்கள்? அப்படியானால் முதலில் இந்தக் கட்டுரையினைப் படியுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தினையும் அனுபவித்து வாழுங்கள். தினமும் நீங்கள் பல லட்சக்கணக்கான தடைகளைத் தாண்டலாம், அந்த தடைகள் உங்கள் வாழ்க்கையின் மீதான வெறுப்பினை ஏற்படுத்தும். இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கோணங்களில் வெறுப்புக்கள் ஏற்படுகின்றன. மெதுவாக இருக்கும் இணையத் தொடர்பு, நத்தை போன்று மெதுவாக வண்டி ஓட்டும் ஓட்டுனர், எந்த ஆடையினை நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வது போன்ற சின்ன சின்ன விஷயங்களில்கூட நமக்கு எரிச்சல் ஏற்படுகின்றன. இவையெல்லாம் மிகவும் சாதாரணமானவை என்று நாம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். இந்த வெறுப்பு அதிகமாகும்போது கோபத்தில் நாம் பயன்படுத்தும் கணினியினை உடைக்கலாம், காரினை தாறுமாறாக சாலையில் ஓட்டிச்செல்லலாம். இவற்றிற்கெல்லாம் நீங்கள் உட்படும் முன்பு வாழ்க்கையினைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாம் வாழும்
வாழ்க்கை அவ்வளவு கஷ்டமானதா? அதனை எப்படி எளிமையானதாக மாற்றுவது என்று சிந்தியுங்கள். இந்த சிந்தனைகளுக்கு உதவுவதற்கான ஆறு வழிகள்தான் இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
  1. இந்த உலகமே மோசமானது

நாம் வாழும் இன்றைய உலகம் மிகவும் மோசமானது. இன்னும் தெளிவாகச் சொன்னால் நமது நாகரீகம் மோசமானது. வாழ்க்கையினை எளிமையாக ரசிப்பதை விட்டுவிட்டு நாகரீகம் என்ற பெயரில் மற்றவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மன அழுத்தங்களைக் கொடுக்கிறது. அடுத்தமுறை நீங்கள் ஒரு அணிவகுப்பு அல்லது இயற்கை காட்சியினை பார்க்கும்போது, எத்தனை பேர் இயற்கையின் வனப்பினைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார்கள் என்று நன்றாக உற்று கவனியுங்கள். ஏதாவது ஒருசிலர் மட்டுமே இருப்பார்கள். காரணம் இதுபோன்ற செயல்களின்போது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை வகுத்து அவர்களின் இயற்கையான வாழ்வினைத் தடுக்கிறார்கள். நமது விருப்பத்திற்குத் தகுந்தாற்போல் உடையணிவது போன்ற பல விஷயங்களைச் செய்து பாருங்கள் உங்களிடம் மகிழ்ச்சி தானாக வரும்.
  1. உறவுகளின் மதிப்பு

மீண்டும் மீண்டும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோதிலும் மனிதனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியினைக் கொடுப்பது உறவுகள்தான் என்று தெரியவந்துள்ளது. பணம் மட்டும் முக்கியமல்ல, பணத்திற்கும் மேலாக உறவுகளும் வாழ்க்கையில் அவசியம் வேண்டும். பணத்தின் மதிப்பினை மட்டுமே உயர்ந்ததாக எண்ணுவதை ஒதுக்கிவைத்துவிட்டு உறவுகள் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை எண்ணிப்பாருங்கள். அதுபோன்ற நேரங்களில் உங்களில் அதிகப்படியான வேலைநேரம் பற்றிய மனக்குறை என்றுமே வராது. சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது உங்களிடம் எந்தெந்த வேலைகளைப் பார்த்தீர்கள் என்ற கேள்விக்குப் பதிலாக நண்பர்களுடனும் உறவினர்களுடனும் எங்கெல்லாம் சென்றீர்கள்? எப்படி மகிழ்ச்சியடைந்தீர்கள்? சுற்றுலா தளங்கள்? கல்யாண அனுபவங்கள் எப்படி இருந்தது? என்பது போன்ற கேள்விகள் நிரம்பியிருக்கும். அதனால் வாழ்க்கையில் பணத்தினைவிட உறவுகளுக்கு சற்று அதிகமான மதிப்பினைக் கொடுங்கள்.
  1. பணக்காரனாக இருப்பதால் மட்டும் மகிழ்ச்சி வராது

நண்பர்களுடனும், உறவுகளுடனும் அதிகப்படியாக நேரம் செலவழித்தால் கண்டிப்பாக உங்களின் பண வரவில் குறைவு ஏற்படும். அதற்காக வருத்தப்படாதீர்கள். ஏனெனில் பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. உண்மையில் உங்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் அளவிற்கு உங்களிடம் பணம் இருந்தாலே மகிழ்ச்சி கிடைத்துவிடும். அதுபோல உங்களிடம் இருக்கும் அதிகப்படியான பணத்தினை சமூகத் தொண்டுகளுக்குப் பயன்படுத்தினால் உங்களைப் பற்றிய எண்ணங்கள் உயர்வாகும். இது மற்றவர்களுக்காகச் செய்யாவிட்டாலும், உங்களின் மன ஆறுதலுக்காகவாவது செய்யுங்கள்.
  1. கவலைப்பட்டால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது

வாழ்க்கையினை எளிமையாக எடுத்துக்கொள்ள இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், நம்மிடம் கவலைகள் கண்டிப்பாக நிறைந்திருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு புதிய நகரத்திற்கு செல்கிறீர்கள். அங்கு எங்கு செல்லவேண்டும்? எப்படி செல்ல வேண்டும்? என்று ஒன்றுமே புரியாமல் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்? சாலையின் மத்தியில் நின்று கதறி அழவேண்டும் என்பதுபோல் தோன்றும். ஆனால் இதுபோன்ற காட்சிகளை மற்றவரிடமோ அல்லது திரைப்படங்களிலோ பார்க்கும்போது நமக்கு சிரிப்புதான் வரும். அதைப்போல உங்களையும் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். நாம் எங்கு தொலைந்துபோனாலும் அதில் நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் வையுங்கள். அப்போது வாழ்க்கை கஷ்டமாக இல்லாமல் மகிழ்ச்சியாக மாறிவிடும்.
  1. உங்களிடம் நேரம் குறைவாகவே உள்ளது

கவலைப்பட்டாலும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது மற்றும் பணத்தினைச் சேர்த்தாலும் மகிழ்ச்சி கிடைக்காது என்பது தெளிவாக தெரிந்துவிட்டால் அவற்றில் ஏன் தேவையில்லாமல் உங்களின் நேரத்தினை வீணடிக்க வேண்டும். நீங்கள் 90 வயது வாழ்வீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். அப்படியிருந்தால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது வெறும் 800,000 மணிநேரங்கள் கொண்ட விளையாட்டு மட்டுமே. அதில் மூன்றில் ஒரு பங்கு நேரம் நமது தூக்கத்திலேயே முடிந்துவிடுகிறது. மீதமுள்ள நேரத்தினை மகிழ்ச்சியாகக் கழிக்க முயற்சி செய்யுங்கள், அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பதை மறந்துவிடுங்கள்.
  1. நீங்கள் ஒரு புள்ளி போன்றவர்தான்

ஒரு பிரச்சினையில் இருக்கும்போது நீங்கள் மிகப்பெரிய துன்பத்தில் இருப்பதுபோல உணர்வீர்கள். அப்போது கொஞ்சம் வானத்தினைப் பாருங்கள். லட்சக்கணக்கில் நட்சத்திரங்கள் தென்படும். இந்த பிரபஞ்சத்தில் நமது உலகம் எங்கோ ஓர் மூலையில் மிகவும் சிறியதாக உள்ளது. அந்தச் சிறிய உலகில் நமது நாடு எங்கோ ஓர் இடத்தில் மிகவும் சிறியதாக உள்ளது. இவற்றுடன் எல்லாம் ஒப்பிடும்போது நீங்கள் ஒரு சிறிய புள்ளி அளவுதான் நீங்கள் இருக்கிறீர்கள். மொத்த பிரபஞ்சத்தினை எடுத்துக்கொள்ளும்போது நம்மை ஒரு உயிராகக்கூட கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அப்படியிருக்கும்போது நாம் ஏன் மற்றவர்களையோ, நம்மையோ பற்றிக் கவலைப்பட வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் உங்களைப் பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் உங்களின் வாழ்க்கை மிகவும் எளிமையானதாக மாறும்.

No comments:

Post a Comment